தாயின் அன்பு முத்தம்
கருவில் முளைத்த கண்ணீர் விதையே!
காலமெல்லாம் இனி தண்ணீர் பஞ்சமாம்
கனவிலும் கூட கானலே மிஞ்சுமாம்
இனி வேர்களுக்கு வேலையில்லை
உணவுக்கு வயலும் தேவையில்லை
உழவென்ற வார்த்தைக்கே அர்த்தமில்லை
காரணம்
முன்னோருக்கு நம்மேல் அக்கரையில்லை
வளர்ச்சியென்ற பாதையிலே
வருங்காலத்தை வதைத்தோரே!
செயற்கை தண்ணீருக்கு
செய்முறை விளக்கம் தந்தீரா?
காடுகழனி அழித்து
கல்லறைக்கு வழி அமைத்தீரா?
நெருப்பினை மூட்டி
நெகிழிகளாலே நேரம் குறித்தீரா?
இனி
மழையின் மேகமே நீ
மரணித்துப்போவாய்
கடலில்லா நிலமே நீ
கலையிழந்துபோவாய்
உலகமே நீ உருக்குலைந்துபோவாய்
நாங்கள் உருவமிழந்துபோவோம்
பூமித்தாயே! கண்ணீர் விடு
கடலளவு வேண்டாம்
கையளவு தண்ணீர் கொடு
கதிரவனே! வியர்வை சிந்து
தண்ணீருக்கு விலாசம் தந்து
என் இன்னொரு உயிரே!
எனக்குள்ளேயே பதுங்கிவிடு
அல்லது
தண்ணீரின்றி வாழ பயிற்சியெடு
தண்ணீரின் கடைசி சுவடு
என் பனிக்குடம் மட்டுமே!
அதுவும் உடைந்து விட்டதே
வரவேற்கிறேன் உன்னை
வற்றிப்போன வாழ்க்கைக்கு
கவலையுறாதே கருவறைக்கொடியே!
கானல் உலகின் கள்ளிச்செடியே!
கண்ணீரையும் பருகி
எனக்குள் உன்னைக் காத்துவிட்டேன்
மிச்சமிருக்கும் கண்ணீரால்
உன்
உச்சிமுகர்ந்து முத்தமிட்டேன்...
V.Seethaladevi
BCA 3rd year Swami Dayananda Arts&Science College
Manjakkudi Kodavasal(tk) Thiruvarur(dt)