தாயே வாடாது நீ வாழ _ குமரேசன் கிருஷ்ணன்

மழைத்துளியை சேகரித்து
மாதம் பத்தும் மடிசுமந்து
மரணத்தின் பிடிக்குள்ளே
மாதா நீ ஏன் சென்று வந்தாய் ?

நாளும் தவமிருந்து
நல்அங்கம் நான்பெற
கும்பம் சுமந்த ஜீவவித்தை
கும்மிருட்டில் ஏன் வளர்த்தாய் ?

உருக்கொள்ள கருபுகுந்து
உறுப்புகள் வரும்முன்னே
உதிரத்தால் உணவிட்டு
உணர்வினில் ஏன் கலந்தாய் ?

நீர்மூழ்கி நிதம் தவழ்ந்து
நிம்மதியாய் துயில் தந்து
நிமிடங்கள் யுகமாக
நீ ஏன் காத்திருந்தாய் ?

இருள்பழக இமைதிறந்து
இயக்கங்கள் நான் பெற
இருண்ட உலகத்தினுள்ளும்
இதயத்துடிப்பாய் ஏன் வந்தாய் ?

உள்ளுக்குள் இருந்தபோதே
உதைத்திட்டேன் என்காலால்
உக்கிரம் நீ கொள்ளாமல்
உணவிட்டு ஏன் வளர்த்தாய் ?

தொப்புள் துறந்தபோதே
தொடர்பினை அறுக்காமல்
தொல்லைதந்த என்னை நீ
தோள்களில் ஏன் சுமந்தாய் ?

மெல்ல நடைபயின்றேன்
மெய்யாக நீ சிலிர்த்திட்டாய்
பொய்யாக நான் புனைந்த போதும்
புதுமையென ஏன் ரசித்தாய் ?

விரைந்து ஓடினேன்
வீதியிலே விழுந்துவிட்டேன்
என்னை நீ அடிக்காமல்
மண்ணை மட்டும் ஏன் உதைத்தாய் ?

அகம் அகல கல்வி தந்து
அடம்பிடித்த என்னை சுமந்து
அறிவுக்கண் திறந்தவளே
அம்மாவாய் வந்தவளே ..

எல்லாமும் எனக்களித்து
இல்லாமல் போனாலும்
பசியோடு பலநேரம்
ருசிமறந்து இருந்தவளே...

உன் நிழல் கூட அன்புசொல்லும்
நிசம் உரைத்த பின்னேதான்
அன்பென்றால் என்னவென்று
அறிந்திட்டேன் என்தாயே ...

கருவறைக்குள் நானிருந்த
காலங்கள் போலிங்கு
காத்திட யாருண்டு
கண்ணான என்தாயே ...

இல்லங்கள் தோறும் இங்கு
இயக்கங்கள் உண்டென்றால்
உன் அன்பின்றி அது ஏது
நீயின்றி எல்லாம் வெறும் கூடு ?

உலகத்தின் அன்பையெல்லாம்
உருண்டையாக நீ செய்து
உயிர்வரை ஊட்டிவிட்டு
உடல் இற்று இருப்பதேனோ ?

எதைக்கொண்டு ஈடுசெய்வேன்
எனைப்பெற்ற என்தாயே
பிறப்பற்று போனாலும்
கடன்பட்டு நான் நிற்பேன் ...

ஈரேழு பிறவி எடுத்து
ஈன்றவளே உன் கடன் தீர்க்க
வருகின்ற பிறவியெல்லாம்
வந்து சேர்வேன் உன்பிள்ளையாக...

வாடாது நீ வாழ...
உன்பாதத்தில் நான் சாக...
வரம் ஓன்று நான் வேண்டி
கரம் கொண்டு இறை தேடி

அக்கக்காய் எனைப் பிய்த்தாலும்
திக்கெல்லாம் உன் அன்பு சொல்லி
அண்டமெல்லாம் வென்று நிற்பேன்
அம்மாவாய் நீயே வந்துவிட்டால் ?
------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (25-Nov-14, 2:38 pm)
பார்வை : 360

மேலே