என்னை தேடினேன்

பெற்றவளே அடித்து திட்டினாலும்
"அம்மா" என்றே அவளை
அணைத்து அழுகின்ற குழந்தையின்
மனம் தேடினேன்

பட்டாம்பூச்சியை தூர தேசம்வரை
துரத்தி தோற்றும் வெறுக்காது
வெகுளியாய் சிரித்து திரும்பும்
வீரம் தேடினேன்

பூக்களின் மெல்லிய மலர்ச்சியை
சுவாசத்தில் உணர்ந்து அதை
பறிக்க நடுங்கி தயங்கிடும்
விரல்கள் தேடினேன்

எட்டா உயரத்தில் விலகியிருந்தாலும்
பிற உயிர்களுக்கு உபயோகமாய்
அழுது தீர்க்கும் வானின்
விழிகள் தேடினேன்

சுட்டெரிக்கும் என்பதை அறிந்தும்
சூரியனின் பிம்பத்தை தன்மீது
தாங்கிடும் பனித்துளியின் இதமான
பாரம் தேடினேன்

மொழிகளற்ற யுக உரையாடல்களில்
பொருளற்ற பல வார்த்தைகளின்
ஓர் அர்த்தமுள்ள பிழையாய்
காதல் தேடினேன்

தேடல் எதுவும் கிடைக்கவில்லை
கிடைத்தது எதிலும் திருப்தியில்லை
இடறி விழுந்த இடங்களிலெல்லாம்
இழந்ததே அதிகம் என்னையும்தான்

காரணங்களோடு தொடங்கிய தேடல்களில்
முதல் நாள் பயணத்தில்
ஓர் நொடியில் தொலைத்த
என்னை தேடினேன்
இனி.....
என்னை தேடினேன்

எழுதியவர் : மணிமேகலை (19-Oct-14, 7:16 pm)
Tanglish : ennai thedinen
பார்வை : 324

மேலே