உலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித இரத்தமும்
அறிவியல் உலகில் அதிரடித் திருப்பு முனையாக, உலகத்தை பிரமிக்கச் செய்த ஒரு தகவல் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடலிலிருந்து இரத்தம் வெளியேறிய கண நேரத்தில், காற்று அதன் மேல் பட்டவுடன், இரத்தம் இறுகிக் கெட்டியாகி, கட்டியாகிவிடும். இதுதான் இரத்தத்தின் இயல்புத் தன்மை. சிவப்பணுக்களின் ஆயுள் என்பது சுமார் 120 நாட்கள் மட்டுமே. அதற்குள் அவை தன் உருவிழந்து மறைந்து விடும். ஆனால் சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனிதன் ஒருவனின் உடலிலிருந்து இரத்தம் எடுக்கப்பட்டு, அன்றைய மனித இரத்த செல்களின் தன்மையும் கண்டறியப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பழமையான இரத்தம்.. 5300 ஆண்டுகள் ..!
ஓட்சி என்ற பனி மனிதனை 1991ல், இரண்டு மலையேறிகள் ஆஸ்திரிய இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள ஆல்பைன் பனியாற்றிலிருந்து கண்டெடுத்தனர். தற்போதைய அறிவியல் தகவல்படி, உலகில் அதிக வயதுள்ள நன்றாக இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்டுள்ள மனித மம்மி இது மட்டுமே. இதில் பல ஆராய்ச்சிகள் செய்து, இந்த கற்கால மனிதன் ஒரு காயத்தினால் உடனே இறந்திருக்கிறான். பனி மனிதன் மிக வன்மையாகத் தாக்கப்பட்டு, கொடூரமான முறையில் இறந்திருக்கிறான் என்றும் கண்டறிந்துள்ளனர். இந்த உடலைக் கண்டுபிடித்து 23 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட, இதனைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முடிந்தபாடில்லை.
ஆஸ்திரியாவிலுள்ள ஆறாவது உயரமான மலை இது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,210மீ (10,500 அடி). ஆனால் இதில் ஜோசப் ராபைனேர் மற்றும் தொயோடோர் காசெரெர் (Josef Raffeiner and Theodor Kaserer.) இருவரும் அந்த மலை மீது ஏறுகின்றனர். இதன் மலைச் சரிவில்தான் ஹெல்முட் சைமன் மற்றும் எரிக்கா சைமன் (Helmut Simon and Erika Simon)இருவரும், 1991ம் ஆண்டு அங்குள்ள பனியாற்றில் ஒரு மனிதனைக் கண்டுபிடிக்கின்றனர்.
ஓட்சி பனி மனிதன்..!
ஓட்சி என்ற இடத்திலிருந்து அந்த மனிதனைக் கண்டுபிடிக்கப்பட்டதாலும், அவன் பனியில் உறைந்து பதப்படுத்தப்பட்டிருந்ததாலும் "ஓட்சி பனி மனிதன்" என்று செல்லமாய் அழைக்கின்றனர். ஆனால் அவன் தாமிர காலத்திற்கு முற்பட்ட ஐரோப்பிய மனிதன் என்றும் கருதப்படுகிறது. இப்போது அந்தப் பனிமனிதனும், அவனது சொத்துக்களான உடை மற்றும் பொருள்களும், இத்தாலியின் தெற்கு டைரோளில் உள்ள, போல்சானோவின்அருங்காட்சியத்தில் (South Tyrol Museum of Archaeology in Bolzano, South Tyrol, Italy.) வைக்கப்பட்டுள்ளது. பனிமனிதன் காயத்தில் உறைந்திருந்த இரத்த செல்தான், நாம் இதுவரை அறிந்தவற்றில் மிக மிகப் பழமையான இரத்த செல்.
பனிமனிதன் உடம்பில் இரண்டு காயங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று கூர்மையான ஆயுதம் தாக்கிய தடயம் உள்ளது.
