என்று காண்பேன் உன்னை
என்று காண்பேன் உன்னை ?
எத்தனை நாட்கள் இப்படி யேநீ
தவிக்க வைப்பாய் என்னை ?
என்றுன தெண்ணம் மாறும் ?
எரியும் விறகாய் நெஞ்சுள் காயும்
அக்கினி என்று ஆறும் ?
என்று தரிசன மோசொல் ?
உனக்காய் நான்நின்ற இடங்களி லெல்லாம்
வளர்ந்தது என்கா தல்புல் !
என்று தீருமென் அழுகை ?
எப்போதும் உன்னை நினைத்த தவமோ
என்பேனாவின் கவிதைத் தொழுகை !
என்றுநீ திருவாய் திறப்பாய் ?
எப்பொழு தெந்தன் துயரங் களைநீ
உன்புன் னகையால் மறைப்பாய் ?
எத்தனை காலம் இன்னும்
மௌனம் என்ற ஒற்றைப் பதிலோ ?
விடையை மாற்றிச் சொல்லும் !
கட்டளை இட்டது நீதான் !
கண்ட படிஎனைக் கத்திட வைத்துத்
தட்டி கழிப்பதும் நீதான் !
உத்தர விடுவாய் அன்பே
உம்மென் றொருசொல் உயிர்விடப் போதும்
உடனே வீழ்வேன் முன்பே !
-விவேக்பாரதி