அறிவியல் பூர்வமாய் காதலிக்கிறேன்

தேக மெலனின்களுக்கு
மோக நிறம் தந்தாயே
இது எப்படிச் சாத்தியம்?
உன் சர்வாதிகார சமிக்ஞைகளை கடைவிரிக்க
பரந்து விரிந்த இப் பாரத பூமியில்
ஒருபிரதேசம் கூடவா கிடைக்கவில்லை உனக்கு?
இதயச்சுவர்களில் இதனமான அழுத்தம் தொடுத்து
நீ மீள்வினே படிப்பது நியாயமா?
கண்ணசைவின் வெப்பச் சலனங்களை
ஹார்மோனுக்குள் தந்திரமாய் கடத்தி
டன் கணக்கில் கலோரி கரைக்கும்
உனக்கேன் கொடுக்கவில்லை நோபல்?
நவரசங்கள் என்பதெல்லாம்
சுத்தப் பொய்
உன் பாதரசச் சினுக்கலையும் சேர்த்து
ரசங்கள் மொத்தம் பத்து
அறை வெப்பநிலையில்
வேதிவினை நிகழ்த்தும் நீ மட்டும்
என்னில் எவ்வித மாற்றத்தையும்
நிகழ்த்தாமலிருந்தால்
சிறந்த வினை ஊடகம் நீ.
கத்திகளின்றி
இரத்தம் பார்க்காமல்
அறுவை சிகிச்சை செய்யும்
உன்னிலும் சிறந்த காந்தியவாதியை
எங்கே தேடுவேன் நான்?
மூளை நரம்பின் நியூரான்களிலிருந்து
மின்சாரம் எடுக்கும் நீ இருந்துமா
தமிழகத்தில் மின் பஞ்சம்
அறிவியலோடு நீ கற்பிக்கும்
அன்பியல் யுத்ததின்
உச்ச கட்ட ஆயூதம்
உச்சுக் கொட்டும் உன் உதடு