வென்றிடுங்கள் என்றும்நீங்கள்
பள்ளிப் பேருந்தில்
துள்ளி அமர்ந்திட்டு
அள்ளித் தெளிக்கும்
கள்ளமிலா சிரிப்புடன்
காட்சிதரும் கன்றிது !
பூத்திடும் புன்னகையில்
புரிகிறது நீயுரைப்பதும்
அறியாத வயதெனக்கு
அறிவை வளர்த்திடவே
அடியேனின் பயணமிது !
விளங்காத பூமிதனில்
துலங்காத நுண்ணறிவை
கலங்காத நெஞ்சுடனே
கற்றறிய புறப்பட்டேன்
ஊரறிந்த உண்மையிது !
என்னைநம்பி எம்வீடும்
எங்களைநம்பி தாய்நாடும்
ஏக்கமுடன் காத்திருக்க
தாக்கமுடன் நாங்களும்
பயணிக்கும் பருவமிது !
வழியனுப்பும் பெற்றவளின்
விழிகளில் காண்கின்றேன்
வளமுள்ள வாழ்வெனக்கு
உருவாக்கும் குறிக்கோளை
நிறைவேற்றும் பார்வையது !
பதிலுரைத்தேன் என்விழியாலே
கவலைநீக்கிடு எனதன்னையே
உழைத்திடுவேன் உண்மையாய்
தொட்டிடுவேன் சிகரத்தையும்
உள்ளத்தில்கொள் உறுதியிது !
சமுதாயமெனும் வயல்வெளியின்
பயிராய்வளர்ந்து பயன்தரவுள்ள
முளைத்திட்ட நல்வித்துக்களே
முயன்றிடுங்கள் முத்துக்களே
வென்றிடுங்கள் என்றும்நீங்கள் !
பழனி குமார்