உலகில் இதுவரை அதிகமாக ஆராயப்பட்ட ஒரு மம்மி உண்டென்றால் அது ஓட்சிதான். அவன் பைநேல்ச்பிட்ஸ் மற்றும் சிமிளைன் மலைகளுக்கிடையே (Fineilspitze அண்ட் Similaun) உள்ள ஹாச்லாப்ஜூ (Hauslabjoch ) என்னும் இடத்தில் ஓட்சி பள்ளத்தாக்கில் கிடந்திருக்கிறான் இந்தப் பனி மனிதன். இந்தப் பகுதியில் ஓட்சி பள்ளத்தாக்கின் ஓரங்களை அலங்கரிக்க அடுக்கி வைத்தது போல வரிசையான ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. அங்கே ஓட்சி ஆல்ப்ஸ் பள்ளத்தாக்கில் இன்(Inn River) நதியில், பனிப்பாளங்களுக்கிடையே சொருகிக் கிடந்திருக்கிறான் இந்த மனிதன். இப்பகுதி ஆஸ்த்திரிய, இத்தாலிய எல்லையில் உள்ளது என்பதால், இது இரு நாடுகளுக்கும் சொந்தமானது. இதுவரை கிடைத்த ஐரோப்பிய மம்மிகளிலேயே இதுதான் நன்கு இயற்கையில் பதப்படுத்தப்பட்ட மனித மம்மியாகும்.
ஓட்சி பற்றிய புதிய உண்மைகள்..!
ராயல் சொசைடி இண்டர்பேசில்(Royal Society Interfece) என்ற அறிவியல் பத்திரிகையில் 2012, மே முதல் நாள் ஓட்சி பற்றிய புதிய கண்டுபிடிப்புத் தகவல் வந்துள்ளது. அதுதான் ஒட்சியின் இறப்பு பற்றிய தெளிவான கதையை விலாவாரியாக நம் முன்னே விரித்து வைக்கிறது. அவன் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்திருக்கிறான்; அவன் இறப்பதற்கு முன் தானிய ரொட்டியையும், சிவப்பு மானின் இறைச்சியையும் உண்டிருக்கிறான். அவன் ஏன் இறந்தான் என்பதன் காரணமும் கூட கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஒரு அம்பு அவனது தோளில் இறங்கி, அங்குள்ள தமனியை ஊடுருவிச் சென்றதன் விளைவால் இறப்பு நிகழ்ந்திருக்கிறது.
ஆல்பர்ட் ஜின்க் & குழுவும் கண்டறிந்த ஓட்சியின் இரத்தம்..!
iceman_mummy_390போஜென்/போயசனோவின் ஐரோப்பிய அகாடமியின் மனிதவியல் துறை தலைவரும், இத்தாலிய மனிதவியலாளரும், ஆய்வாளருமான ஆல்பர்ட் ஜின்க் (Albert Zink,)தான் ஓட்சி பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தவர். அவர் நழுவும் நிலையிலுள்ள இரத்த செல்கள் (elusive cells) பற்றி ஆய்வு செய்து அதிசயங்களைப் பகிர்ந்தவர். அவரின் கூற்றாவது: உண்மையிலேயே எங்களுக்கு இது ரொம்ப ரொம்ப ஆச்சரியமாய்ப் போய்விட்டது. ஏனெனில் நாங்கள் அங்கே முழுமையான சிவப்பணுவைப் பார்ப்போம் என்று கற்பனையிலும் கருதவில்லை. நாங்கள் நிஜமாகவே, அங்கே ஏதாவது சுருங்கிய அல்லது சிதைந்த ஓரிரு சிவப்பணுக்கள் இருக்கும் என்றுதான் நம்பி இருந்தோம். ஆனால் அங்கே, நவீன கால மாதிரி /சாம்பிள் போல அதே பரிமாணத்துடன், சிவப்பணுக்கள் முழுமையாகக் கிடைத்தன. எங்கள் கண்களை எங்களால் நம்பவே முடியவில்லை," என்று சொல்கிறார்.
