பிரிதல்

பிரியத்துடன்
பிரிதல்
பிணக்குற்றுப்
பிரிதலிலும்
நலமென்பவளே !
பேருந்தொன்றில்
யாரோவொரு
கர்பிணிப் பெண்ணுக்கு
எழுந்து நீ
இருக்கை கொடுத்ததை
நான் பார்த்த
அன்று தான்
என்
இதய இருக்கையில்
எழுப்பவே முடியாத படிக்கு
நீயாகவே
இடம் பிடித்தாய்
நினைத்தவுடன்
காலி செய்வதற்கு
என் மன அறை யொன்றும்
மண் அறையல்ல !
நீ
கடித்துத் தந்து
என்னிதயம் வரை
இனித்த
நெல்லிக் காயினை
என் நாவு மறந்தாலும்
அதியமானையும்
அவ்வையையும்
மறக்கவே மறக்காத
என்னிதயத்தை
என்ன செய்ய ?
எரிந்து முடிந்தவுடன்
துடைத் தெரிந்து
விட -
நீயொன்றும் மெழுவர்த்தியல்ல
எரிந்து முடிந்த
பிறகும்
மணம் வீசும்
என் உயிரின் ஊதுபத்தி நீ !
அவசரத்திற்காக
அடகு வைக்க
கழட்டிய இடத்தில்
ஈர்க்குச்சியாய்
மாட்டிக்கொள்ள
காதலொன்றும்
கம்மலல்ல பெண்ணே !
அடுத்த
உன் நகர்தலின்
காலடியில்
தவழுமொரு
இதயத்தின் குழந்தையை
நசுக்கி மேற்செல்ல
முடியுமெனில்
தாராளமாய் செல் .