நதியும் நரரும்

நரரின் வாழ்வும்
நதியும் ஒன்றே.

தேகங்கூடிப்
பிறக்குது ஒன்று.
மேகங்கூடிப்
பிறக்குது ஒன்று.

சினைவழி
தோன்றுவதொன்று.
சுனைவழி தோன்றுது
மற்றொன்று.

கர்ப்பந்தரித்தே
இரண்டும் பிறக்குது.
பற்பல வழிகளில்
பயணம் செய்யுது.

இரண்டின் வழியிலும்
இருக்குது பாரீர்
மேடு பள்ளங்கள்
ஊடே வீழ்ச்சிகள்.

இரண்டையும் போற்றிப்
பேணுதல் அவசியம்.
தவறிடின் தரிசாய்
போவது சாத்தியம்.

அறிவும் ஒழுக்கமும்
கரையாய்க் கொண்டு
அளவாய் ஓடணும்
மனித நதி.

எக்கரை மீறினும்
துக்கம் நிச்சயம்.
அழிவும் பழியும்
அடைவது சத்தியம்.

கரையடங்கி
இரண்டும் போக
காலமுழுதும்
காணும் வளமே.

நீர்நதியதனால்
செழிக்குது ஞாலம்.
சீர்மீகு நரரால்
செறிக்குது ஞானம்.

கடலில் கரையும்
நதியென - ஞானக்
கடலினில் கரையணும்
நரரும்.

நதியும் நரரும்
இயற்கையின் வர்க்கம்.
இயற்கையில் இயைந்திடில்
இருப்பும் சொர்க்கம்.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (9-Nov-14, 2:09 pm)
பார்வை : 58

மேலே