ஆல்பர்ட் ஜின்க்கும் அவரது குழுவினரும் ஒட்சியின் தோள் காயத்திலிருந்து திசு மாதிரிகளை எடுத்தனர். அது போலவே, அவனின் வலது கைக்காயத்திலிருந்தும் திசு மாதிரிகள் எடுத்தனர். வெறும் சாதாரண உருப்பெருக்கி கொண்டு பார்த்தபோதே, அவை வட்ட வடிவ சிவப்பணுக்கள் போலவே காணப்பட்டன. ஜின்க் இது கட்டாயமாய் இறந்த மனிதனின் சிவப்பணுக்கள்தான் என்று உறுதியாய் நம்பினார். மேலும் இது தொடர்பான நவீன தொழில்நுட்ப அளவிலான ஆராய்ச்சிகள் செய்யவும் விரும்பினர்.
ஆராய்ச்சியாளர்கள் அணு அழுத்த உருப்பெருக்கி (an atomic force microscope) என்ற நவீன சாதனம் மூலம் இரத்த திசுக்களைப் பார்த்தனர். அது ஒரு பொருளைப் பார்ப்பதைவிட, அதனை ("feeling" )உணரவே செய்யும் தன்மை கொண்ட கருவி அது. இந்தக் கருவி உள்ளே நுழைந்து ஊடுருவித் தேடிப் பார்ப்பது, ஓர் ஒலித்தட்டின் மேல் ஓர் ஊசி ஓடுவதைப் போலிருக்கும். அந்த சாதனம் ஒரு பொருளின் உருவரை பரப்புகளில் மேலும், கீழும் குதித்து ஊடுருவும். அதிலிருக்கும் லேசர் ஒரு நொடியின் பல துணுக்குக்களையும் கூட விடாமல், அதன் ஒவ்வொரு சிறிய நகர்வையும் அளக்கும். இதன் மூலம் அந்தப் பொருளின் முப்பரிமாண அளவுகளை அப்படியே அச்செடுத்துவிடும். இந்த நடைமுறைகளில் புதிரான ஓட்சியின் உடல் பொருட்களிலிருந்து ஆச்சரியப்படத்தக்க படங்கள் கிடைத்தன. அதுதான் வட்ட வடிவமான உருவங்கள். உண்மையிலேயே சிவப்பணுக்கள்தான்.
ஓட்சியின் சிவப்பணுக்களும், இன்றைய சிவப்பணுவும்..!
ஓட்சியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சிவப்பணுக்கள் இப்போதுள்ள நமது சிவப்பணுக்களின் அளவையும் உருவையும் பெற்றுள்ளன. சின்ன மாவு உருண்டையை பரோட்டாவுக்கு அமுக்கி வைப்பது போன்ற தோற்றத்துடன் இருக்கின்றன. அதன் பரிமாணமும் கூட, இன்றுள்ள செல்களின் அளவே. ஓட்சி 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து கொண்டு, இபெக்ஸ் மற்றும் மானின் இறைச்சியை உண்டு, ஆல்ப்ஸ் மலைகளில் ஏறி இறங்கித் திரிந்திருக்கிறான். 1991ல் அவனைக் கண்டுபிடித்தபோது, அவனது இரத்தக் குழாய்களில் இரத்தம் இல்லை. ஓட்சி இறந்து வெகு காலமாகி விட்டபடியால், அவன் உடம்பிலிருந்த இரத்தம் தோள் காயத்தின் வழியே முழுதும் வடிந்திருக்கலாம் அல்லது அவனது இரத்தம் கால ஓட்டத்தில் உருமாறி அழிந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதினர். இருப்பினும் அம்பு சொருகி காயம் பட்ட தோள் பகுதி மற்றும் வலக்கையின் காயம் என இரண்டு இடங்களையும் விஞ்ஞானிகள் பெரிது