தேன்மொழி - 01 - இராஜ்குமார்

தேன்மொழி - 01 - இராஜ்குமார்
=============================

அழகாய் அசைந்துப் படிக்கும் விழிகளை அப்படியே இந்தப் பயணத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் ..
இறுதி எல்லையை அடையும் வரை நான் நிச்சயம் உடன் வருவேன் ...உங்களில் ஒருவனாய் ..உங்களுக்காக ஒருவனாய் பயணம் முழுதும் இருப்பேன் ..

வழிகாட்டியென எண்ணினால் ஒரு சுடராய் தெரிவேன் ..வழிகாட்ட நினைத்தால் ஒரு சுடரையும் தருவேன் ....பலரின் மனங்களை மெல்ல தட்டி கொடுப்பவன் ...எல்லா தேசத்திலும் படர்ந்தவன் ..இந்த தேசத்திலும் பறப்பவன் ..தேவையான பொழுதுகளிலும் எந்தன் தேகம் தெரியலாம் ..எல்லா கணத்திலும் எந்தன் குரல் உங்கள் செவியோடு உறவாடும் ..நான் யாரென்று இறுதியில் நீங்களே அறிந்து கொள்ளலாம் ..ஏற்கனவே நீங்கள் அறிந்தும் இருக்கலாம் ..

அன்றிரவு வானம் முழுக்க முழுக்க கருமையில் குளித்தது ....இரண்டு நிலவும் வானத்தில் வருகை பதிவு செய்யவில்லை ....இந்த தேசத்தின் அமாவசை தினம் அன்று ..மழை துளி துளியாய் வீழாமல் அருவியாய் தெரித்தது ...மேகங்கள் மோதி உடைந்து கர்ஜனை செய்தது ..மின்னல் வானை கிழித்து இந்த தேசத்தின் தேகத்தை பதம் பார்த்தது ..காற்றின் மோதலில் ஒரு மரம் வேரோடு வீழ்ந்தது ....இரண்டாம் வருடம் ...இரண்டாம் மாதம் ,,,இரண்டாம் நாள் ...இருள் மட்டுமே ...நள்ளிரவு கடந்து அதிகாலை நான்கு மணி ஆனது ..

சன்னல் மூடப்பட்ட அறைக்கு வெளியில் தனியாய் ஒரு உருவம் கன்னத்தில் கை வைத்து ....மழையை விழியால் பாராமல் .. இடியின் சப்தம் வெறுத்து ..செவியோடு ஒரு அலறலை உள்வாங்கி கொண்டே இருந்தது ..கதவுகள் சற்று தாழிடாமல் இருந்தது ..அந்த கதறல் மழைத்துளிக்கும் கண்ணீரின் வலியை அழுத்தமாய் சொல்லி இருக்கும் .

அறையின் உள்ளே தன் உயிர் பிரியும் வலியால் துடிக்கிறாள் ....அவள் தேகம் முழுக்க வலி ..வலியானது முழு தேகம் ....அவளின் அருகில் நின்றால் எமன் விழிகளும் அழுதுவிடும் ....ரத்தம் உறுஞ்சும் நிகழ்விலும் இவ்வலி இல்லை ...மின்னல் நம் தேகத்தோடு மோதினாலும் நாம் உணரும் வலி இவளின் இன்றைய வலியில் ஒரு துளியே ...

உயிரை பறிக்கும் நொடியில் தேகத்தின் வலி உச்சம்... என்பதை அடியோடு தகர்க்கும் நிகழ்வில் தற்போது இவள் ..புது உயிரை படைக்கும் நொடியின் மடியில் அவளின் மடி ..வலிகள் அடங்கி அவளின் விழிகள் நனைந்தது ..இந்த தருணத்தில் அவளின் வாழ்வு அர்த்தபட்டது ..

விழிநீரை விரலால் துடைக்கும் கணத்தில் விழிமுன் அழுது கொண்டே இவளின் உலகம் ..சின்னஞ்சிறு குழந்தை ..மெல்ல அணைத்து நெற்றியோடு முத்தமிட்டாள் ..தேகம் சிலிர்த்தாள் ...முதல் முதலாய் அன்னையான ஆனந்தம்....பேரானந்தம் ..." கலைமகள் " தனது குழந்தையை பார்த்து கனவில் மிதந்தாள் .எதிரே நின்ற மருத்துவருக்கு விழியால் மகிழ்ச்சி கலந்த நன்றி சொன்னாள்..

வெளியே கன்னத்தில் கைவைத்து அமர்ந்த உருவம் மகிழ்ச்சியோடு அறையில் நுழைந்தார் ..
குழந்தையை அன்போடு பார்த்தார் "முத்து " ...ஆனால் முதல் தந்தையாய் அல்ல ..

தனது கையோடு இருந்த ஒரே பொற்காசினை மருத்துவரின் கையில் கொடுத்தார் ...மனிதம் அறிந்து வறுமை தடுக்க நினைத்த மருத்துவர் ..அந்த பொற்காசினை அப்படியே சின்னஞ்சிறு குழந்தையின் உள்ளங்கையில் வைத்தார் ..

