தாயின் அன்பு முத்தம் - போட்டிக் கவிதை - தேன்மொழி

தாயின் அன்பு முத்தம் - போட்டிக் கவிதை - தேன்மொழி
---------------------------------------------------------------------------------

நான் - உந்தன்
உடலோடு கருவாக
உருவானப் பொழுதில் - எந்தன்
மேனியில் எங்கே
முத்தமிட்டாய் அம்மா ..!

நான் - உந்தன்
தேகத்தில் சிசுவாக
கதைத்த கணத்தில் - எந்தன்
பாதத்தை எப்படி
தொட்டுப் பார்த்தாய் அம்மா ..!

நான் - உந்தன்
உலகத்தில் குழந்தையாக
வெளிவந்த நொடியில் - எந்தன்
உடலுக்கு நீயே
உயிர்க் கொடுத்தாயா அம்மா ..!

நான் - உந்தன்
மகிழ்ச்சியில் மழலையாக
சிரிக்கின்ற மணித்துளியில் - எந்தன்
உதட்டினில் உலக
மொழியை மீட்டினாயா அம்மா ..!

நான் - உந்தன்
வளர்ப்பினில் குமரியாக
படிக்கின்றப் பொழுதினில் - எந்தன்
கனவினில் இலட்சிய
வாழ்வினை வளர்த்தாயா அம்மா ...!

நான் - உந்தன்
பார்வையில் துணையாக
துள்ளுகின்ற இல்லத்தில் - எந்தன்
விழிகளில் தினமும்
சுடராய் ஒளிர்கிறாயா அம்மா ..!

நான் - உந்தன்
உயிரோடு கலந்து
உணர்வாக வாழவே
இமையோடு இன்றே
முத்தச் சிதறல் வேண்டுமம்மா ..!

புன்னகையில் பொழியும்
சின்னச்சிறு தூறலாய் - உந்தன்
புதுமொழிக் கேட்க வேண்டுமம்மா . ..!

எந்தன் விரலோடு விளையாடும்
மலரின் இதழில் - உந்தன்
வாசம் வீசுதம்மா ..!

கணவரின் காதலான
கண்ணிமை அசைவில் - உந்தன்
பாசம் கொஞ்சுதம்மா ..!

நிலவாய் உறங்கும் எந்தன்
மகளின் மடியில் - உந்தன்
மகளாய் மாறினேனம்மா ..!

நாளைய விடியல்
புலரும் பொழுதில் - என்னை
காண வந்துவிடு அம்மா ..!

மீண்டும் ஒரு முறை - உந்தன்
கன்னத்தை மெல்ல இழுத்து
மீளாத அன்பினில் - என்னிதழ்
முத்தமிட்டு சிலிர்க்கணும் அம்மா ..!

--- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிடப் பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு

எழுதியவர் : தேன்மொழி (8-Nov-14, 3:22 pm)
பார்வை : 261

மேலே