என் அம்மாவிற்காக
பட்டணத்தில் பிறந்தவள் நீ..
பட்டிகாட்டில் வாழ்க்கைபட்டாய்..
அத்தை மகன் என்று அவசரமாக
கட்டி வைத்தார்கள் உன்னை
அகவை பதினேழில்..
வெந்த சோறும் தெரியவில்லை.
வேகாத சோறும் தெரியவில்லை...
அடுப்பெரித்தும் பழக்கமில்லை..
அம்மி பிடித்தும் வழக்கமில்லை..
வயற்காட்டு வேலையில் சுத்தம்..
கதிர் அறுக்கவும் தெரியாது..
களை பறிக்கவும் அறியாது..
இன்றும் கேட்டுருக்கிறேன் உன்
மாமியார் (அப்பத்தா) சொல்ல..
களையெடுக்க கூட்டிசென்றால்
களைக்கொத்தி கணையில் துணி
போர்த்தி களைஎடுத்தவள் என்று..
வசை பாடினார் உன் அத்தை..
வருந்தவில்லை என் அப்பா...
அரை குறையாய் கூட தெரியாத
விவசாயத்தில் இன்று அறிஞர்
ஆகிப் போனாய் எப்படியோ?
உன் குல தொழில் என்பதாலா?...
நீ அதிகம் படிக்கவில்லை என்றாலும்
எங்களுக்கு அறிவை புகட்டினாய்...
கலவரங்கள் நிறைந்த பூமியில்
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாய்..
கடன் வாங்கியேனும் கல்லூரியில்
சேர்த்து விட்டாய்..
குடித்து விட்டு அப்பா குடும்பத்தை
பார்க்காத பொழுது .
குலமகளே நீ இல்லையென்றால்
குழியில் அல்லவா விழுந்திருப்போம்..
என்னதான் இன்று ஏ/சியில்
அமர்ந்து வேலை செய்தாலும்
களத்து மேட்டிலும்
கருவல் காட்டிலும்
தொட்டில் கட்டி போட்டுவிட்டு
தூரத்தில் ஒற்றையாக களையெடுத்த
அம்மாவின் முகம்தான் கண் முன்னே
நிற்கிறது..
பணமே உலகமாக மாறிப்போனாலும்
பாசம் என்று ஒன்று இருப்பது
அம்மா என்ற ஒரு ஜீவனாலத்தான்..
நுனி நாக்கில் பேசும் ஆங்கில மொழி..
"அப்பா நல்லாயிருக்கியப்பா" என்ற
ஒற்றை அன்பு மொழியில் காணாமல்
போகும்..
குலத்திற்கு ஆயிரம் தெய்வம்
இருந்தாலும் எங்கள் அம்மாதான்
குல தெய்வம் எங்களுக்கு..
பெரும்பாலும் கோவிலுக்கு
செல்வதில்லை எனது
அம்மா வீட்டில் இருப்பதனால்..
மருத நிலத்தின் மள்ளரசி-அவர் ..
என் தாய் "தமிழரசி".....