+உன்னை நான் மறந்த வேளையில்+
உன்னை நான் மறந்த வேளையில்
அடைந்த அவமானங்களை
நான் மட்டும் அறியவில்லை
என்னைச் சுற்றி இருந்தோரின்
ஏளனப் பார்வையும் உணர்த்தியது..
எப்போதுமே என் மனதிற்குள் இருக்கும் நீ..
என்னை விட்டுப் போனதெங்கே?
வரும் நேரத்தில் வராமல்
அவமானங்கள் அரங்கேற்றம் அடைந்த பின்
நீ மனதில் வந்தும்
அடுத்த நாள் வரை
என்னை துடிக்க வைத்ததேன்?
என்னையே
என் ஞாபகங்களையே
வெறுக்க வைத்ததேன்?
எப்படிப் போனாய் எனை விட்டு...
என் மனதுடனும் விரலுடனும்
எப்போதுமே ஒட்டி இருப்பாயே..!
கண்மூடி எப்போது நினைத்தாலும்
காட்சி தருவாயே!
உனைவிட்டு
எனக்கு அறிமுகமில்லாத
யார் யாரையோ அன்று
எனைச் சந்திக்க அனுப்பி வைத்தாயே..!
அங்காடியில்
பல ஆண்களையும் பெண்களையும்
எனைப் பார்த்து சிரிக்க வைத்தாயே..!
ஏனெனில் நான்
சட்டைப்பையில் இருக்கும் பணத்தை நம்பாதவன்
உன்னை
உன் உதவியால் அடையும் பயனை
என் கண்ணைப் போல நம்பினேன்
என் பின்னே!!!
என்னை விட்டு
வாங்கிய பொருளுக்கான பட்டியல் தயாரானவுடன்
பணமின்றி வங்கி அட்டை கொடுத்த வேளையில்
எப்படி மறந்து போனாய்..
என் பின்னே!!!
வாங்கிய பொருட்களை
திருப்பி கொடுத்துவிட்டு
கேலியையும் கிண்டலையும்
முழுதாய் வாங்கிக்கொண்டு
வீடு வந்து சேர்ந்தேன் உன்னால்
தேவையான நேரத்தில் மறந்துவிட்டு
சாவகாசமாய் ஞாபகம் வந்த
என் பின்னே!!!
[பின்= பின் நம்பர்][வங்கி அட்டை= ஏடிஎம் கார்டு]