புதுமை பித்தன் சிறுகதை - காலனும் கிழவியும்
வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். 'வெள்ளைக்கோயிலுக்குப் போகிறேன்' என்றால் உலகத்திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக்குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் தினசரி காலையும் சாயங்காலமும் அங்கு போய்த்தான் ஏழை மக்களுக்குக் கஷ்டத்தை மறக்க வைக்கும் அமுதத்தை இறக்கி வருகிறான். மாடத்தி தினசரி அங்கு போய்த்தான் சுள்ளி பொறுக்கிக் கொண்டு திரும்புகிறாள். ஆனால் இப்படித் திரும்புகிறவர்களைப் பற்றி மட்டிலும் நினைவு வருகிறதில்லை போலும் அவ்வூர்வாசிகளுக்கு.
அந்தப் பிரதேசத்திற்குச் சென்றும் வெறுங்கையுடன் திரும்பி வரும் நிலைமை ஒரே ஓர் ஆசாமிக்கு ஏற்பட்டது. அவர்தான் தர்மராஜர்.
இந்தச் சமாசாரத்தைப் பற்றி வெள்ளைக் கோயில்காரருக்குத் தெரியாது. ஏனென்றால், மருதாயி, புகையும் சுடுகாட்டுக்கும் சலசலக்கும் பனைவிளைக்கும் இடையில் உள்ள ஒரு குடிசையில் வசிக்கும் கிழவி.
மருதாயிக்கு இந்த விளையில் பனைகள் சிறு விடலிகளாக நின்றது தெரியும். அது மட்டுமா? கும்பினிக்காரன் பட்டாளம் அந்த வழியாகச் சென்றது எல்லாம் தெரியும். அந்தக் காலத்தில் மருதாயியின் பறையன் நல்ல செயலுள்ளவனாக இருந்தான். வஞ்சகமில்லாமல் குடிப்பான்.
மருதாயிக்கு அந்தக் காலத்திலேயிருந்த மிடுக்கு சொல்லி முடியாது. அறுப்புக்குச் சென்றுவிட்டு, களத்திலிருந்து மடி நிறையக் கொண்டு வரும் நெல்லை, கள்ளாக மாற்றுவதில் நிபுணி. சதிபதிகள் இருவரும் இந்த இலட்சியத்தை நோக்கி நடந்தால் வெள்ளைக் கோயில் பக்கம் குடியிருக்காமல் வேறு என்ன செய்ய முடியும்?
மருதாயிக்கு பிள்ளைகள் பிறந்தன. அவையெல்லாம் எப்பவோ ஒரு காலத்தில் நடந்த் சமாசாரம் - கனவு போல, இப்பொழுது பேரன் மாடசாமியும், எருமைக்கிடாவுந்தான் அவளுடைய மங்கிய கண்கள் கண்ட உண்மைகள். கிடாவை வெளியில் மேயவிட்டுக் கொண்டு வருவான் பேரன். கிடாவும், நன்றாகக் கருகருவென்று ஊரார் வயலை மேய்ந்து கொழுத்து வளர்ந்திருந்தது. வாங்குவதற்கு ஆள் வருவதை மாடசாமி எதிர்பார்த்திருந்தான்.
மாடசாமி அவளுடைய கடைக்குட்டிப் பெண்வழிப் பேரன். கொஞ்சம் துடியான பயல். பாட்டனின் ரத்தம் கொஞ்சம் ஜாஸ்தி. அதனால்தான் மாடு மேய்க்கிற 'சாக்கில்' கிழவியைக் குடிசையில் போட்டுவிட்டுப் போய்விடுவான். அவனுக்கு ஒரு பெண்ணைக் கட்டி வைத்துவிட்டால் தனக்கு இந்தக் குடிசைக் காவல் ஓயும் என்று நினைப்பாள். கிழவி தன் கைக்கு ஒரு கோல் போல அவளுக்கும் ஒரு உதவிக் கட்டை தேவை என்று நினைத்தாள்.