பண்ணிப் பார்த்தனர். இரத்தக் கட்டு /இரத்தத் திசு எதுவும் அப்போது தென்படவில்லை. இருப்பினும் வன்முறையாய் அம்புத் தாக்குதல் மற்றும் மற்ற காயங்களால் இறப்பைத் தழுவிய அந்த மனிதனின் காயத்தை வேறு செயல்கள் மூலம் ஆராய்ந்தனர். இரத்தக் குழாய்களைத் திறந்தபோதும் கூட ஒரு துளி இரத்தத் துணுக்கு கூட இல்லை. இரத்தம் பதப்படுத்தப் படவில்லை/பாதுகாக்கப்படவில்லை என்றே எண்ணினார். இருப்பினும், நானோ கருவி (Nano probe) கொண்டு தேடியபோதுதான் அம்பு தைத்த இடம் மற்றும் வலது கையின் வெட்டில் முழுமையான சிவப்பணுவின் பரிமாணம் கிடைத்தது. நானோ கருவியின் ஒவ்வொரு நிமிட தேடலும் பதிவு செய்யப்பட்டது. அதன் ஸ்கேன் படிவம், பனி மனிதனின் இரத்த சிவப்பணு , தற்போதைய நவீன மனிதனுடையதைப் போலவே இருந்ததும் ஆச்சரியத்துடன் கண்டறியப்பட்டது .
கொலையுண்ட பனி மனிதன்..!
பனிமனிதனின் இறப்பு என்பது ஏதோ இயற்கையில் நிகழ்ந்தது அல்ல. இவன் ஆட்டிடையன், தெய்வத்திற்குப் பலி கொடுக்கப்பட்டவன், என்றெல்லாம் விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் இப்போது அவன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. பனிமனிதனின் உடலை வைத்தே அவனது வாழ்க்கை முறைகளைக் கணித்துள்ளனர் விஞ்ஞானிகள். அவனுடன் இருந்த மதிப்பு மிக்க தாமிர பட்டை கொண்ட கோடரி இருந்ததை வைத்து, அவன் உயர்ந்த சமூக அந்தஸ்துள்ளவனாக இருந்திருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். அவன் தன் பயணத்தின் போது மூன்று அடுக்குகள் கொண்ட உடைகளைப் போட்டிருந்தான்; எனவே அப்போது மிகுந்த குளிர் இருந்திருப்பது தெரிகிறது. அவனது கால் ஷூக்கள் அழுத்தமாக, கடினமாக இருந்தன. அதன் அடிப்பகுதி கரடியின் தோலினால் ஆனது; அவன் கூர்மையான பழக்கப்பட்ட கல் கத்தியை வைத்திருந்தான். அவனுக்கு நெருப்பை உண்டாக்கத் தெரிந்திருந்தது. நெருப்பு உண்டாக்கும் கருவிகள் கொண்ட ஒரு பையும் இடுப்பில் கட்டி வைத்திருந்தான். மேப்பிள் (Mapple) இலைகளால் சுற்றப்பட்ட சாம்பல் மற்றும் கங்குகளையும் பிரீச் பட்டையில் (பிர்ச்பர்க்) வைத்திருந்தான். அவன் முழுமையான கவசம் போன்ற உடை அணிந்திருக்க வேண்டும் என்றே நம்பினர். அவன் உடலில் தைத்த அம்பு அவ்வளவாய் கூர்மை இல்லை. அவனை ஒரு பசுமரத்தின் கூர்மையான பெரிய தண்டு கொண்டு அம்பினால் பலமாய்த் தாக்கி உள்ளனர். அதனால் பெரிய காயம் ஏற்பட்டு அதில் இரத்தம் வழிந்து, வடிந்து, மயக்கம் போட்டு பின்னர் இறந்திருக்கிறான்.
