மெய்முகம்

என் மீதான கோபத்தில்
தொலைவில் போகிறாய் நீ
என்னை
தொலைத்துவிட்டு ....


சுரம் கொதிக்கும் மணல்நீரில்
சுள்ளியாய் எரியும் நெஞ்சம்
சுழல் காற்றாய் சுற்றுகிறாய்
சூறைக் காற்றில் பிடியிழந்த
பஞ்சின் நூலாய் நான் !

தீயும் தீண்டிப்பார்க்காத
நெருப்பாற்றின் வேகம்
உன் நெஞ்சோரம்
கசிந்த வார்த்தைகளில்..

கசக்கி பிழிவதே உன்
கைப்பலன் என்றறிந்தபின்
கதறும் விதைகளின் மொழி
விழுமா உன் செவியில் ?

கனியாக இருப்பினும்
கனியாத மரமாய் இருப்பினும்
கல்லடிகள், தடியடிகள் மட்டுமே தண்டனை
வேரில் நீர் இருக்கும் வரை ....


நிழல் நீயென சாய்ந்தேன்
நித்திரைக் களைந்தாய்
மெய்முகம் வெளிக்காட்டினாய்...
அத்திரையில் தெரிந்தது அதுவரை
அமைதியாய் இருந்த பொய்முகம் !!





கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (11-Nov-14, 7:01 pm)
பார்வை : 63

மேலே