நீ நான்

என் உறக்கம் கலையாமல்
எனை எழுப்பும்
சின்னக் குழந்தையின்
செல்லத் தீண்டல் நீ !

போர்த்திய போர்வைக்குள்
புகுந்துகொண்டு
அணைப்பை அற்புதமாய்
உணரவைக்கும்
புலர்ப் பொழுதின் புதுக்காற்று நீ !

விழிகளின் திறப்புவிழாவில்
விருந்தினராய் நுழைந்துவிட்ட
விடியலின் வெளிச்ச சாரல் நீ !

வெண்ணிலா முகம் பார்க்க
விடியல் வரை விழித்திருந்து
நுனிவிரல் பட்டவுடன்
சிலிர்த்து விழும் சிறுதுளி நீ !

கோடிகள் சேர்க்காமல்
கோப்பைக்குள் குடிவந்து
கொஞ்சலாய் ததும்பி நிற்கும்
குறும்புகள் நீ!

அதரம் நனைக்க அமுதம் சுரக்கும்
அருவியும் நீ !

எல்லோருக்கும் ஏதோவாகும் நீ
எனக்கு மட்டும் யாதுமாகிறாய் நீ !

கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (19-Nov-14, 7:21 pm)
பார்வை : 137

மேலே