இரத்த பைபிரின் சொல்லும் உண்மைக் கதை..!
ஓட்சியின் இரத்த செல்களுடன், அதன் அருகிலேயே பைபிரினும் (Fibrin) காணப்பட்டது. எந்த இடத்தில் அம்பு குத்தி உள்ளே இறங்கியதோ அந்த அம்பு முனை பட்ட இடத்தில்தான் பைபிரின் இருந்தது. பைபிரின் என்பது இரத்தம் உறைவதற்கான புரதம். இந்த பைபிரின் துணுக்கு, நமக்கு ஓர் அருமையான உண்மையை நம் முன்னே பிட்டு வைக்கிறது. அதுதான் காயம் பட்டவுடனேயே அவன் இறக்கவில்லை என்பதே. ஏனெனில் பைபிரின் புதிதாக ஏற்பட்ட காயத்தில்தான் உருவாகும், பின்னர் சிதைந்துவிடும். அதன் பின் ஆராய்ச்சியாளர்கள் அந்த இரத்த செல்களில், கடந்த காலங்களில் மூலக்கூறு அமைப்பில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்றும், அதிலுள்ள நீர் இழப்பு மற்றும் வயது மூலம் தெளிவாக அறியலாம் என்று தெரிவிக்கின்றனர். இம்முறை மூலம் எதிர்காலத்தில் தடயவியல் துறைக்கு பல குற்றங்களைத் துலக்க உதவி செய்யும். இதற்காக ஆய்வாளர்கள் ராமன் Spectroscopy (Raman spectroscopy) யைப் பயன்படுத்தினர்.
மற்ற ஆய்வாளர்கள் பழங்கால கற்கால கருவிகளில் இரத்தம் அறிய ஆராய முயற்சி செய்யும்போது, இந்த பனிமனிதனின் இரத்த சான்று நேரிடையாக நின்று மனிதவியல் துறைக்கு பெரிதும் உதவுகிறது. அவன் அம்பால் குத்துப்பட்டும் கூட பல மணி நேரம் அல்லது சில் நாட்கள் இறக்காமல் இருந்திருக்கிறான். அவன் தோள்பட்டையில் உள்ள இரத்த தமனி அறுபட்டு, அதிகமாக இரத்தம் வடிந்து, இதயம் இயங்க மறுத்து மரணித்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். .
அவனது முதுகில் அம்பின் தலை குத்திக் கிடக்கிறது. அது 6.5 செ.மீ ஆழமான காயத்தை உண்டு பண்ணியுள்ளது. அவன் அந்த இடத்தைச் சுற்றி சுமார் 65 கி.மீ சுற்றளவில் மட்டுமே சுற்றி வந்திருக்கிறான் என்றும் இப்போது தெரிவிக்கின்றனர்.
இந்தப் பனி மனிதனின் உடைமைகள் மற்றும் துணிகளின் தன்மை மூலம், அன்றைய புதிய கற்கால மனிதன் ஐரோப்பாவில் என்ன மாதிரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தான் என்பதை கணிக்க உதவுகிறது.
அவன் மிகவும் பிரபலமான நமது நாகரிகத்தின் பகுதியாக இருந்தான்.
அந்தக் காலத்திய மனிதர்களை விட, ஓட்சியின் உடல் நல்ல உடல் நிலை திடகாத்திரத்துடன் இருந்தது என்பதே.
அவனை முழுதும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் அவன் 5 அடி , 2.5 அங்குலம் இருந்தான் என்று கணிக்கின்றனர். அவன் இறந்த பிறகு, உடலின் உயரம் சில அங்குலங்கள் குறைந்திருக்கலாம். இறப்பு நிகழும்போது அவனது எடை 110 பவுண்டுகள். ஆனால் இப்போதுள்ள மம்மியின் எடை வெறும் 29 பவுண்டுகள் மட்டுமே.
