நகர வாழ்க்கை நரக வாழ்க்கை
ஆலவிழுதில் விளையாடி
அரச மரத்தில் இளைப்பாறி
வரம்பினை வழியாக்கி
வயல்நண்டு பிடித்து வந்து
வக்கனையாய் வறுத்து தா
ஆத்தாவிடம் அடம்பிடித்து
ஓடைகரை ஓரம் சென்று
ஒன்றுகூடி நாம் உண்டு
சுற்றித்திரிந்த காலமது
கிராமத்தோடு முடிந்து விட
காலில் சக்கரம் பூட்டிக்கொண்டு
ஓடுகிறோம் நகரத்தில் .
வெள்ளைக்கார உணவென்று
விஷம் கலந்த உணவுகளை
விரும்பி தினம் உண்ணுகின்றோம்
சுத்தமான காற்று இல்லை
சுவையான உணவு இல்லை
சுகமான உறக்கம் இல்லை
இரவு பகலாய் உழைத்தும்
மொத்தமாய் எதுவும் இல்லை
பெயரில் தான் நகர வாழ்க்கை
நிஜத்தில் எனக்கு இது
வெறுப்பான நரக வாழ்க்கை ..!!