தோழமை

ஆதிஎன்றும் யானறியேன்
அந்தம்என்றும் யானறியேன்
அங்குமின்றி இங்குமின்றி
அகிலம் சூழ வந்ததன்றோ
ஆழியதன் ஆழத்தினை
அளப்பதுதான் சிறந்தன்று; அதனெதிர்
அன்புடையோர் மனதாழம்
அளப்பதுவே மாச்சிறப்பு

புனைந்துரையா நட்பதனை
புலவர்கள் அன்றுரைத்தர்
புது யுகத்தில் வரும் நட்பை
புலவர்வழி யானுரைப்பேன்

வெஞ்சினத்தால் சொல்வரினும்
வெஞ்சுடரால் யான் சுடினும்
நஞ்செனவே நான்வரினும்
நண்பனவன் செயல் பொறுப்பான்

தொண்ணுலகம் பிறந்தபோதே
தொடுவானம் தன்னில் தோன்றி
நெடுவானம் முற்றில் முயங்கி
நேசமதை வீசியதே; நட்புறவு பேசியதே

கவினுலகம் கண்ட மாந்தர்
கணப்பொழுது நமைக்கண்டால்
கவினுலகம் வெறுப்பார்: நமில்,
கலந்துடனே சிரிப்பார்

யார்வரினும் உடன் சேர்ப்போம்
யாவருடனும் கை கோர்ப்போம்
பார் முழுதும் பற்றி வாழ்வோம்
பற்றழித்து பாசம் சேர்ப்போம்

விண்ணவரும் மயங்கும் எங்கள்
விலையறிய நட்பினாழம்
விதை பிளந்து விருச்சமாகும்
கனியெனவெ கனிந்து வாழும்

குலமென்றும் இனமென்றும்
தரம்பிரிக்கும் இழிந்தோரே
நட்பதனை மறந்தீரே
நாய்களினும் இழிந்தீரே

இனியேனும் பகை மறந்து
நட்பு பாராட்டுங்கள்

எழுதியவர் : வேத்தகன் (5-Nov-14, 1:08 pm)
பார்வை : 155

மேலே