நாம் எங்கே போகிறோம்- போட்டிக் கவிதை - தேன்மொழி

நாம் எங்கே போகிறோம்- போட்டிக் கவிதை - தேன்மொழி
-----------------------------------------------------------------------------------------
குழந்தை பிறந்துள்ளதாம்
அவர்கள் வீட்டிற்கு யார் சென்றாலும் - இனி
இந்த வீட்டிற்குள் வர வேண்டாமென்றார்
வீட்டின் பெரியவர்
பிறந்த குழந்தை செய்த பிழை என்னவோ ..?
உறவு பெண்ணிற்கு திருமணமாம்
யாரோ ஒருத்தர் செல்லுங்கள் - ஒரு
பவுனை அன்பளிப்பில் காட்ட சொன்னார்
அலுவலகம் சென்ற அப்பா
பெண்ணின் மனம் பணத்தையா கேட்டது ..?
நான்கு வயதானது
உயர்ந்த தனியார் பள்ளியில் - சில
இலட்சம் திணித்து ஒரு இடம் கேட்டனர்
குழந்தையின் பெற்றோர்
மழலை மூளையை அறைக்குள்ளே அடைக்கவா ..?
தாம்பத்யம் சலித்தது
நிலையாக நீதிமன்ற வாசலில் - தினம்
வரிசையில் நின்றே விவாகரத்து வேண்டினர்
புதுமண தம்பதிகள்
மனதின் புரிதல் மண்ணோடு மடிந்து விட்டதோ ..?
தனிமை கிடைத்தது
இணையத்தை தவறாக புரிந்து - முழு
நேரமும் பொழுதுப்போக்கி திறமை மறந்தனர்
இளைய தலைமுறை
நாளைய விடியலின் வழிகாட்டி சோம்பலா ..?
காதல் மலர்ந்தது
உணர்வுகளில் பாதை தவறி - தேக
ஊடலில் நுழைந்து வாழ்வை தொலைத்தனர்
ஆணும் பெண்ணும்
காதலின் புனிதம் சாக்கடையில் குளிக்குமோ ..?
ஐந்தாண்டு முடிந்தது
வழக்கமான வன்முறை தேர்தலில் - கையோடு
ஐநூறு பெற்று தன் வாக்கினை விற்றனர்
ஜனநாயக மக்கள்
விழிப்புணர்வை வீதியின் சுவரில் ஒட்டவோ ..?
சுயநலம் பிறந்தது
பணத்திற்கு உழைப்பை விற்று - வாழ்வில்
கருணை மறந்து மனிதம் புதைத்தோம்
நீயும் நானும்
அன்பின் அர்த்தம் அடிமனதிலும் அழிந்ததோ ..?
--- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிடப் பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு