மணலூர் மணியம்மை - யாழ்மொழி
அழகிய தஞ்சையிலே
அவதரித்த அன்னையவர்
மணிமணியாய் மக்கள்நெஞ்சில்
மாலையான மங்கையர்குலமகள்
மணலூர் மணியம்மை கதை யிதுவே...
விவரமறியா விரிய லவரின்
விதியொன்றும் அத்தனை அழகில்லை
பணம்படைத்தவன் பார்வைப்பட - அழகு
பதுமையாகிறார் இரண்டாம்தாரம்...
ஏச்சும் பேச்சும்
மூத்தவளின் முதலாளித்தனமும்
எழிலரசி வாழ்வினை சீர்குலைக்க
ஏற்றவனும் ஓர்நாள் இறந்திடவே
விதவையென் ராகிறார் வெகுளிப்பெண்ணும்...
ரவிக்கையும், செருப்பும், தலைமயிரும்
சூறையாடப்பட்டன சடங்குகளால்....
ஆங்கிலமும் சட்டமும் கணவன் வீட்டின்
அடுக்களையில் இருந்தபடி படித்தறிந்தவர்
அடக்குமுறை யென்ற அவலம்தனை
அறவே ஒழித்திட தீர்மானித்தார்...
அலங்கார சிலையாக ஒப்பனை செய்து - முதல்
புரட்சியினை வீட்டிலே தொடங்கிவைத்தார்...
அண்ணல் காந்தியிடம் ஆசிப்பெற்று
மதுவிலக்கு, தீண்டாமை மட்டுமின்று
கதர் பிரச்சாரத்திலும் தன்னை ஈடுபடுத்தினார்
நூற்றுக்கும் மேற்பட்ட ஆடவர்களில்
ஒற்றை பெண்மணியாய் குரல்கொடுத்தார்...
நின்றுவிடாத அவர்சேவை
நிலபிரபுக்களின் பக்கம் திரும்பிடவே
தாழ்த்தப்பட்ட மக்களின் தரம் உயர
தங்கமகள் சேரிகளில் தடம் பதித்தார்....
சாட்டையால் அடிப்பதும்
சாணம் கரைத்து குடிக்க செய்வதும்
மனையாளை கணவன்முன் கற்பழிப்பதும்
நிலபிரபுக்களின் நீதியாக - அந்த
அநியாயத்தை எதிர்த்து போராடினார்...
ஆத்திரமடைந்த அதிகாரவர்க்கம்
வாழைமர தோப்புக்குள் வழிமறித்து
"பெண்ணாக இரு" என்று சொன்னபடி
பேயாக மாறியே தாக்கிசென்றனர்.....
அடிபட்ட வயலினைவிட - அந்த
வார்த்தையே வலித்தது மணியம்மைக்கு....
புரட்சிக்காக அலங்கரித்தவர் - அதே
புரட்சிக்காக தலைமயிர் மழித்து
கதர்வேட்டி சட்டை துண்ட ணிந்து
ஆண்களை போலவே உருமாறினார்
ஒற்றைகாளை பூட்டிய வண்டி - அதையும்
ஓட்டிப் பழகி கற்றுகொண்டார்....
ஆணாகவே தன்னை யெண்ணியவர்
அஞ்சாமல் துணிந்து போராடினார்
அயராத போராட்டம் மேற்கொண்டவர்
அடிமைத்தனம் ஒழிய பாடுபட்டார்
எத்தனை எத்தனை கொடுமைகள்
எண்ணிக்கையில்லா பொய்புகார்கள்
நீதிமன்றம் செல்வதும்
நியாயம் கேட்பதும் - அந்த
நேர்மையின் வாழ்க்கையாக மாறியது
ஒரு நள்ளிரவில் கைதாகி
சிறைசென்றவர் - அங்கும்
ஆயுட்கைதிகளின் அடிமைத்தனம் - கண்டு
அவர்களுக்காகவும் போராடினார்...
இன்றும்
சிறையிலே பிறக்கும் குழந்தைகளுக்கு
சத்துணவும் உடையும் கொடுப்பதற்கு
காரணமானவர் இந்த சத்தியவதியே
இத்தனை கருணை நிறைந்தவரின்
கடைசி நொடியது மிகக்கொடிது
தப்பித்துவந்த கலைமானொன்று
அன்னையின் வயிற்றில் குத்தியது
இரத்த வெள்ளத்தில் அவர் உயிரும் பிரிந்தது....
ஒவ்வொரு நொடியும் சேவைக்கேன்றே
ஒப்படைத்த மங்கையின் புகழ்பேச
வரலாற்று ஏட்டுக்கோ வார்த்தை பஞ்சம்...
பெரியாரின் மணியம்மை ப்போல - யாவரும்
இந்த எளியாரின் தெய்வத்தை அறிந்திடவில்லை
சரித்திரத்தின் சிகப்பு பக்கங்களில் - சிலர்
சாதனை முழுதாய் இடம்பெறுவதில்லை.....
தலைவர்கள் தலைவர்களென்று போற்றுகிறோம்
அவர்கள் புகழுயர மாண்டவர்கள் தகவலெங்கெ..?
அகிம்சையில் வந்தது சுதந்திரமானால் - அதற்கு
விலையான வீரர்களின் விவரமெங்கெ...?
இன்னும் நாம் அறிந்திடாத
மணியம்மைகள் எத்தனை இங்கே...?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
