டீச்சர் ஒரு நிமிடம்

டீச்சர் !
என்னை நீங்கள் மறந்திருக்கக்கூடும்
சாக் பீஸ் துகள்களுக்குள்
தொலைக்கப்பட்ட
தோல்வியின் சரித்திரம் நான் !
நினைவில்லையா டீச்சர் ?
உங்கள் கல்வி இயந்திரத்தில்
பழுதுபட்டு தூக்கி எறியப்பட்ட
உதிரி பூக்களை !!
ரவிய
ஞாபகம் இருக்க டீச்சர் ?
புவியியல் படத்தில் பெயிலக்கிவிட்டிர்களே
பள்ளிக்கு அவன் திரும்பி வரவேயில்லை!!
அற்புதமான ஓவியன் அவன்
தூரிகை பிடித்த கைகள் இன்று
துப்புரவு தொழில் செய்கிறது டீச்சர் !!!
அவன் வண்ணங்கள் இன்றும் என் நினைவில் இருக்கிறது - ஆனால்
அவன் இருப்பை கூட வகுப்பில் அறிந்ததில்லை நீங்கள் !!
உங்களிடம் சில கேள்விகள் டீச்சர் :
மேல் வீதி பசங்க
பாடம் படிக்க
நான் மட்டும் கக்கூஸ்
கழுவினேன் ! ஏன் டீச்சர் ?
இரண்டும் இரண்டும் நான்குனு
தெரிந்து கீழ் வீதி மாணவன்
நான் மட்டும் தான்
ஆனால் என்னக்கு
விடுதலைனா என்னனு
தெரியலையே ஏன் டீச்சர் ?
தனியார் பள்ளிகளில் படிக்குற
தங்கள் புள்ளைங்கள
ஏன் நம்ம ஸ்கூலுல
சேர்த்து படிக்க வைக்க கூடாது ? - அப்போ
நீங்க மட்டும் ஏன்
தனியார் ஸ்கூல விட்டுட்டு
இங்க ஏன் வந்திங்க ?
சமச்சீர் னா என்ன டீச்சர் ?
சுய நலம் னா என்ன டீச்சர் ?
தடிகளும்
தண்டனைகளும்
இல்லாத பள்ளிக்கூடம்
எப்போ டீச்சர் வரும் ?
ஏழைகளுக்கு ஏற்ற
கல்வி எப்போ வரும் ?
காலம் ஓர் இரக்கமற்ற அரக்கன்
மாற்றத்தால் மட்டுமே அவனை வீழ்த்த முடியும் -அப்போ
மற்றம் எப்போ டீச்சர் வரும் ?