என் வட்டியும் முதலும்
வட்டியும் முதலும் படித்த பிறகு எனக்கு என் வாழ்வில் நிகழ்ந்த சில
நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன.. இவர்கள்தான் எனக்கான உலகம்
..ப்ரியங்களாலும் வார்த்தைகளாலும் நிரம்பிய என் உலகத்திலிருந்து
சில..
உனக்கு ஒருத்தியும் எனக்கு ஒருத்தனும் வந்ததுக்கு அப்பறமும் நம்ம நட்பு
அப்படியே இருக்கனும்டா என்கிற அந்த மனதுக்கு நெருக்கமான தோழியும்,டேய்
அண்ணா பிசியா இருக்கியா?மனசு கஷ்டமா இருக்குடா கொஞ்ச நேரம் பேசுறியா
என்று தொலைபேசும் அந்த கூட பிறவாத தங்கச்சியும்,எப்போது கே டிவியில்
ப்ரியமான தோழி படம் போட்டாலும் மறக்காமல் குறுந்தகவல் அனுப்புகின்ற என்
பிரியமான தோழியும்,டேய்! இந்த வாரமாவது சர்ச்சுக்கு போய்ட்டு வாடா என்று
கெஞ்சும் அந்த குழந்தை தோழியும்,எதுக்கும் வருத்தப்படாத கண்ணா! நான்
இருக்கேன்ல என்று அன்பில் ‘ராஜி’யம் செய்யும் அந்த அக்காவும்,என்னடா
இப்பிடி பேசிட்டேன்னு நினைக்காத மாப்ள உன் மேல இருக்கிற அக்கறைலதான்
சொல்றேன் என்கிற நண்பனும்,அடையாரில் அவ்வை இல்லம் வாசலில் மன்னிச்சுரு
மாமா என்று கட்டிப் பிடித்து அழுத அந்த நண்பனும், அன்புள்ள ப்ரியத்திற்கு
எனத் தொடங்கும் அந்த கடிதமும்,M45 ல் தொலைத்த அந்த உறவும்,தம்பி! நேத்து
நீ என் போன் நம்பர் வாங்குனேல.. நானும் நேத்து நைட் வர போன பாத்துட்டே
இருந்தேன் ஆனா நீ போன் பண்ணவே இல்ல என்று கலாய்க்கும் டீக்கடை அண்ணனும்,
,நேத்து நைட் 11.30 வர அந்த தெப்பக்குளத்துல உட்காந்து பேசிட்டு இருக்குற
வர ஒன்னுமே தோணலடா நண்பா..இப்ப இங்க சென்னைல பஸ்ல புட் போர்டுல
தொங்கிட்டு வேலைக்கு போறேன்னு நினைக்கிறப்ப கஷ்டமா இருக்குடா என்கிற
கவித்துவமான நண்பனும், சரவணப் பொய்கையில் மூழ்கி இறந்த அந்த நண்பனின்
இழப்பும்,பொள்ளாச்சி,செங்கல்பட்டு பக்கம் மழை பெஞ்சா நல்லாருக்கும் இங்க
சிட்டி பக்கம் பெஞ்சா ரோட்டோரத்துல படுத்துக் கிடக்கிற அந்த கிழவி இப்போ
எங்க போகும்னு வருத்தப்பட்ட அந்த இஸ்திரி கடை அண்ணனும்,22 வயசு ஆச்சு
எனக்கும் நீ எதுவும் சொல்லாத என்று கோபத்தில் அம்மாவிடம் கத்தியபோது கூட
உனக்கு எத்தன வயசானாலும் நீ என் செல்லம்டா என்று கொஞ்சிய
அம்மாவும்,மழையடித்த அந்த தி.நகர் இரவில் எத்தனை புன்னகைகள்,எத்தனை நம்பிக்கையான வார்த்தைகள் இருந்தன.. தூக்கம் பிடிக்காத அந்த நள்ளிரவில் ஹாஸ்டல் பால்கனியில் நின்று
எழுதிய தாகத்தோடு காத்திருக்கும் பறவை என்கிற கவிதையையும்,அந்த இரவில்
நாடோடிகள் பட எஃபெக்டில் அமைந்த அந்த ஸ்ரீபெரும்புதூர் பயணமும், டேய்
ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ற மாதிரி இருக்குனா கையெழுத்து போட உன்னதான்
கூப்பிடுவேன் என்று மிரட்டும் நண்பனின் காதலியும்,தரமணி..பெருங்களத்தூர்
டீக் கடை நினைவுகளும்,புதிய தலைமுறை,விகடன் என்று அலைந்த
தருணங்களும்,முந்தைய நாள் வேலை கிடைக்காத விரக்தியில் புலம்பிவிட்டு
மறுநாள் மச்சான்! நான் போரூர் ராமச்சந்திரால இருக்கேன்டா ரத்தம்
குடுத்துட்டேன் நீயும் B positive தான? ரத்தம் தேவைபடுது வாடா இங்க என்று
அழைத்த அந்த நண்பனும்,புதுசா கல்யாணமான அந்த அண்ணன் நைட் எங்ககிட்ட
பேசிட்டு இருக்கிறப்ப மச்சான் தெய்வீக ராகம் பாட்ட போன்ல போட்டதும் சரிடா
தம்பிங்களா நான் கிளம்புறேன் வீட்டுக்குனு சொன்னதும் ரைட்ணே ரைட்ணே என்று
கிண்டல் பண்ணியதும்,எங்க எல்லோருக்குமே எவர்கிரீன் செல்லமா இருக்கிற
சித்தப்புவும்,குற்றாலத்துல நண்பனோட அக்கா கல்யாணத்துக்கு முந்துன
