மோடமான வானிலை என்னில்-வித்யா

மோடமான வானிலை என்னில்-வித்யா

வறண்ட நாட்களிலெல்லாம் வானிடம் கையேந்தி மழை யாசிக்கும் மனம், சற்றே பலத்த மழையில் இதமான சூர்யோதயம் யாசிக்கிறது.மகரந்தங்களில் ஊஞ்சல் காட்டி ஆடும் பருவக் கனவுகள் காதல் தேடலிலே முடிந்து போகின்றன...அதையும் மீறி பட்டுப்பூச்சியின் தேன் தேடலாய் பொருளாதாரத் தேடல்...

தேடிக் களைத்தப் பின் திரும்பிப் பார்க்கும் போது பாதைகள் மட்டுமே மிச்சமிருக்கிறது..பயணங்கள் கரைந்து கால்தடம் தொலைந்து.... விவரம் தெரியாப் பருவத்தில் பொன்வண்டினைத் தீப்பெட்டிக்குள் அடைத்து வித்தைக் காட்டிக்கொண்டிருந்த சக நண்பனிடம் தெருவில் விளையாடியபோது இல்லாத உணர்வு நீண்ட கால சந்திப்பின் போது அதே தெருவில் நின்று நலம் விசாரிக்கும் போது...... நான் வளர்ந்துவிட்டேன்.......!! அவனும்.......!! அவன் என் காதலனில்லை......நானும் அவன் காதலியில்லை......ஆயினும் ஆயிரம் கண்கள்......ஒளியை நோக்கி ஈர்க்கப்படும் விட்டில் பூச்சியாய் எங்களை மொய்த்துக் கொண்டு......!!

நலம் விசாரித்து விடை பெற்றதும் தான் சுய அறிவு சொன்னது, ஒற்றைப் புன்னகை, சிறு தலை அசைத்தல்... விழியோடு விடைப் பெறுதல் இதோடு முடித்திருந்தால் பிறரின் கண்களுக்கு விருந்து குறைவாக இருந்திருக்குமென்று......... இருந்தாலும் அது ரகசியம் போலல்லவா முடிந்திருக்கும்..........?

கம்பி வேலியல்ல........இது கள்ளி வேலி......!! பெரும் மன அழுத்தத்தை நான்கு நாட்களாக முழுதுமாகக் கொட்டித் தீர்த்தது மழை........ மழைவிட்டும் வானம் கதவு திறக்காமல் மோடமாகவே இருந்தது தொடர்ந்து இரு நாட்களும்...... சோம்பல் முறித்து சூரியன் கதவு திறந்த ஆறாம் நாளில் கள்ளிச்செடியில் இருந்த மொட்டு இதழ் திறந்தது..........பின் வேலி எங்கிலும் கள்ளிப்பூக்களின் சாம்ராஜ்ஜியம்........ தேன் சிட்டுக்களின் வருகை.....பட்டாம் பூச்சிகளின் விஜயம்......தட்டான்களின் ஒட்டுதலென வேலி எங்கிலும் திருவிழாக் கோலம்.......!! இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு கள்ளிச்செடியாகப் பிறந்திருக்கலாமென்று தோன்றுகிறதெனக்கு.........

அழுது அழுது சோர்ந்து வெறித்து போன வானம் வாசலில் நின்று பார்த்தேன்.... பின் முதல் மாடியில் நின்று பார்த்தேன்....... வானம் சற்றே கீழிறங்கி வந்திருக்கலாம் என்று நினைக்கும் போதே இல்லை இல்லை நான் வானை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறேன் என்று முடிவுக்கு வந்தவளாய்.......கண்நீர்துடைத்துக் கொண்டு காதலும் வானைப் போல பொதுவானதுதான்.....அதன் முகங்களும் விகிதாச்சாரங்களும் தான் வேறு என்று எண்ணிக்கொண்டே.........(i love you dad .........i love u mom...)........சொல்லிக் கொண்டிருந்தேன்...... ஏதோ பாவ மன்னிப்புக் கேட்பது போலவே........!!

காயங்களில்லை......வலியும் இல்லை......கண்ணீர் மட்டும் சாத்தியமா...? எப்பொழுதும் இந்தக் கேள்வி என்னுள்ளே........ கன்னங்களில் அதன் பாதையை பின் தொடர்ந்த போது அதைத்துடத்த என் அம்மாவின் சேலைத்தலைப்பினில் ஊடுருவி சில நொடிகளில் என் பார்வையை விட்டு மறைந்துக் கொண்டே இருந்தது.......

வாரி அனைத்துக் கொள்ளும் போது சிறு இதம் மென் தூக்கத்திற்கு இட்டுப்போகும்.......என் சிந்தனைகள சிதறி சிதறி வழிநெடுகிலும் விழுந்தபோது என் தொலைந்து போன உறக்கம் என் சிதறிய சிந்தனைகளைப் பொறுக்கிக் கொண்டு எனைப் பின் தொடர்ந்து வந்து என் கண்ணீர் துடைத்துப் பின் எனை வாரி அனைத்துக் கொண்டது....... நான் கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்திற்குள் பயணிக்கிறேன்.......ஒரு பெரிய நீல வட்டம்.......என் மூடிய விழிகளுக்குள்......பின் சிவப்பு.....பின் மஞ்சள்........பின்.......வெண்மை.........இதோ நான் தூக்கத்தின் ஆழத்தில் இருக்கிறேன்.........!!

எழுதியவர் : வித்யா (5-Nov-14, 1:06 pm)
பார்வை : 145

சிறந்த கட்டுரைகள்

மேலே