அண்ணனும் நண்பனும் ஆகினாய்
நாலைந்து சந்திப்பு
ஆனாலும் தித்திப்பு
படபடக்கும் உந்தமிழில்
பயந்தேநான் போனேனே !
சாத்தான் குளம்பற்றி
ஒன்றிரண்டு நானறிவேன்
சாத்தாத சுவரோடு
சார்ந்துநிற்கும் கோவில்பள்ளி!!
மக்களவர் ஒற்றுமையின்
மறைக்கொண்ணா ஒருசான்று
தெருஇரண்டாய் ஆனாலும்
தெவிட்டாத அன்போடு !
ஒட்டு வீடுகளை
ஓடியாடி உழைத்தவர்கள்
மாடி வீடுகளாய்
மாற்றிஇருக்கும் மகத்துவம்
அவ்வூரின் பின்னணியில்
அழகாக வளர்ந்தவனோ
எவ்வூரும் போற்றுகின்ற
இனியகவி ஆகிநிற்பான்
அனுபவத்தைப் பெறவேண்டும்
அனைவருக்கும் கல்லூரி!!
மனிதர்களின் சுதந்திரத்தின்
மகத்தான நல்லூரே...
ஊர்பெருமை அவ்வளவுதான்
போனதங்கு ஒருமுறைதான்
உன்பெருமை சொல்லிடவே
என்தமிழை அழைக்கின்றேன்
எத்தனை கிளைகலென்று
சரியாக தெரியவில்லை
அத்தனையும் உன்னறிவால்
இன்னுமின்னும் மின்னிடுமே
வெள்ளைசட்டை பெரும்பாலும்
விரும்பிநீ அணிவதினால்
வெள்ளைமனம் சொல்லிநிற்கும்
வேண்டாதன தள்ளிநிற்கும்!
தமிழ்மேலே நீகொண்ட
தப்பாத பற்றதுவும்
நிமிரவைக்கும் உந்தோற்றம்
நெருங்காது ஏமாற்றம் !
பட்டிமன்றம் வைக்கசொன்னாய்!
பக்கதுணையாய் வருதல்
நட்பா?..உறவா?...
நயமான தலைப்புத்தான்!
உனைப்போற்றி உன்பெருமை
உரக்கத்தான் நான்சொல்லி
எனைப்பாட வைப்பதெது?
உறவேதும் இருக்கிறதா?!..
நட்புறவே நமக்குள்ளே!
நாம்மகிழ முடியாதா?
கற்பெனவே இதைக்கொண்டு
கரைசேர முடியாதா ?
கைதட்டும் படம்போட்டு
கட்டைவிரல் தூக்கிடுமுன்
லைக்ஸ் எனக்கு போதாதா?!
லைப் முழுதும் கவிபாட ....
உணவுகளும் பலவகைதான்
உணவகங்கள் நடத்தும்முன்
கனவுகளும் பலவகைதான்
நாள்தோறும் ஈடேறும் !
பொறுமைநபி பெயருனக்கு
பொறுப்போடு தடைதாண்டு ..
அருமைஅண்ணன் அய்யூப்நீ
அடைந்திடுவாய் நூறாண்டு
நான்சொல்லும் கவிதையிது
நண்பன்நீ விரும்பிட்டால்
தேன்சுவையில் 'தே தாரேக்'
நீபோட்டு தரவேண்டும் ..
பிடிக்காது போய்விட்டால்
பிறகென்ன? தலைகீழ்தான் !!
நான்போடும் 'தே தாரேக்'
நீகுடித்து விழவேண்டும் !!!!
__________________________________________________
'தே தாரேக்' = தேநீரின் மலாய்மொழி சொல்