என் காதல்
தேடலென வந்தேன் தேட...
காதலையும் சேர்த்தே
சொல்லிக் கொடுக்கிறாய்ப் போல,
என்ன மாற்றம் செய்தாயடா ? – என்னுள்ளே
இதுவரைப் பிடிக்காத
மெல்லிசையும், தமிழிசையும்
மயிலிறகும், தென்றல் காற்றும்,
காற்றில் ஜதி சொல்லும்
கொலுசு ஒலியும் என
பெண்மை பேசும்
அனைத்தும் பிடிக்கிறதே?
கண் முன் நின்று
கண்ணாடி பார்த்ததில்லை
இப்போது...
நொடிக்கொரு முறை பார்க்கிறேன்
நானே அறியாமல்
ஓரவிழிப் பார்வையில்
உன்னை நான் மேய்கிறேன்,,,
இது தவறல்லவோ? என
நானே என்னைக் கேட்டால்
மனம் பதில் சொல்கிறது...
உன்னவனை
உன் மனதின் இனியவனை
உன்னையன்றி யார் பார்க்க என்று,
இணைசேர முடியா எல்லைகள் தான் – ஆனால்
இணையாய் வேண்டும் என்று
இறைவனிடமும் கேட்கிறேன்..
கண்களில் காதல் எனும் தேடல் கொண்டு
ஜீவனை எதிர்நோக்கி...
வரம் தருவீரோ..?
உயிராய் நெஞ்சில் நீ இருக்க,
உணர்வாய் என்னுள் புதைந்திருக்க,
அணுவாய் உன்னை நான் காக்க நினைக்க,
அறியாப் பிழை செய்யும் குழந்தையா நீ? – இல்லை
அறிந்து உணர மறுக்கும் மூடனா?
பதில் சொல்லடா நீ ....
நீ ஏசும் வார்தைகள் கூட சுகம் தான்
உன் கோப மௌனத்தை விட...
நீ பேசாத நொடிகள்
என்னைக் கொல்லும்
ஆலகால விசமாய்..
விஷம் கூட அமுதம் தான்
உன் மௌனம் முன்னால்...
ஒரு வார்த்தை...
ஒரு பார்வை...
போதுமடா.
தவறுகளை தவறென
தவறாமல் சரியாய்ச் சொல்லி..
தவறிய தவறை தவறேன் என
தவறாமல் சரி செய்தாய்
யாதுமாகி என் நெஞ்சில்...
காதல், தேடல் இரண்டும் ஒன்றா?
தேடலைக் காதலித்தேன்
காதலைத் தேடினேன்
இரண்டும் அருகில் இருந்தும்
எல்லைகளைக் கடக்க முடியவில்லை..
தேடல் காதலாக...
காதல் தேடலாக...
நாம் இருவரும்
இணை சேர்வது எப்போது?
நிறைந்தாய் நிறை பொருளாய்...
நீ விலகிச் செல்லும்போது
விரும்பி வருவதும்..
நீ விரும்பும்போது
விலகிச் செல்வதுமாய் நீளும்
நமது கண்ணாம்பூச்சி ஆட்டம்
எப்போது முடிந்து
நம் பயணம் தொடரும்.....
என்னவனே...
நீ அருகில் இருந்தும்
தொடுவானமாய்....தொட முடியுமா...?
இணை கோடாய் இருக்க மனமில்லை
உன்னைத் தொடும் தொடுகோடாய்
இருக்கவே விரும்புகிறேன்..
விரும்பும் மனம் அதை உணர்வாயா?
இதுவரை
இல்லாத உணர்விது
தேடலில் தொடங்கி
காதலில் நிறைவு பெற்று
பின் மீண்டும்
வாழ்க்கைத் தேடலை
தொடங்கி..
விடை பெறுகிறது ...!
T.nisha meharin
j.j college of engineering and technology
ammapettai
trichy 620009