சாதி
சாதிப்பதர்க்குத் தடையாக இருக்கின்றத் தீ!. சமுத்துவ நெறியினை சரியவைக்கின்றத் தீ! "சாதி இரண்டொழிய வேறில்லை" என சான்றோர்களின் அடிப்படை உண்மையினை நடைமுறைப்படுத்தவிடாமல் தடையாய் கொழுந்துவிட்டு எரிகின்றத் தீ! "ஆண் சாதி, பெண் சாதி" என இரு சாதியைத் தவிர ஏனைய சாதிகளை மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கிக்கொண்டு தன்னையே அழித்துக் கொள்ள இந்தத் தீயில் சமத்துவத்தை சாம்பலாக்கிக் கொண்டிருக்கின்றான்.தீப்பந்தம் வெளிச்சத்தை மட்டும் தருவதில்லை. தேவைப்பட்டால் மூட்டியவனையும்,மூட்டியவனால் மற்றவரையும் கறுகவைத்துவிடும். மனிதர்கள், சாதி சங்கங்களை உருவாக்கி அதன் மூலம் தத்தம் சாதி சனங்களை நிம்மதியாக வாழவிடாமல் சாதி சண்டைகளை சமுதாயத்தில் பரப்பிவிடுகின்றனர். சாதி சங்கத்திற்குத் தலைவனாய் இருப்பவர்கள் மட்டும் சாதுர்யமாக வாழக்கற்றுக் கொண்டுவிடுகிறார்கள். இதனை அறியாத சாதி வெறிப் பிடித்த மனிதர்கள் சாதித் தீயைக் கையில் எடுத்துக்கொண்டு பிற சாதி சனங்களை பயமுறுத்தி வாழத் தெரியாமல் வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள். கடல்போல் பரந்துக் கிடந்த மனித சமுதாயம், அலைகளைப் போல் உருமாறி தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொண்டுவிடுகிறார்கள். இந்த மனிதர்களின் செயலைப் பார்த்தால், "சிங்கமும், எருதும்" கதைதான் நினைவுக்கு வரும். கூட்டமாக மேய்கின்ற எருதுகளை, சிங்கம் ஒன்று பசியாற்றிக் கொள்ள பாய முடியாமல் தவிக்கும். ஆனால் அந்த சிங்கம் பொறுமையாக அந்த எருதுக் கூட்டங்களையே பார்த்துக் கொண்டிருக்கும். எருதுகளுக்குள் பேதைமை வரும் வரை தன் பசியை அடக்கிக் கொண்டிருக்கும். ஒருநாள் எருதுகளுக்குள் சண்டை வந்து தனித் தனியாக மேய ஆரம்பித்தன. தனியாக மேய வந்த எருதுவினை சிங்கம் பாய்ந்து தன் பசியினை ஆற்றிக் கொண்டதைப் போல், சாதி சங்கங்கள் என்ற சிங்கம், மனித எருதுகளை அவ்வப்போது சாதிப் பேதமையில் பிரித்து "தனி சாதி"யாக வாழும்போது அழிக்க திட்டம் வகுத்து நிம்மதியாக வாழவிடாமல் அழித்து விடுகின்றன. சமுதாயத்தில், "சமூக நீதி" என்ற பெயரிலும், "பசுமை தாயகம் " என்ற பெயரிலும் சாதிப் பூசல்களை பரவவிடுகின்றனர். சாதிக்கப் பிறந்த மனிதன், இந்த சாதித் தீயால் செத்து மடிகின்றான். தினசரி நாளேடுகளில் சாதியால் வெட்டு, குத்து,கொலை என மனிதன் கூறுப்போடப்படுகின்றான். "ஓ" மனிதா! சிறு தீக்குச்சி விளைக்கையும் ஏற்றும், விபரீதத்தையும் விதைக்கும். நீ கையில் ஏந்தியுள்ள "தீ" சமுதாயத்தில் சாதனை என்ற விளக்கை ஏற்றப் போகிறதா? இல்லை சாவினை விதைக்கப் போகின்றதா? சாவு மனிதனுக்கு இயற்கையாய் விதிக்கப்பட்டதாகும். அதனை செயற்கையாய் உருவாக்கி விடாதே. வாழும் வயதில் வாழோவோரை வாழவிடு. அல்லது வாழ வழிவிடு. உன் சாதித் தீயால் சில சாதனை --யாளர்களைக் கொன்றுவிடாதே. சாதித் தலைவன் சொல்லைக் கேட்டு நீயும் சாய்ந்துவிடாதே. சாதிக்கு ஏதடா பிறப்பு. அது சாதிப்பது மரணம் ஒன்றுதானடா விதிப்பு. மனித சமுதாயம் அடிமைப்பட்டு இருந்தக் காலத்தில் எங்கடா இருந்தது இந்த சாதிசங்கங்கள். அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டப் பிறகுதானே சாதி சங்கங்கள் தோன்றலாயச்சு. எல்லாம் பதவி சுகத்திற்காக, சுயநல சுகத்திற்காக, அழிவுப் பாதையை உருவாக்குவதற்காக இந்த சாதி சங்கங்கள் "தீ"யாக பற்றி எரிந்துக் கொண்டு இருக்கிறது. இதனை சமத்துவம் என்ற நீரால் அணைக்க ஒன்று திரளுங்கள். சமத்துவம் மீண்டும் தோன்றுமா? இந்த சாதித் தீ அணையுமா?