காலத்தின் வாசனை படாத யமபுரியில் சிறிது பரபரப்பு. யம தர்மராஜா நேரிலேயே சென்று அழைத்து வரவேண்டிய ஒரு புள்ளியின் சீட்டுக் கிழிந்துவிட்டது என்பதைச் சித்திரபுத்திரன் மகாராஜாவிடம் அறிவித்தான். சித்திரபுத்திரனுக்கு ஓலைச் சுவடிகளைப் பார்த்துப் பார்த்தோ என்னவோ சிறிது காலமாகப் பார்வை அவ்வளவு தெளிவில்லை.
நேற்றும் இன்றும் அற்ற லோகத்தில் மாறுதல் ஏற்படுவது ஆச்சரியந்தான். இருந்தாலும் உண்மையை மறைக்க முடியவில்லையே!
தர்மராஜாவின் சிங்காதனத்தின் மேல் அந்தரத்தில் தொங்கும் ஒளிவாளின் மீது மாசு படர்ந்துவிட்டது. காரணம், மகாராஜனின் தொழிலிலும் மனத்திலும் மாசு படர்ந்ததால் என்று கிங்கரர்களுக்குள் ஒரு வதந்தி. மகாராஜாவும் தம் முன்வரும் உயிர்களுக்கு நியாயம் வழங்கும் போதெல்லாம் அடிக்கடி உயர அண்ணாந்து வாளைப் பார்த்துக் கொள்வாராம்.
போருக்கு முதல்வனையும் ஊருக்கு முதல்வரையும் மகாராஜாவே நேரில் சென்று அழைத்து வரவேண்டும் என்பது சம்பிரதாயம். காலத்திற்கு அதிபதியான மன்னன் அந்தக் கைங்கரியத்தைச் செய்வதில் மனக் குழப்பம் ஏற்பட்டது.
பூலோகத்திலே, குறிப்பாக வெள்ளைக்கோயிலிலே, அப்போது அஸ்தமன சமயம். பேய்க்காற்று யமதர்மராஜனின் வருகையை அலறி அறிவித்தது. பனைமரங்கள் தங்கள் ஓலைச் சிரங்களைச் சலசலத்துச் சிரக்கம்பம் செய்தன. சுடுகாட்டுச் சிதையில் வெந்து நீறாகும் வாத்தியார் உடல் ஒன்று கிழவிக்குக் கிடைக்கப் போகும் பெருமையைக் கண்டு பொறாமைப் புகையைக் கக்கித் தன்னையழித்துக் கொண்டது. எங்கிருந்தோ ஒரு கூகையின் அலறல்.
ஓடிப் போய்ப் பேயாக மாறியாவது தனக்குக் கிடைக்கப் போகும் சித்திரவதைகளிலிருந்து தப்ப முயலும் வாத்தியார் உயிரை மறித்து, தூண்டிலில் மாட்டி, மேல் நோக்கிப் பறக்கும் கிங்கரர்கள், மகாராஜா தூரத்திலே வருவதைக் கண்டு வேகமாக யமபுரியை நோக்கிச் செல்லலானார்கள்.
எங்கிருந்தோ ஒரு நாய் தர்மராஜனின் வருகையை அறிந்து கொண்டு அழுது ஓலமிட்டது.
கிழவி, குடிசைக் கதவை இழுத்துச் சாத்திவிடு இடுக்கான நடையில் வந்து உட்கார்ந்து வெற்றிலைக் குழவியை எடுக்கத் தடவினாள். கை கொஞ்சம் நடுங்கியது. என்றுமில்லாத கொஞ்சம் நாவரட்சி ஏற்பட்டது. 'சுவத்துப் பயலே அந்திலே சந்திலே தங்காதே. மாட்டே ஓட்டிக்கிட்டு வந்திருன்னு சொன்னா, மூதி...' என்று சொல்லிக்கொண்டே தண்ணீர்க் கலயத்தை எடுத்தாள்.
