பெரிய அம்மானாலும் அம்மா தானே
கதவிடுக்கில் ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சி ஆடுகின்றான்
கன்னக்குழியில் கையைவைத்து
கிள்ளிவிட்டு ஓடுகின்றான்
அம்மா அம்மா என்று அவன்
குழறி குழறி பேசும் பொல்லாத பேச்சில்
இந்த பூலோகம் மறக்கின்றேன்
அவனுக்கு ஒரு வாய் நிலவுக்கு ஒரு வாய்
என்று சோறூட்டும்போது
நிலவென்னவோ என்னிடம்
கோபம் கொள்கிறது
இன்னும் எத்தனை வருடம்தான்
இப்படியே ஏமாற்றுவீர்கள் என்று
கிளம்பும் நேரத்தில் அவனுடைய அம்மா
பெரியம்மாவுக்கு டாட்டா காட்டு
என்று சொல்லும்போது
மனது கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது