அன்னைக்கு என் அஞ்சலி!

அம்மா!
பத்து திங்கள் என்னை
கருவறை சுமந்தவளே

இனி
அந்த கல்லறை
உன்னை
சுமக்கபோகிறதா!

மண்மீது நான் வீழ்ந்தால்
மகனே என மார்போடு அணைத்தவளே
இன்று உன்மீது
மண் விழ
நான் யாரோடு
சொல்லி அழுவேன்?

அம்மா!
என
தூக்கத்தில்
நான்
விசும்ப
துடித்து எழுவாயே!

இன்று
அம்மா என்று
கதறி அழுகிறேன்
நீ மௌனமாய் உறங்குகிறாயே?

பசியை நீ தின்று
எனக்கு பாலூட்டியவளே
கடைசியாய் உனக்கு
பாலூற்றும்
பாக்கியம் எனக்கு கிட்டவில்லையே!

ஊருக்கு நான்
வருகிறேன் என
தபால் போட்டால்
என் மகன் வருகிறான்
என ஊரெல்லாம்
சொல்லிவருவாய்
என அடுத்த வீட்டு
கிழவி சொல்ல
மௌனமாய் புன்னகை பூப்பாயே

உன் மகன்
ஊருக்கு வந்திருக்கிறேன்
ஊரெல்லாம்
சொல்லுதம்மா
ஊமையாய்
உறங்குகிறாயே!

நடை வண்டி
இல்லையென்று
நான் அழுக
கை பிடித்து
நடை பழக வைத்தவளே

உன் சவ
வண்டி நான் இழுக்க
சுகமாய் வா தாயே!

பல்லக்கு தூக்கி
என்னை பாராட்டி
வளர்த்தவளே

அந்த பள்ளத்தில்
உனைவிட்டு
பரிதவித்து கிடக்கின்றேன்

சுகமெல்லாம் எனை சேர
சோகமெல்லாம் நீ சுமந்தாய்!
இனி சுகமாய்
உறங்கு தாயே!

அம்மா!
அடுத்த பிறவி
இருந்தால்
நீயே என் தாயாக வேண்டும்............

சொர்க்கத்தில் நிச்சயமாய்
உனக்கொரு இடமுண்டு
இனியாவது
சுகமாய் இரு தாயே!

























எழுதியவர் : அருள் ரோன்காலி (11-Apr-11, 2:17 pm)
சேர்த்தது : Arul Roncalli
பார்வை : 441

மேலே