சர்க்கரைக் கடல் -கவிஞர் வெமாதவன் அதிகன் - நூல் அறிமுகம் -பொள்ளாச்சி அபி

சர்க்கரைக் கடல்.! -கவிஞர் வெ.மாதவன் அதிகன் -
நூல் அறிமுகம் -பொள்ளாச்சி அபி
--------------------------- -----------------------------------------------
கவிஞர் வெ.மாதவன் அதிகன் அவர்கள்,தனது கவிதைகள் வழியாக,நம் மீது செலுத்தும் ரசனைக்கான ஆளுமை,இத்தொகுப்பின் தலைப்பிலிருந்தே துவங்கி விடுகிறது.

இச்சமூகத்தின் ஒட்டு மொத்த அழுக்குகளையும் நதியாக உள் வாங்கும்,உப்புநீரின் பெருந்தொகுதியாக விளங்கும் யதார்த்தக் கடலை,தனது கற்பனையால் சர்க்கரைக் கடலாக மாற்றிவிட யத்தனிக்கும் ஒரு முயற்சியின் துவக்கப் புள்ளியாகவே இத்தலைப்பை நான் காண்கிறேன்.

சர்க்கரைக் கடல் என்பதை,ஒரு சமுதாயத்தின் மேம்பட்ட அடையாளமாக காணத் துடிக்கும் ஒரு சாமானிய மனிதனின் லட்சியவேட்கை,இங்கு தலைப்புக் கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.

சாதியும்,மதமும்,ஊழலும்,காமமும் கட்டுக்கடங்காமல் கலந்துகொண்டே இருக்கின்ற, வெம்மை மிகுந்த இந்தச் சமூகநதி,காலக் கடலை மேலும் மேலும் உவர்ப்பாக்கிக் கொண்டே செல்கிறது.

இவற்றில் வீசப்படும் சுயநல வலைகளில்,சிக்குகின்ற மீன்களெல்லாம் மனித மனங்களின் வக்கிர முகங்களையே கொண்டிருக்கிறது. இதனை உண்டு; பழக்கப் பட்டவர்கள் நாளடைவில் வன்முறைகளை நிகழ்த்தும் வாள்களாய் உருமாறிப் போகிறார்கள் என்பதே அன்றாட யதார்த்தமாகி வருகிறது.ஆனாலும்,நதியின் ஓட்டமும்,உப்புக் கடலின் ஆர்ப்பரிப்பும் இன்னும் நின்றபாடில்லை.இதனால்,வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே சந்திக்க விரும்பும் சாதாரண மனிதனின் மனதில் நிலவும் விரக்தி,கவிஞனின் பார்வையில்,சூன்யமாகக் காட்சியளிக்கிறது.

அந்த வெறுமையை வேடிக்கை பார்ப்பதில் மட்டுமே,மக்களுக்கான படைப்பாளி காலத்தைக் கடத்துவதில்லை.அவன் அந்த சூனியத்தையே கடக்க நினைக்கிறான். அங்குதான் மானுடத்தின் மீதான அக்கறை கவிதையாகப் பிறக்கிறது.அந்தக் கவிதையின் கருவாக,சமூக மனிதனின் ஒரு குறியீடாக தன்னையே உருவகித்துக் கொள்ளும் கவிஞர் மாதவன்,எளிமையும்,அன்பும் ததும்புகின்ற வரிகளாக அறிவிப்பது என்னவெனில்..,

-"குளிர்ச்சி மிகுந்த நீர்,
கொஞ்சம் கூழாங்கற்கள்,
சில மீன் குஞ்சுகளைச் சுமந்து கொண்டு,
இச்சூனியத்தை விட்டுக் கடக்கிறேன்.
ஆம்,நானொரு நதியாக வேண்டும்.
இவ்வூழி முடிவில்,
நானொரு சர்க்கரைக் கடலாயிருப்பேன்.
அப்போது,
வாள்களென் கரையில் துருப்பிடித்துக் கிடக்கும்..!".-

தனது வாழ்நாளின் லட்சியமாக வன்முறைகளின் மரணத்தை,துருப்பிடித்த வாட்களின் மூலம் இவர்; காணவிரும்புகிறாரென,ஒரு எளிய வாசகனாக நான் இந்தக் கவிதையைப் புரிந்து கொள்கிறேன்.வாசகர்களும் அவ்வாறே புரிந்து கொள்ள இந்தக்கவிதை வாய்ப்பளிக்கிறது என்றும் நம்புகிறேன்.

இத்தொகுப்பில் பல்வேறு விதமான கவிதைகள் இருந்தாலும்,சில கவிதைகளின் ஊடாகப் பரவிநிற்கின்ற,வெளிப்படையாகவும்,நுட்பமாகவும் கேலிக்குள்ளாக்கப் படுகின்ற உலக அறங்கள் குறித்துப் பேசுகின்ற கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

பொதுவாக அறமெனப்படுவது யாதெனின்.., என்று நாம் ஒரு பட்டியலை இட்டால், கொலை செய்யக் கூடாது,திருட்டு,கொள்ளை கூடாது,பெண்களை மதிக்கவேண்டும், பிற உயிர்களுக்கு துன்பம் இழைக்கக் கூடாது.. என்பதிலிருந்து துவங்கி,இன்னும் ஒழுக்கத்தின் பகுதிகளாக இருக்கின்ற எத்தனையோ விஷயங்களைப் பட்டியலிடலாம்.

