நடை பாதை பூக்கள்
யார் விதைத்த விதையோ நாங்கள் !
விடை தெரியா கேள்வி !
விதி விளையாடிய காரணத்தால்
விளையாட நேரமில்லை எங்களுக்கு !
வீதிகளில் கிடப்பதாலோ என்னவோ
விதிவிலக்காய் நாங்கள் !
அரசின் அனைவருக்கும் கல்வி
திட்டத்தில்கூட !
சிறு அறையில் தீர்ந்த
இருவரின் உடற்பசி
கிடத்திவிட்டது எங்களைத்
தெருவோரம் வயிற்றுப் பசியோடு !
காசில்லா காரணத்தால் கையேந்தி பவனில்கூட
எங்களுக்கு மட்டும் சிறப்பு விருந்து !
ஏந்திய கைகளில் வந்து விழுகிறது
சூடான தோசைக் கரண்டி !
பிள்ளை வரம் கேட்டு அரச மரம் சுற்றும்
ஒருத்திக்குகூடவா தெரியவில்லை அதே
மரத்தடியில் படுத்திருக்கும் நானும்
ஒரு பிள்ளையென்று !
வேறு ஏதேனும் மரம் இருந்தால்
கூறுங்களேன் நான் சுற்றி வர !
எனக்கும் வேண்டும்
பெற்றோர் வரம் !
மகப்பேறு மருத்துவமனையின்
ஆய்வுக் குழாய் குழந்தை நிபுணரே !
பாலத்தின் கட்டுமானக் குழாயில் வாழும்
எங்களுக்கு பெற்றோர் கிடைக்குமா !
தெருவோரம் நிற்கும் என்னை
ஒரு ஓரம் ஒதுக்கி செல்வோரே
நாங்கள் கையேந்தி நிற்பது
காசுக்காக அல்ல !
எங்களையும் மகனாய்
மகளாய் ஏற்கும்
அன்புக் கரங்களுக்காக !
என்னை ஏளனமாய் பார்க்கிறீர்கள்
உண்மையில் உங்களைப் போன்ற
இருவரின் படுக்கையில் பூத்தவர்கள் நாங்கள் !
இதோ இன்று காய்ந்து கொண்டிருக்கிறோம்
உங்கள் நடைபாதையில் பூக்களாக !