பழம்பலகை
மனித இனம் தோன்றிய அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன. நாட்டுப்புற பழக்கவழக்கங்கள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் இயல் நாட்டுப்புறவியலாகும். மண்ணின் மைந்தர்தம் மனக்கருவறையில் கருக்கொண்டு, உருப்பெற்று, உலா வரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியங்கள்.
நாட்டுப்புறவியலை, ""நாட்டுப்புற இலக்கியம்'', ""கலை'' என இரு பிரிவுகளில் அடக்குகின்றனர். இலக்கியங்கள், ""காலத்தைக் காட்டும் கண்ணாடி'' என்றால் நாட்டுப்புற இலக்கியம் ""சமுதாயத்தைக் காட்டும் கண்ணாடி'' எனலாம். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளே நாட்டுப்புறப்பாடல்களின் பொருளாகின்றன.
மக்களின் வாழ்க்கை தாலாட்டுப் பாடலில் தொடங்கி, விளையாட்டு மற்றும் காதல் பாடல்களில் வளர்ந்து, திருமணப் பாடலில் நிறைவெய்தி, ஒப்பாரிப் பாடலில் முடிவடைகின்றது. இன்ப துன்பங்களைப்பற்றி மக்களே பாடுவதால் இதனை ""மக்கள் இலக்கியம்'' என்பர்.
ஆணும், பெண்ணும் இணைந்ததுதான் குடும்பம் எனும் ஓவியம். ஓவியத்திற்கு மெருகூட்டுவது நிறங்களாகும். நிறமாக வருவதே குழந்தைச் செல்வங்கள். பெண்மையின் சிறப்பே தாய்மைதான். தாய்மை உணர்வின் வெளிப்பாடாகவே தாலாட்டு மலர்கின்றது. தாயின் நாவசைவில் தாலாட்டு எனும் நல்முத்து பிறக்கின்றது. இரு உள்ளங்களில் பிறக்கும் காதலைவிட, உடன்பிறந்தார் வாழ்க்கையைவிட, ஏன்
வேறு எந்த பாசத்தைவிடவும் பிள்ளைப் பாசமே ஆழமானது; வலிமை மிக்கது; உணர்ச்சிமயமானது. பெண்மைக்குத் தாய்மை கிடைத்துப் பூரித்துப் போகும் வாழ்வின் உயிர் நிகழ்வே பிள்ளைப் பேறாகும்.
மனிதன் பார்ப்பவை, கேட்பவை அனைத்தும் மூளையில் பதியமிடுகின்றன. பதிவுகள் எத்தகையதாக இருந்தாலும் நினைவுகளைப் பதிவது மனித உடற்கூற்றின் இயற்கை. அதனை வெளிப்படுத்தும் தன்மை மனிதர்களின் பண்புகளால் வேறுபடுகின்றன. குழந்தைப் பருவத்தில் பதிவுகள் எளிதாகப் பதியும் தன்மை வாய்ந்தவை. அதுவும் பாதி உறக்கத்தில் இருக்கும்போது கேட்கும் கருத்துக்கள் ஆழமாகப் பதியும் சக்தி வாய்ந்தவை. தாலாட்டு இசை உறக்கத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் பிஞ்சு மனத்தின் வளர்ச்சிக்குத் தூண்டுதலாகவும் செயல்படுகிறது.
கருவில் இருக்கும் குழந்தைக்கு 5 மாதம் முதல் காது கேட்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்து தாயின் இதயத்துடிப்பைத் தாலாட்டாகக் கேட்டு வளர்கிறது. பிறந்த பிறகு அந்தப் பாட்டு கேட்காமல் குழந்தை விழிக்கிறது. சிலநேரம் அழுகின்றது. அழுகின்ற குழந்தை தாய் தூக்கியவுடன் தன் அழுகையை நிறுத்திவிடுகின்றது.
அதற்காக குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருக்க முடியுமா? அதனாலேயே பழந்தமிழர், தாலாட்டு எனும் சீராட்டைக் கண்டுபிடித்தனர். தாலாட்டின் மூலம் கிராம மக்களின் பாரம்பரியம் மற்றும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். தாலாட்டு என்பது உறவுகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும், மரபுகளையும் அறிவுறுத்துவதாக இருக்கும். ஆனால், இன்றைய அவசர ஓட்டத்தில், உணர்வுகள் பதுங்கிக் கொள்ள, ஆடம்பரமும், பொருளியல் வளமையும் மட்டுமே முன்நிற்கின்றன. அன்பு, பாசம், நேசம் போன்றவை தூரமாய் விலகி நிற்கின்றன.
தாலாட்டுப் பாடல்களின் இசையும், சந்த லயமும் மக்கள் அப்பாடல்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. எளிமையான, இனிமையான பாடல் வரிகள் அனைவரையும் கவர்கின்றன. இலக்கியம் ஒருபுறம் நவீனப்பட்டுக் கொண்டே வந்தாலும், மறுபுறம் தன் ஆதி வடிவத்தை வெவ்வேறு விதங்களில் புதுப்பித்துக் கொண்டே வருகிறது. தாலாட்டு என்ற வாய்மொழிப்பாட்டு, மறைந்து வழக்கொழிந்து கொண்டுவரும்போது, அதே தாலாட்டு எழுத்து மொழியில் ""அம்மானை'' என்று மாற்றுருவம் பெற்று படைப்பிலக்கியமாக மக்கள் மத்தியில் வலம் வருகிறது.