தனிமைத்தாகம் வேண்டி - சந்தோஷ்

யாருமற்ற சாலையில்
ஏதுமற்ற உணர்வுகளோடு
நான் மட்டும்
அறிவியல் சாதனங்களின்றி
விஞ்ஞான வேஷமின்றி
கர்வத்தின் ஆடையை கிழித்தெறிந்து
அம்பணமாக அலையவேண்டும்...!

ஆம்
வேண்டும் ஒரு தனிமை..!


நான் வந்த பாதையெங்கும்
என் பாதச்சுவடுகளின்றி
என் மனகாயங்கள்
கவிதை பதியம்போட்டிருக்கலாம்.

யாரும் மிதத்தோ மதித்தோ
பதியத்தின் சின்னங்களை
தொந்தரவு செய்யாதீர்கள்.

யாரும் இரக்கப்பட்டோ நடித்தோ
என் கவிதையின் தடயத்தில்
கண்ணீரை சிந்தாதீர்கள்...!

நான் செல்லும்பாதையில்
என் நிஜங்கள் முகமூடியணிந்திருக்கும்.
என் பொய்கள் வெடித்திடதுணிந்திருக்கும்.

தனிமை பாதையில்
எங்கோ எனக்கு
மரணப்பாறை வீற்றிருக்கலாம்.
நான் அதில்
முட்டிமோதி சித்தம்தெளியலாம்.
இல்லையேல்
மரணத்திற்கு நான்
விடுகதைப்போட்டு
நிம்மதி விடுதலைப்பெறலாம்.

நான் செல்லும் பாதையில்
இடையூறு செய்யாதீர்கள்.
யாரும் ”அன்பு “ என்று
ரோஜாப்பூக்களை தூவாதீர்கள்...!
என் பாதத்தில்
உங்கள் பூக்களின்
முட்கள் குத்தி குத்தி -என்
மூளை பலவீனப்பட்டுவிட்டது.

போதும் போதும்
இனியேனும்..!
நான் நானாக
இருக்க வேண்டும்...!
எனக்குள்ளிருக்கும்
என்னை நான் தேடிக்கொள்கிறேனே...!



ஆம்
வேண்டும் ஒரு தனிமை..!



-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (29-Oct-14, 7:02 pm)
பார்வை : 244

மேலே