திருக்குறள் துவங்கி வரலாற்றின் மிகச் சமீபத்தில் தோன்றிய உலகளாவிய மதங்கள் வரை வலியுறுத்திய அறங்கள் என..,எழுத்துக்களாகவும், நம்பிக்கைகளாகவும் எத்தனையோ இருக்கத்தான் செய்கின்றன. இன்னும் சொல்லப் போனால்,சிந்திக்கத் தெரிந்த மனிதனாக மாறியது முதல் நாகரீகத்தையும், பண்பாட்டையும் வளர்த்துக் கொண்டிருந்ததாக,வரலாறுகளை எழுதிவைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால்,மிகச் சாதாரணமாக இச்சமூகத்தில்,பின்பற்றவேண்டிய மானுடஅறத்தையே மதிக்காத மனிதர்கள் நிறைந்ததாக இன்றைய உலகம் இருக்கிறது எனும் யதார்த்தம் நமது முகத்தில் அறைவதை மறைக்கமுடியாத நிலையில்தானே இருக்கிறோம்.

ஊனமுற்றவர்களுக்கும்,முதியவர்களுக்கும் தனது இருக்கையை தந்து உதவாத பேருந்து பயணி முதல்,காசா நகரின் மீது குண்டுமழை பொழிகின்றவர் வரை.. உதாரணங்களாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.அறங்களை அறிந்தும் அதனை மதிக்காத,மதிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றவர்களே இன்று அதிகம்.

மனிதனை,மனிதனே மதிக்காத நிலையில்,வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிநிற்கச் சொல்லி,வளர்த்தெடுக்கப்பட்ட பரம்பரைக்கு இன்று விலங்குகள் தாவரங்களென மற்ற உயிர்களைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை. தான் உயிர்வாழ்கிறோம் என்ற பெருமிதமும்,கர்வமுமே மனிதனுக்கு போதுமானதாக இருக்கிறது.இதுவே மற்ற உயிர்களை மதிக்காத திமிராகவும் அவனுக்கு வளர்ந்துள்ளது.

இந்த மனிதத் திமிரை கண்டணம் செய்ய வந்த கவிஞரின் வரிகளாக,
-"நீங்கள்,
புகைத்துவிட்டுப் போட்ட சிகரெட்டின்,
திமிர்பிடித்த நெருப்பு,
இவ்வனத்தை எரித்துக் கொண்டிருக்கையில்,
தன்னுடன் பறக்கப்பழகாக் குஞ்சுகளை,
மரங்களின் உச்சாணிக் கொம்புகளில் இருத்திவிட்டு,
தப்பிச் செல்லும் தாய்ப்பறவை,
உலகின் அறங்களின் மீது
எச்சங்களை உமிழ்ந்து செல்கிறது.."-

இந்தக்கவிதை காட்டுகின்ற காட்சியும்,சூழலும்,கானுயிர்கள் மீது அக்கறை கொண்டுள்ள நமது மனதிற்குள் விரியும்போது, அந்தத் தாய்ப்பறவையின் நிலையைப் போலவே நமது மனமும்,உடலும் தகிக்கிறது.

அறங்களின் மீதான சாடல்கள் இதனோடு மட்டும் நின்றுவிடவில்லை. - "உலகின்,அறங்களும்,நீதிகளும்
போதிக்கப்பட்ட பின்னும்,
ஒரு தேக்கரண்டிக் காமம்,
எல்லாவற்றையும் எரித்துவிடுகிறது.".- ------என்றும் ஒருகவிதையில் சொல்லும் கவிஞர் மாதவன்,

அறங்களை மதிக்காத சமூகத்தின் உற்பத்திப் பொருளாக வன்கொலையும், கற்பழிப்பும்,அதிகாரத்திமிரும்,எதிர்வினையாற்றாத கள்ள மௌனமும் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலும்,இதனால் பாதிப்பிற்குள்ளாகும் மனித உயிர்களின் துயரத்தை,பெரும் எரிச்சலோடும்,ஆதங்கத்தோடும்,சமீபத்தில் நிகழ்ந்த சம்பவத்தோடு பொருத்தி மற்றொரு கவிதையில் பதிவு செய்துள்ளார்.

அக்கவிதை,
- "மீன்களும்,நிலவும் வராத,
கடவுளின் ஆசி பெற்ற இரவில்,
வன்கொலை செய்து,
தூக்கிலிடப்பட்ட
இரண்டு பட்டாம்பூச்சிகளின் ஆன்மா,
தடித்த அதிகாரத்தின் ஆண் குறிகளின் மீதும்,
வெறிபிடித்த நம் மௌனங்களின் மீதும்,
மூத்திரத்தைப் பீய்ச்சி அடித்துவிட்டுப் பறக்கிறது..".-என்பதாக முடிகிறது.