புறக்கடையில் திடுதிடுமென்று எருமைக் கிடா வந்து நின்றது. அதன் மேலிருந்த கறுத்த யுவன் குதித்தான்.
"ஏலே மாடா, எத்தினி தெறவேதான் ஒன்கிட்டச் சொல்லி மாரடிக்க, மூதி, தொளுவிலே கட்டி, பருத்தி விதையெ அள்ளி வய்யி, பாளையங்கோட்டை எசமா வந்திருந்தாவ. நாளைக்கி கடாவெ கொண்டாரச் சொன்னாவ!" என்றாள் வந்தவனைப் பார்த்து.
வந்தவன் தான் எமதர்மராஜா.
'பாவம் கிழவிக்கு அவ்வளவு கண் பஞ்சடைந்து போய்விட்டதா?' என்று அவன் மனம் இளகியது. கிழவியின் கடைசி விருப்பத்திற்குத் தடையாக ஏன் இருக்க வேண்டும் என்று எருமையைத் தொழுவில் கட்டிவிட்டு, பருத்தி விதையை அள்ளிவைத்தான். பூலோகத் தீனியைக் கண்டிராத எருமை திருதிருவென்று விழித்தது.
கிழவி திடுக்கிட்டு விடாமல் இதமாக வந்த காரியத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, குனிந்து குடிசைக்குள் நுழைந்தான் யமன்.
"ஏலே அய்யா, அந்த வெத்திலைச் சருகை இப்பிடித் தள்ளிப் போடு!" என்றாள் கிழவி.
வெற்றிலையை எடுத்துக்கொடுத்துவிட்டு, "அதிருக்கட்டும் கிழவி, நான் யார் தெரியுமா? என்னை நல்லாப் பாரு! நான் தான்..." என்று ஆரம்பித்தான் எமன்.
"என்ன குடிச்சுப்பிட்டு வந்தியாலே! எனக்கென்ன கண்ணு பொட்டையாப் போச்சுன்னு நினைச்சிக்கிட்டியாலே!" கிழவிக்கு அவன் நின்ற நிலையைப் பார்த்ததும் மத்தியானச் சம்பவம் ஏதோ நினைவுக்கு வந்தது.
"சிங்கிகொளத்தா மவளே, அவதான் சொக்கி. அவளைப் பார்த்திருக்கியாலே... நேத்துக்கூடச் சுள்ளி பொறுக்க வந்தாளே... அவ அப்பங்காரன் வந்திருந்தான்... உனக்கு அவளெப் புடிச்சுக் கட்டிப் போட்டுட்டா நல்லதுன்னான். என்ன சொல்றே?..."
காலத்தின் அதிபனான, காலத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட யமதர்மராஜன் நடுநடுங்கினான்.
"நான் தான் யமதர்மராஜன்!" என்று அவனது வாய் உளறியது. பயப்பிராந்தியில் வாய் உண்மையைக் கக்கியது. ஆனால் அந்த உண்மை கிழவியின் உள்ளத்தை பயத்தை ஏற்படுத்தவில்லை.
"குடிச்சுப்பிட்டுத்தான் வந்திருக்கே... ஒங்க பாட்டன் குடிச்சுக் குடிச்சுத்தான் தொலைஞ்சான்... அதான் வெள்ளக்கோயில் குடிசை! நாசமாப் போரத்துக்கு நாலு வளி வேணுமா? விதி யாரை விட்டுது...?" என்றாள்.
விதியைப் பற்றி நினைத்ததும் கிழவிக்கு என்றுமில்லாத தளர்வு தட்டியது... மூச்சுத் திணறியது... யமனுக்குக் கால்களில் தெம்பு தட்டியது... விதிக்கோலைப் பற்றித் தன் ஆட்சியை நிலைநாட்ட நிமிர்ந்தான்...
"ஏலே... ஒன் வக்கணையெல்லாம் இருக்கட்டுமிலே, என்னா, எருமை அத்துக்கிட்டு ஓடுது? மறிச்சுப் பிடிச்சா?" என்றாள் கிழவி.
'ஏதேச்சையாக அலைந்த வாகனத்தைக் கட்டிப் போட்டுப் பருத்தி விதை வைத்தால் நிற்குமா?' என்று நினைத்துக் கொண்டே, வெளியேறி வந்து சமிக்ஞை செய்தான் யமன். வாகனம் வந்து மறைவில் அவன் சொற்படி நின்றது.
எருமையின் முதுகில் போட்டிருக்கிற பாசக் கயிற்றை எடுத்துக் கொண்டு மறுபடியும் உள்ளே நுழைந்தான் யமன். பாசத்தால் அவளைக் கட்டிவிடலாம் என்று நம்பினான். பாவம்!
"ஏலே, கயிறு நல்லா உறுதியாக இருக்கே, எங்கலே வாங்கினே? ஒங்க பாட்டனிருந்தாருல்லே, அவருக்கு அப்பங்க காலத்துலேதான் இது மாதிரி கெடைக்கும். அங்கென சுத்தி ஒரு கொடியாக் கட்டிப் போட்டு வய்யி, ஒண்ணுக்குமில்லாட்டா நாலு ஓலையையாவது சேத்துக் கட்டிக்கிட்டு வரலாம்!" என்றாள்.
பாசக் கயிற்றின் நுனியைக் கூரையைத் தாங்கும் விட்டத்தில் கட்டிக்கொண்டே, நான் அவள் பேரன் அல்லன் என்பதை இந்தக் கிழவிக்கு எப்படித் தெளிவுபடுத்துவது என்று எண்ணியெண்ணிப் பார்த்தான். தனது சுய உருவைக் காண்பித்தால் பயந்துவிட்டால் என்ன செய்வது என்றே நினைப்பு... வேறு வழியில்லை...
'ஏ, கிழவி, என்னை இப்படி திரும்பிப் பார்!" என்று அதிகாரத்தொனியில் ஒரு குரல் எழுந்தது.
கிழவி திரும்பிப் பார்த்தாள். கூரையின் முகட்டையும் தாண்டி, ஸ்தூலத் தடையால் மறையாமல் யமன் தன் சுய உருவில் கம்பீரமாக நிற்பதைக் கண்டான்.
"நீ யாரப்பா! இங்னெ எம் பேரன் நிண்டுகிட்டிருந்தானே, அவனெங்கே?" என்றாள்.
"நான் தான் யமன்! நான் தான் அவன்; உன் பேரனில்லை!" என்றான் யமன்.
"அப்படியா சேதி! வா இப்படி இரி" என்று கொண்டே, வெற்றிலையைத் தட்டத் தொடங்கினாள் கிழவி, "இப்பம் எதுக்கு இங்கெ வந்தே?"
யமன் அவள் அருகில் வந்து உட்கார்ந்தான். அதனால் நின்றதன் காம்பீரியம் மறைந்துவிட்டது.
"போருக்கு முதல்வனையும் ஊருக்கு மூத்தவரையும் நான் தான் அழைத்துக் கொண்டு போக வேண்டும்!" என்றான்.
"அப்பிடின்னா?"
"நீ என் கூட வரவேண்டும். நீ அப்பொழுது கட்டிப்போடச் சொன்னாயே அது உன் எருமையல்ல, என் வாகனம்..."
"நான் ஒன்கூட வரணுமாக்கும்! என்னெ கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்குத் தெறமை யிருக்கா? ஒனக்குப் பாதி வேலேகூட சரியாச் செய்யத் தெரியாதே. என்னெக் கட்டோ டெ கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்கு முடியுமா?"
"எனக்கு முடியாத ஒன்று இருக்கிறதா? நான் இதுவரை எத்தனை பேரை அழைத்துச் சென்றிருக்கிறேன். அது உனக்கெப்படித் தெரியும்? நீ என்ன புராணம் இதிகாசம் படிக்கக் கூடிய ஜாதியில் பிறந்திருக்கிறாயா?..." இப்படிச் சொல்லிக் கொண்டு போகும் பொழுதே யமனுக்குத் தானே தனக்குப் பொய் சொல்லிக் கொள்கிறது போலப் பட்டது; ஏனென்றால் அவனுக்கு மார்க்கண்டன் சமாசாரமும் நினைவுக்கு வந்து விட்டது.
"அதெல்லாம் இருக்கட்டும். நீ என்னெக் கூட்டிக்கிட்டு போய்த்தின்னா, நான் இருந்த நெனப்பே, என்னைப் பத்தின நெனப்பே, நான் வச்சிருந்த பொளங்கின சாமானெல்லாம் ஒன்னோடெ எடுத்துக்கிட்டுப் போவ முடியுமா? என்னமோ எமன் கிமன் இன்னு பயமுறுத்திரியே. ஒன் தொழிலே ஒனக்குச் செய்யத் தெரியலியே! அதெத் தெரிஞ்சுக்கிட்டு எங்கிட்ட வா!" என்று காலை நீட்டிக் கொண்டு முழங்காலைத் தடவினாள் கிழவி.
"என்ன சொன்னாய்! எனக்கா தெரியாது? இதோ பார், உன்னை என்ன செய்கிறேன்!" என்று உறுமிக் கொண்டு எழுந்தான் யமன். அந்தோ! அவன் வீசவேண்டிய பாசக்கயிறு அவனே கட்டிய கொடியாகத் தொங்கியது?
"உன்னாலெ என் உசிரெத்தானே எடுத்துக்கிட்டுப் போவ முடியும்? இந்த உடலைக்கூடத் தூக்கிட்டுப் போவ உனக்குத் தெறமை இருக்கா? யோசிச்சுப் பாரு. ஒண்ணெ வேறயா மாத்த முடியும். உன்னாலே அழிக்க முடியுமா! அடியோட இல்லாமே ஆக்க முடியாதே! அப்புறமில்ல உனக்கு? பழசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரேன்னா நெனச்சே?" என்று பொக்கை வாயைத் திறந்துகாட்டிச் சிரித்தாள் கிழவி.
கையைப் பிசைந்து கொண்டே வெளியேறினான் யமன். அன்றுதான் அவனுக்கு உண்மையான தோல்வி. மார்க்கண்டேயன் சமாசாரம்கூட அவனுக்கு அன்று வெற்றி மாதிரியே புலப்பட்டது.
யமராஜனின் தோல்வியைக் கண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போய்ப் பதுங்கியது போலப் பேய்க் காற்றும் ஓய்ந்து நின்றது. மாடசாமி எருமையை ஓட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். கட்டுத்தறியில் தீனி போட்டுப் பருத்தி விதை வைத்துத் தயாராக இருந்ததைக் கண்டான். குருட்டுக் கிழவிக்கு வெறும் இடத்தில் எருமையிருப்பதாகத் தோன்றியதால் எல்லாம் தானாகத் தடவித் தடவித் செய்திருக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது.
உள்ளே நுழைந்தான் வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே கிழவி யமதேவனின் விஜயத்தையும், தோல்வியையும் பற்றிச் சொன்னான். மாடசாமி வாலிபத்தின் அவநம்பிக்கையுடன் சிரித்தான். 'குருட்டு மூதி என்னவோ ஒளருது!' என்று முணுமுணுத்தான்.
இருந்தாலும், 'நல்ல கெட்டிக் கயிறு; காஞ்ச சருகாவது கட்டலாம் கைக்கு வந்தது தவறிவிட்டதே!' யென்று அவள் ஏங்கியது அவனுக்கு கொஞ்சம் நம்பும்படிதான் இருந்தது.