வடிக்கின்றேன் வகைவகை கவிஇனி
சிந்தையில் இன்று விந்தையாய்
சிதறுகிறது சிந்தனைத் துளிகளாய் !
சிந்திக்கும் கருக்களோ சிக்கனமாகுது
சிந்திடும் கவிதைகளோ சிக்கலாகுது !
எழுதிடும் வேகமும் குறைந்ததோ
ஏன்இந்த நிலையும் வந்ததோ !
எதுகையும் மோனையும் மறந்ததோ
ஏக்கமோ படைத்திடவும் பறந்ததோ !
தொடர்ந்து பதிவிடுவோர் காணலையே
தொடரும் சர்ச்சைகள் முடியலையே !
தெள்ளுதமிழ் கவிதைகள் குறையுதே
தெம்மாங்குப் பாடல்கள் மறையுதே !
புதுக்கவிதை மோகம் பிறந்ததும்
புத்தாடை அணிந்தது கவியுலகம் !
புதினமானது கவிதை வடிவங்கள்
புதுமை படைத்திடும் படிவங்கள் !
முடிக்கின்றேன் நானும் குழப்பமின்றி
வடிக்கின்றேன் வகைவகை கவிஇனி !
துடிக்கின்றேன் துள்ளலாய் படைத்திட
வெடிக்கின்றேன் சிவகாசி பட்டாசாய் !
பழனி குமார்