வாழ்க்கை தொட்டில்

எதில் தான் பாகுபாடு இல்லை இவ்வுலகில், இதில் இல்லாமல் இருக்க??
நடைபாதைகள் மட்டுமே நிரந்தரமாகிவிட்ட நாடோடிகளுக்கு ஒன்று...
ஓலை குடிசையில் ஒடுங்கி இல்லை இல்லை ஒடுக்கபட்டவனுக்கு ஒன்று...
ஆசைக்கு அளவிட்டு அடங்காமலும் ஆர்பரிக்காமலும் காரை வீட்டில் காலம் கழிப்பவனுக்கு ஒன்று...
பெட்டி பெட்டியாய் பணம் சேர்த்தும் நிம்மதியின் விலை அறியாத மாடி வீட்டு மனிதர்களுக்கு ஒன்று...
ஆட்டுபவர் ஆசைக்கேற்ப ஆடும் அது ஆட்டபடுபவருக்கு ஆனந்தம் அளிப்பது விந்தை தான்...
நாளைய உலகை நெஞ்சில் தாங்கும் மாபெரும் சக்தி அது...
அழும் குழந்தைகளை அரவணைக்கும் அன்னையருக்கு ஆண்டவன் அளித்த பொக்கிஷம் அது...
ஆளானபின் ஆசைபட்டாலும் அமரமுடியாத அபூர்வ அரியணை அது...
ஏற்றவரின் இமைகள் மூடும் வரை ஆடி களிப்பூட்டும் நடனமங்கை அது...
அகவை 5,6 அடங்கும் முன் அனுபவித்து மகிழ வேண்டிய மழலை தொட்டில் தான் அது....!
இறைவன் ஆட்டும் வாழ்க்கை தொட்டிலில் நாம்...
சில நேரம் மகிழ்ந்து களிக்கிறோம்,
சில நேரம் அழுது புரள்கிறோம்...
இறைவனிடமும் பாகுபாடு தான்,
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை தொட்டில்...
அழகாய் ஆடம்பரமாய் முள் படுக்கையுடன் சில...
முட்களின் மேல் பஞ்சு மெத்தையுடன் சில...