இத்தொகுப்பில்,மேலும் சில கவிதைகள்,மனிதர்களால் மீறப்பட்ட அல்லது மனிதர் களால் மதிக்கப்படாத அறங்களின் மீதான சீற்றத்தை வெளிப்படுத்துகின்றன.

-"பசி ஏப்பத்தின் வலியறியாது
புளிச்ச ஏப்பமென நினைத்து
உன் அட்சயப் பாத்திரத்திலிருந்து
பீடாத்துண்டுகளை அளிக்கும்
உன்னை எப்படிக் கடவுளென்பது.?,
ஆனாலும்..
நீதான் கடவுளாக வாய்த்திருக்கிறாய்..!"-- என கடவுளரால் தவிப்புக்குள்ளான மனிதக்குரலாக சில கவிதைகளும்,

-துப்பாக்கியின் நிழலில்
உயிர்வாழ்தல் சுதந்திரமல்ல,
சூனியமெனத் தெரிந்தபின்பும்,
உயிர்நீட்டித்தலென்பது..
எழுதப்படாத சாபம்தான்..!
என்ன செய்வது
இன்னமும் மீதமிருக்கிறது
எம் நிலமும் பொழுதும்.!" - என,அகதிகளாக வாழும் மனிதர்களின் நிலையைச் சொல்லுகின்ற சில கவிதைகளும்,
-"யாருமற்ற வெள்ளிக் கிழமையொன்றில்,
அவளென் வீடு வந்திருந்தாள்,
அதுவரை மௌனித்திருந்த அறைகள்
இசையால் நிரம்பின.!".-என்பது போன்று காதலாக சில கவிதைகளும் இத் தொகுப்பில் உள்ளன.

“வள்ளுவனைப் போலவே,
வாசுகியை அழைத்தேன்.
வாளிதான் வந்து விழுந்தது.”--என்று மேம்போக்கான நகைச்சுவைக்கவிதையாகவோ,
-நான் கனவுகளை வெறுக்கிறேன்,
காரணம் நீ வருவதால் அல்ல,
உன்னுடன் இன்னொருவன் வருவதால்..-என்று, காதலின் தீவிரம் பேசுகின்ற நகைச்சுவைக் கவிதையாகவோ,
-வாத்தும், வாத்தியாரும் ஒன்றுதான்,
வாத்தும் முட்டை போடுகிறது,
வாத்தியாரும் முட்டை போடுகிறார்..என்று ஒப்பிடுகின்ற நகைச்சுவைக் கவிதையாகவோ,நேரத்தைக் கொல்கின்ற கவிதைகள் எதுவும் இத்தொகுப்பில் இல்லை என்பது பெரிதும் ஆறுதல் அளிக்கும் விஷயம்.

மாறாக நல்ல கவிதைகளின் மீது விருப்பம் கொண்ட அனைவருக்குமான இத்தொகுப்பில், உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு அருமையான அங்கதக் கவிதை,
-- ஒரே சமயத்தில்
கடவுளுடனும்,சாத்தானுடனும் உரையாடுவது
துயர்மிகு சுவாரஸ்யம்..,
கடவுள் தன் நீதிகளையும்
அறங்களையும் போதித்துவிட்டு
நகர்கையில்,
சட்டைப்பையிலிருந்து விழுகிறது
சாத்தானின் வீட்டுச் சாவிக்கொத்து,
பேடித்த முகத்தோடு
சாத்தானிடம் திரும்புகையில்
மதுவந்தியை இசைத்துக் கொண்டு
கடவுளின் புத்தகத்திலிருந்து
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறான்,
நான் மீண்டும் திரியத் தொடங்கிவிட்டேன்.!"--

மிக அழுத்தமான முரண்களைச் சொல்லும் இக்கவிதையைப் போலவே,வாசிக்க சுவாரஸ்யம் கூட்டும் இன்னும் பல கவிதைகள் இத்தொகுப்பில் உண்டு. மேலும், சில கவிதைகள் தலைப்புடனும்,சில கவிதைகள் தலைப்பின்றியும் இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு கவிதையைச் சுட்டிக்காட்டுவது அல்லது அது குறித்து எழுதுவது எனில்,தலைப்புகள் இருந்தால் வசதியாய் இருக்கும்.தலைப்புகளைத் தவிர்த்தற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இருக்கிறதா என,கவிஞரிடம் தெளிவுபடுத்திக் கொள்ளவேணடிய ஒரு சந்தேகம் எனக்குண்டு..!

-அன்புடன்
பொள்ளாச்சி அபி - 30.11.2014
---------------------

சர்க்கரைக் கடல்-கவிதை தொகுப்பு-கவிஞர் வெ.மாதவன் அதிகன்
நூல் அறிமுகம்-பொள்ளாச்சி அபி.
இடம் -கோவை இலக்கிய சந்திப்பு-நிகழ்வு.48
நரசிம்ம நாயுடு நினைவுஉயர்நிலைப்பள்ளி –கோவை

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (1-Dec-14, 12:48 pm)
பார்வை : 272

சிறந்த கட்டுரைகள்

மேலே