நாள்..நமக்கு பிடிச்ச ஒருத்தர இந்த இடத்துல எதிர்பார்க்க முடியாது ஆனா
இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்னு பிரெண்டு ஃபீலிங்ல பொழம்புன அந்த
இரவையும்,மறைமலைநகர்..பூந்தமல்லி..அம்பத்தூர்னு வேல தேடி அம்மா மெஸ்ல
அஞ்சு ரூபாய்க்கு சாம்பார் சாதம் சாப்பிட்டே கழிந்த வேலையில்லாத
நாட்களும், நாங்கள் கஷ்டப்பட்டு எடுத்த ஒரு குறும்படம் கடைசிவரை எடிட் செய்யாமலே போன அனுபவமும் ,தி.நகரில் ஒரே ஒரு ரைம்ஸ் புத்தகம் வாங்கிக்கோங்கண்ணா என்று
பரிதாபமாக பார்த்த அந்த சிறுமியும்,அண்ணா நகரிலும் வள்ளுவர்
கோட்டத்திலும் கிடைத்த பெரிய நண்பர்களும்,திருப்பூரில் கவிதை பேசிய அந்த
ஆட்டோ ஓட்டும் அண்ணனும்,புகழேந்தி சாரும் ராமதாஸ் சாரும் கவிதா
டீச்சரும்,எத்தனை முறை சொன்னாலும் மறந்துவிட்டு எப்ப ஊருக்கு வந்தாலும்
தம்பி என்ன பண்றனு ஆசையா கேக்ற அந்த பாட்டியும்,25 வருசமா ஐஸ் வித்து மகள
இன்ஜினீயரிங் படிக்க வச்ச வேல்முருகன் அண்ணாச்சியின் உழைப்பையும்,அசோக்
நகரில் அந்த செருப்பு தைக்கும் 70வயது தாத்தா ‘நீரோடும் வைகையிலே
நின்றாடும் மீனே’ பாட்டை அவ்வளவு ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்ததும்,
நெய்வேலி செல்வதற்காக கிளம்பிய அந்த பேருந்தில் நடுநிசியில் ‘இதயம் ஒரு
கோவில்’ பாடல் போட வேண்டும் என்று மனதில் நினைத்த மறுகணமே அந்த பாட்டை
ஒலிபரப்பிய டிரைவர் அண்ணனையும்,ஒருமுறை மதுரை பேருந்தில் பிடித்த அந்த
இளையராஜா பாடலுக்காகவே இறங்க வேண்டிய இடத்தை விட்டு அடுத்த நிறுத்தத்தில்
இறங்கிக் கொண்டதும்,நல்லத யார் சொன்னாலும் கேட்டுக்கலாம்னு கிளம்பும்
போது கடைசியா பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துல கேட்ட அந்த வார்த்தையும்
இன்னும் எவ்வளவோ எவ்வளவோ எனக்கு நினைவில் அடித்துக் கொண்டேயிருக்கிறது..
ஒருமுறை மின்சார ரயிலில் சென்றுகொண்டிருந்த போது திருநங்கை ஒருவர்
எல்லோரிடமும் காசு கேட்டுக்கொண்டிருந்தார் அப்போது ஒருவர் மட்டும் காசு
கொடுக்காமல் இப்பிடி பிச்சை எடுத்து பொழைக்கிறீங்களே அசிங்கமா இல்லயா
என்று கேட்டார்..அதற்கு அந்த திருநங்கை ஆம்பள பொம்பளனு இட
ஒதுக்கீடு,அரசியல்னு என்னென்னமோ பேசுரீங்கள்ள உன் கம்பெனில எனக்கு ஒரு
வேல போட்டு குடு இனிமே நான் பிச்சை எடுக்கல என்று சொல்லியதும்
எல்லோருக்குமே திடுக்கென்றுதான் இருந்தது..அந்த ஆள் அதற்கு மேல் ஒன்றுமே
பேசவில்லை...இலங்கைப் பிரச்சனைக்காக முத்துக்குமார்,செங்கொடி
தீக்குளித்துக் கொண்டபோது ஏன் மாப்ள! இந்த
கருணாநிதி,ஜெயலலிதா,கமல்,ரஜினி,அஜித்,விஜய்லாம் அவங்கள பாக்க போகல??னு
என் நண்பனும் கேட்டானே..
மனதின் அபிப்ராயங்களை,வருத்தங்களை,அதை ஈடு
செய்யும் புன்னகைகளை,சக மனிதன் மீதான கரிசனத்தை,நமக்காக
இருப்பவர்களை,எல்லாவற்றையும் கடந்துபோகச் செய்யும்
தருணங்களை,மிச்சமிருக்கும் நம்பிக்கைகளை இன்னும் யார் யாருக்கோ நாம்
செய்ய வேண்டிய பிரார்த்தனைகளை எல்லாம் கற்றுக் கொடுத்தது இந்த “வட்டியும்
முதலும்”தான்..
இரண்டு வருடங்களுக்கு முன்பு நானும் என் நண்பனும் ராஜு முருகன் அண்ணனை
சந்தித்தபோது வாங்க தலைவா! என்று வரவேற்று அவர் வீட்டிற்கு அழைத்துச்
சென்று பேசிய அந்த வார்த்தைகள்தான் எங்களுக்கு இப்போதைக்குமான
நம்பிக்கையான வார்த்தைகள்..
மாறிக் கொண்டேயிருப்பது
உனக்கான உலகமும் எனக்கான உலகமும் மட்டும்தான்..
உனக்காகவும் எனக்காகவும்
அப்படியேதான் காத்துக்கொண்டிருக்கிறது
நமக்கான உலகம்...!!!
*** ஆனந்த் தமிழ்***