--காற்றில் மிதக்கும் இறகு ------தேடல் - 12 --- ச-ஷர்மா

....காற்றில் மிதக்கும் இறகு ----தேடல் - 12....

பல இறகுகள் இங்கே மிதக்க...

பலமற்ற கிளையின் படபடப்பால்
படபடத்த பறவையின் சிறகிலிருந்து
பலியாய் மிதக்க துவங்கியது
மற்றும் ஓர் ஒற்றை இறகு...

பாதை அறியாமல்
மிதந்த இறகு
கண்விழித்த போது..

அங்கு ஒருவன்
முள் வேலிகளுக்குள்
நாய்கள் உடன்
உணவுச் சண்டையில்...

பிறப்பறியா மிருகம்
பிறப்புறுப்பில் கடித்ததினால்
பிணமாகி போன
உயிர் உள்ள சிறுமி...

உறவு தொலைத்த
குழந்தை ஒன்று
கையில் குவளையுடன்
குடிநீருக்கான நீண்ட வரிசையில்..

உயிர்தானம் செய்ய முயலும்
மாணவன் கையில்
சென்ற ஆண்டு வாங்கிய
முதல் மதிப்பெண் சான்றிதழ்..

உடம்பு சிலையான நிலையில்
கண்கள் மட்டும்
தொலைந்த தன் குழந்தையை
கனவுக்குள் தேடும் தாய்..

பல கால்கள் சேர்ந்து
கனமாக மிதிக்கிறது
இரவில் மனைவியை கொடுக்க
மறுத்த கணவனின் உயிர்உறுப்பை..

காட்சிகள் நீண்டுகொண்டே போக
தலை சுற்றிய இறகின்
கண்களில் தன்னை அறியாமல்
வந்த கண்ணீரால் நனைந்து
நிலத்தில் விழுந்தது..

தானும் இப்போது
அகதிகள் முகாமில்
ஓர் அகதி
என்பது அறியாமல்...


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

(( அகதிகள் என கூறுவதற்கு முன்பு நாமும் இப் புவியில் வாழ வந்த ஓர் அகதி தான் என்பதை மறக்க வேண்டாம்))

படைப்பை படைக்க காரணமாகவும் , ஊக்கமும் கருவும் அளித்து உதவிய அண்ணன் ஜின்னா மற்றும் தோழர் குமரேசன் கிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றிகள்

எழுதியவர் : ச.ஷர்மா (16-Dec-14, 10:35 am)
பார்வை : 297

மேலே