நிலத்தடி கண்ணீர்
(விற்கப்பட்ட நிலம் தனது விவசாயியை பார்த்து கேட்கும் கேள்வி)
ரகரகமாய் மருந்தடித்தாய்,
....ரணரணமாய் ஆனேனே ....!
வலிபொருத்து உணவளித்தேன் ,
....வயிறார உண்டாயே....!
பயிரிட முடியலனா ,
....பசியாத்த யாரிருக்கா ....!
உயிர்விட துணிந்தாயோ,
....உழ மறந்த கிழவனே...!
உள்ளமெல்லா பணத்தாச,
....உனக்கிருக்கோ யாருகண்டா...!
பள்ளமெல்லா தோண்டுறாங்க,
....பயந்துபோனேன் காப்பாத்து ...!
இந்த சதி தெரிஞ்சிருந்தா,
....இடுகாடாய் பொறந்திருப்பேன் ..!
கொள்ளிவைக்க ஞாயமுண்டு ,
....கொத்திதோண்ட அர்த்தமுண்டு...!
இட்ட பயிர் மொட்டுவிட்டா என்னத்
...தொட்டுத்தொட்டு முத்தமிடும்....!
தொட்ட துளிர சுட்டுப்புட்டா,
.......எங்கவந்து சத்தமிடும்.....!
வெற்றிடமா கெடந்தாலும்,
....முட்செடிய சுமந்திருப்பேன் ...!
கட்டிடமா மாறிப்போனா,
....மரத்தையெல்லா யார்சுமப்பா..?
செவ்வாய் கிரகத்திலே ,
...நிலமிருக்காம் நீரிருக்காம் ...!
அங்கயாச்சு மிச்சம் வை ,
....அடுத்த ஜென்மம் நான்பொறக்க....!