மூங்கில் கணுக் கண்களுள்ள பேனா

உன்னுடைய
அளப்பற்கரிய அன்பு கொப்பளிக்கும்
பெருஞ் சமுத்திரக்
கரையிலிருந்துதான்
எனக்கு இந்தப் பேனா
கிடைத்தது !

எனது ரத்தம் கொண்டு
உன்னை உன்னை மட்டுமே
எழுத
மூங்கில் கணுக் கண்களுள்ள
என்னுடைய இந்தப் பேனா
காத்திருக்கிறது !

காதலைப் பற்றி
எழுதும்போதெல்லாம்
கறுத்த இரத்தத்தில் ஒழுகும்
கருவின் நன்றிகள்
எரிந்து கொண்டிருக்கும்
வம்ச விருட்சத்தின்
அடியில் வெடித்துச் சிதறுகிறது
அன்பின் பெருந்துயர்
உணர்ந்தோரின்
ஆகம விதிகள் !

நம் வாக்குறுதியின்
இரு கரைகளில்
நின்று கொண்டு
ஆலிங்கனத்திற்காக கைகள்
நீட்டும் போது
உதடுகளில் எட்டாமல்
உதிர்ந்து போகும் முத்தங்கள்
நெஞ்சு கீறி நட்சத்திரங்களை
எடுத்து
நெருஞ்சிகளை மாலைகளென
சூட்டுகிறது
துயிலற்ற மங்கிய சுவர்களுக்கு !

காதலின் பூங்கொத்தோடு
ரதமேறி நீ வருவதைப்
பார்க்க
கடலின் இரைச்சலில்
அலையின் ஆர்ப்பரிப்பில்
நன்றியின்மையின் அழகு
வார்த்தைகளை எழுதும்போது
என் பேனாவின்
மூங்கில் கணுக் கண்களிலிருந்து
கண்மணிகள் பிய்ந்து போகின்றன !

இரவு வண்டியின்
உருண்டோடும் சக்கரங்களுக் கிடையில்
நடுவழியின் நித்திரைகள்
அழுந்தும்போது
நம்முடைய நட்பு சிதறிப்போகும்
அப்போதும் நான் சொல்வேன்
" நீ சமுத்திரப் பெருந்துளி
என் பேனாவின் மை "
உப்பு நீர் நிறைந்து
எழுதப்படும் ஒவ்வொரு வரியும்
உனக்கான என் இதயப் பலிதானென்று .

எழுதியவர் : பாலா (3-Nov-14, 7:22 pm)
பார்வை : 118

மேலே