குரு பூஜை

குருவின் திருவில்
நிறைவது தெய்வம்.
குருவின் அண்மை
தருவது அமைதி.

எண்ணந்துறந்த
நிர்மல மனமும்
தன்வயம் மறந்து
தானே கரையும்.

அடங்கிய மனதில்
தொடங்கிடும் பூஜை
காலமும் ஞாலமும்
தொலைந்த நிலையில்.

நெக்குயிர் நிலையில்
நிறையும் நிம்மதி.
மௌனம் மந்திரம்.
விழிநீர்த் துளிகள்
அர்ச்சனை மலர்கள்.

நன்றியுணர்வே
நல்மணியோசை
பொன்னொளி வீசும்
தீபமும் தூபமும்.

நன்றிப்பெருக்கில்
நனையும் இதயம்
அன்பில் கலந்து
அருமை நைவேத்தியம்.

பக்தியின் உச்சம்
பூரண சமர்ப்பணம்.
எதுவும் வேண்டா
நிறைவே பிரஸாதம்.

ஆத்ம பூஜையில்
அமர்க்களமில்லை.
பகட்டுப் பக்தி
சடங்கெதுமில்லை.

நிகழ்ந்ததிதெல்லாம்
நிறைவினைக்கண்டு
திகழும் கணத்தில்
திருப்தியடைவோம்.

குருவின் திருவருள்
கூட்டிடும் ஞானம்.
கூடவே வருமவர்
கிருபை வெளிச்சம்.

நிதானித்தோடும்
நிறைநீர் நதியாய்
நமது வாழ்க்கை
நலமாய்க் கழியும்.

வாழ்க எவ்வுயிரும்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (8-Nov-14, 9:28 am)
சேர்த்தது : L Swaminathan
Tanglish : guru poojai
பார்வை : 127

மேலே