அன்னையான கலைமகளின் கண்கள் கலங்கின ...மனம் வலிக்க அழுதாள் ..சத்தமில்லை ..அவளின் உள்ளுணர்வுகள் அவளோடு பேசின ..அவளின் உறவுகளும் முத்துவின் உறவுகளும் ஒருவரும் இதுவரை வரவில்லை ..இவர்களோடு யாரும் பேசுவதில்லை ...காரணம் இவர்களின் கல்யாணம் ..

எப்படி ....எப்போது ..என்றால் ....கலைமகள் அப்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள் ...முத்து பக்கத்து தோட்டக்காரன் ...கலைமகளுக்கு மூன்று அண்ணன் ..இரண்டு அக்கா ..இவளே கடைசி பெண் ...பள்ளிக்கு சென்று படிப்பவள் இவள் மட்டுமே ..கிராமத்தில் யாரும் படிக்காமல் இருக்க கலைமகள் கொஞ்சம் படித்தால் ..முத்துவிற்கு கலைமகள் மேல் ஒரு பார்வை ...வீட்டில் அனைவருக்கும் பிடித்தவள் ..அனைவரையும் நேசிப்பவள் ...மொத்தத்தில் கடைசி பெண் என்பதால் எல்லாம் வேலையும் இவளே செய்வாள் ...தனது அண்ணன் , அக்கா குழந்தைகளை இவளே பார்த்து கொள்வாள் ....அடுப்படி முதல் படிப்பது வரை ..எல்லாம் கலைமகளே .

மழலையோடுப் பேசி கொண்டே வீழும் மழைத்துளிப் போன்ற இவளின் வாழ்வை தனது தோட்டத்து வரப்பில் அமர்ந்து ரசித்து வந்தார் முத்து ..

ஒரு நாள் ....சில நிமிடம் ..கலைமகள் பள்ளிக்கு செல்லும் வழியில் ...
பூச்சு கொல்லி மருந்துடன் நின்றார் முத்து ..

"கலை கொஞ்சம் நில்லு "

" இல்ல நா பள்ளிகோடத்துக்கு போவணும் வழியை விடுங்க "

"இது என்னதுன்னு தெரியுதா "

"பூச்சிக்கி அடிக்கிற மருந்து ...சொல்லிட்டேன் தானே வழி விடுங்க "

"சரி ..எதுக்குன்னு தெரியுமா "

"உங்க வயலுக்கு வாங்கி வச்சிருப்பீங்க "

"இப்போ அதுக்கு இல்ல ..வேற "

"எனக்கு தெரியல "

" நீ இப்போ ..என்ன கல்யாணம் பண்ணிக்க வரலைனா ...நா இத ..இங்கியே குடிச்சிட்டு செத்துருவேன் "

"அய்யோ நா என்ன தப்பு செஞ்சேன் ..ஏன் எல்லாரும் இப்படி பண்றீங்க "

முத்து மருந்தை உடைக்க போனார் ..கலை உடைந்தே விட்டாள் ..
உடனே தடுத்தாள் ...முத்துவின் உயிரை காப்பாற்றிய பெண்ணாய் ..."சரி நா என்ன செய்ய" என்றாள் கலை ... அப்படியே அழைத்து சென்றார் முத்து ..

மாலைப் பொழுது வந்தும் கலை வீட்டிற்கு வரவில்லை ..பெற்றோர் , அண்ணன் , அக்கா அனைவரும் நொந்துவிட்டனர்...எங்கு தேடியும் இல்லை ..அலைந்தது திரிந்து இதயம் உடைந்தனர் ..அண்ணன்மார் அழுதே விட்டனர் ..

அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் கலைமகள் முத்துவிற்கு மனைவி ஆனாள்... இருவரும் இறுதியில் கலையின் அண்ணன்மார் கண்ணில் விழவே...முத்துவை அடிக்க முயன்றனர் ,,பிரச்சனை வளர்ந்தது ....மோதல் தொடங்கியது ..காதல் திருமணம் காவல் நிலையம் வரை சென்றது ...நான்கு நாட்கள் காவலில் இருந்து பின்னர் வீடு திரும்பினர் இரு தரப்பினரும் ..

இப்படி தன் குடும்பத்தை பிரிந்து பாசத்தை இழந்து எல்லாம் முத்து என வந்தவள் கலைமகள் ...தற்போது வறுமையின் பிடியில் ...புதிதாய் ஒரு குழந்தையும் மடியில் ... ஒரு நல்ல எதிர்காலத்தை எப்படி தன் குழந்தைக்கு தருவோம் என்ற எண்ணம் கலைமகளின் முழு நெஞ்சை கீறிப் பார்த்தது ...கீறலும் விழுந்தது ..

நினைத்து நினைத்து அழவே....கலைமகள் கண்ணிலிருந்து மெல்ல இறங்கிய கண்ணீரை ...சிறு குழந்தை தன்னிடமிருந்த பொற்காசினை வைத்து தடுத்தது ...கண்ணீரை நிறுத்தியது குழந்தையின் பாசம் ..

குழந்தையை எடுத்து கொண்டு கலையும் முத்துவும் வீடு நோக்கி சென்றனர் ..

வீட்டின் முன் ....
வீட்டின் வாசலில் இன்னொரு பெண் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் நிற்கிறாள் ...

இனி விடியும் ....


- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (18-Nov-14, 11:22 am)
பார்வை : 514

மேலே