இது மழைக்காலம்

வானை நேர் பார்த்து
காதல் நீர் கோர்த்து
புணராமலே உருவான
புவியின் கரு!
மழையென்று உதிரும் போது
மண்ணோடு மணக்கிறது மனம்!..
மருதாணிக் காய்களோடு- மழை
நீர்க் காய்கள் தொங்கும் போது
மழலையாகி விரல் நீள்கிறதே…
எத்தனை அழகு!..
கோரைக் கிழங்குகள்
குளித்தெழும் போது
இலைகள் முளைக்கிறதே
என்ன அதிசயம்!...
மீசை முளைத்த ரயில் பூச்சிகள்
எங்கிருந்தன இத்தனை நாள்?
மழை வாசம் பட்டதும்
துதிகளுடன் துவக்கிவிட்டன
புகையில்லா பயணத்தை!...
நிலத்தில் நீ போடும் கோலம்
நிலைக்காமல் மறைந்தோடிப் போகுதே..
எதைச் சொல்ல முற்படுகிறாய்?
எல்லாம் மாறிப்போகுமென்றா?..
முகில் விட்ட வேகத்திலே-மண்ணை
முத்தமிட்டு புரல்வதுபோல்
கட்டிலின் மேல் யுத்தம் பல
மூள்கிறதே உன் வரவால்...
வித்தைக்காரி நீ தான் – அதில்
வீழாதோர் யார்தான்?..
எல்லா உயிர்களும் போல்
இன்பத்தில் குளிக்(ர்)கிறேன்
இரவை யாசித்து
பகலை வெறுக்கிறேன்...
ஏனென்றால்...
இது மழைக்காலம்!....