உணர்வுகளின் ஊர்வலம்
மனிதம் என்னும்
அழுக்குப்பிறவி!
பிறவியில்
சிறந்ததென்று
பெரியோர்கள் சொன்னதெல்லாம்
பொய்யின் வரியாய்
போனதிப்போ.
உலகின்
எல்லாப் படைப்புகளும்
உணர்வின் ஊர்வலமே!
ஆவும் மாவும்
அப்படியே இருக்கிறது.
துப்பாக்கி ஏந்தத்தெரியாத
பறவையின் எச்சம்
நம் இதயத்தை
அசிங்கப்படுத்துவது
நமக்கே இன்னும் தெரியவில்லை.
அரிவாள் ஏந்தத் தெரிந்தால்
ஆயிரம் ஆயிரம் கொலைகளை
வீட்டு நாய்களே
செய்திருக்கும்
எஜமானர்களை கொன்று...
பேதைமை தெரியாத
ஆட்டின் புழுக்கையை
உரமாக இடும்
மனிதக்கழிவே!
நீ வெட்கப்படு...
பணத்தின்,
சாதியின்,
மதத்தின்,
மொழியின்,
நாட்டின்,
இடத்தின் பெயரால்
நீ செய்த கொடுமையின்
அளவு பிரபஞ்சமும் வழியும்.
உயிர்வலி என்பது
உனக்கு மட்டும்தான்
மற்றவருக்கு இல்லை
என்பது உன் மகாதத்துவம்.
இறந்த ஒருகாகத்தின்
துக்கத்தை
வட்டமிட்டு கத்தி கத்தியே
அழுது புலம்பும்
காகத்தினும் கீழ்தான்
நம் மனிதஇனம்.
வெட்டினால் அழும்
மரத்தின் நிழலில்
வாழும் நமக்கு
வீதியெங்கும்
வெப்பத்தை
அறுவடை செய்யத்தான்
அறிவிருக்கிறது.
ஆறாம் அறிவின்
வளர்ச்சியில்
மனிதம்
மண்டைஓடுகளால்
நிறைந்திருக்கிறது.
உணர்வு என்பது
பணப் புழக்கத்தின்
அளவைப் பொறுத்ததாக
மாறிப்போனது.
பணக்காரனுக்கும்
உயர்ந்த சாதியில்
பிறந்தவனுக்கும்தான்
வலிக்கும்.
எழைக்கு அடிபடுவதைத்
தவிர வேறொன்றும்
தெரியாது.
பிறவியில் சிறந்தது
மனிதனென்பது
அவ்வைவாக்கு.
பிறவிக் கழிவாய்
ஆனதிப்போ மனித இனம்.
காரணம்...
உணர்வு என்பது
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்துகொண்டிருக்கிறது.
சு.விமல்ராஜ்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
ஏ.வி.சி.கல்லூரி,
மன்னம்பந்தல்,
மயிலாடுதுறை.