பேனா
கணினி வருவதற்கு முன்னும்
கண்ணே உன்னைத்தானே காதலித்தேன்.
உண்ணாது உறங்காது இருந்தாலும்
உன்னை மறவாது இருந்தேன்.
உன்னோடு பயணிக்கும் போதெல்லாம்
புதிதாய் பிறப்பேன்
விண்ணோடும் வெயிலோடும் உலாவி
வேதனைகள் மறப்பேன்.
சந்தை முகப்பில்
சீர்பல வண்ணத்தில்
சிரித்து நின்றாலும்
எந்தன் முகம் நாடுவதெல்லாம்
கருப்பான உன்னையன்றோ
செருக்கெடுத்து யென்னெழுத்துக்கள்
சீரழிந்து நிற்கையில்
செதுக்கி உருவேற்றி
சிற்பமாக்கியது நீயல்லவா
நித்திரையில்லா இரவுகளில்
நீதானே என் துணைவி
நீயும் நானும்
தீட்டியதெல்லாம் தீஞ்சுனை அருவி .
மணல் நிறம் காட்டும்
மடு நீர் போல
என் மன பரிமாணம் காட்டும்
கண்ணாடி நீ
நான் சிரித்தபோது நீயும் சிரித்தாய்
அழும்போது
உனைக்கொண்டு எழுதிய எழுத்தெல்லாம்
அழத்தானே வைத்தாய் .
எண்ணங்களையும் காகிதங்களையும்
இணைத்த இடைப்பாலம் நீ
என் ஆன்மா நீ
என் தமிழ் வெண்பாவின்
தேமாவும் புளிமாவும் நீ
இந்தக் கணினியும் மறைந்து
இந்த விஞ்ஞானம்
இன்னொரு குழந்தை பிரசவிக்கும்
அப்போதும் நீ
என்னோடு இருப்பாய்
இதோ கேள்
இது
நானெழுதிய உயில்.
``என்னை எரியூட்ட வேண்டாம்
என் கல்லறையில் என்னோடு
என் பேனாவையும் புதைத்து விடுங்கள்....
என்னைத் தின்னும் எறும்புகள்
என்பேனாவையும் தின்றுவிட்டு போகட்டும்.''