பனி மனிதன் இறக்கும்போது அவனுக்கு வயது 46. பொதுவாக அந்தக் காலத்தில் இந்த வயது வரை வாழ்ந்ததில்லை.
பனி மனிதனுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருந்ததாகவும் அறியப்படுகிறது. அவனது பெருங்குடலில், கொக்கிப் புழுவின் முட்டைகள் இருந்தன. அதாவது அவனுக்கு வயிற்றுப் பிரச்சினைகள் இருந்தன. அதனால் அவனுக்கு வயிற்றுப்போக்கும் இருந்திருக்கிறது. அவனுக்கு ஆர்த்திரிடிஸ் என்னும் கீல் வாதம் இருந்திருக்கிறது.
அவனது வலது கால் மற்றும் முதுகெலும்பு போன்ற இடங்களில் பச்சை குத்தியது போன்ற தழும்புகள் உள்ளன். இவை அவன் கீல் வாத நோயிலிருந்து விடுபட எடுத்துக் கொண்ட துவக்க சிகிச்சை என்றே கணிக்கப்படுகிறது.
அவனது உடைகளில் இரண்டு பூச்சிகள் இருந்தன. அவனது இடது இடுப்பு எலும்பு, அவனது வயதான தன்மையையும், அங்கே ஏற்பட்ட சின்ன எலும்பு முறிவையும் காட்டுகிறது. அவனது விலா மற்றும் மூக்கு எலும்புகள் உடைந்துள்ளன
அவன் இறப்பதற்கு முன், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தான் என்பதை அவனது கை நகங்கள் காண்பிக்கின்றன.
அவனது நுரையீரல் புகையினைச் சுவாசித்ததால் நிறம் மாறி இருந்தன. அவனின் இரைப்பையில் பார்லி, மாமிசம் மற்றும் தானியங்கள் இருந்தன. இவைதான் ஓட்சி உண்ட இவனது கடைசி உணவு என்பதைக் காட்டுகிறது.
அவன் வயிற்றில் மஞ்சள் மகரந்தம் காணப்பட்டது. அவன் ஓடையிலிருந்து நீர் குடிக்கும்போது விழுந்திருக்கலாம்.
அவனுக்கு பல் வியாதி எதுவும் இல்லை. அவன் உடம்பில் 12வது விலா எலும்பைக் காணோம். அவனது தோல் முழுவதும் பனியில் கிடந்து உரிந்து விட்டது.
தலை முழுவதும் முன்பு அடர்த்தியாக முடி இருந்திருக்கிறது. அதுவும் பனியில் கிடந்ததால் முழுமையாக உரிந்துவிட்டது.
அவனது இடுப்பு எலும்பிலிருந்து திசுக்களை எடுத்து DNA வை அறிந்து, அவனது முழு ஜீனோம் (Genome) வரையப்பட்டுவிட்டது.
பனி மனிதனின் DNA அமைப்பு, அவனது சில குணாதியங்களை நமக்கு எடுத்து இயம்புகிறது.
அவை:
பனி மனிதனுக்கு பழுப்பு வண்ணக் கண்கள் இருந்தன.
அவனது இரத்தம் ஓ ("O" group)பிரிவைச் சேர்ந்தது.
அதுவும் rh+ (Rhesus positive )வகை இரத்தம்தான்.
அவனுக்கு பால், சர்க்கரை சேராது.
இனறைய கோர்சிகன்கள் அல்லது சார்டினியான்கள் போன்றவர்களின் இனத்தைச் சேர்ந்தவன் இவன். இவர்கள்தான் பனி மனிதன் உடம்பு கிடைத்த இடத்தின் அருகில் ஆல்ப்ஸ் மலையில் வாழ்பவர்கள்.
மனித சமுதாயம் கண்டறிந்தவைகளில் இதுதான் உலகின் முதல் கொலையும், முதல் மனித இரத்தமும்.
நன்றி : முகநூல் அமானுஷ்ய நிகழ்வுகள்.