மெல்லியலாள்

காமன் அரசவையில்
கவி பாடும் வண்டினங்கள்
பேதை இவள்.....
ஓரப் பார்வை கண்டு
போதையில் திண்டாட.....!!
உருகி உறைந்த மனம்
நடுக்கத்தில் துடிப்பது போல்
இடையிடையே இமையிரண்டும்
நெருக்கத்தில் துடித்திட...!!
தீட்டிய கண்மையில்
இருண்ட உலகம்...
சிமிட்டுகின்ற விழித்துடிப்பில்
மின்மினியாய் மின்னிட....!!
ஒற்றையடி பாதையிலே
ஒய்யாரமாய் வளர்ந்த
மூங்கில் இரண்டு
உணர்ச்சி கொண்டு
உரசுகையில்...
தெறிக்கிற தீப்பொறியை
அணைக்கின்ற சுனை போல...
நெற்றியில் இமையிரண்டின்
இடை நடுவே பொட்டு...!!
காதோரம் புனைந்த
வளையம் அது
காற்றில் இசைபாட
செறிந்து விழும் குழலும்
அது கொண்ட மணமும்
மனம் மயக்கிட....!!
நடையில் நளினமும்
உடையில் நேர்த்தியும்
சிவந்த இதழும்
செவ்விளநீர் கன்னமும்..!!
ஓரப்பார்வை பாவமும்
அதில் கொழிக்கும்
பெண்மையின் நாணமுமாய் ...!!
தீட்டி வைத்த ஓவியம் போல்
இவள் செல்லும் தெருவில்
மொய்த்திடும் ஆண் வாசனை...!!
பூங்கோதை இவள்
அசைவுகளும் மெல்லிய
அங்கங்களின் நெளிவுகளும்
பிரம்மனுக்கும் கிறுக்கேத்த
சுழலும் அகிலம்
சொக்கி நிற்கும் ஒரு கணம்...
இவள் அழகு கண்டு......!!!