படிப்பினைக் காட்டு
வெற்றி அதற்காக வெட்கம் தனைவிட்டு
==வெள்ளை உடையோடு வருவார்
சுற்றி சனக்கூட்டம் சூழ்ந்து இருந்திட்டால்
==சொல்லாக் கதையெல்லாம் சொல்வார்
சற்றும் அசராமல் சார்ந்த கட்சிக்காய்
==சாமி அவதாரம் எடுப்பார்.
புற்றுப் பாம்பாக புதிய விஷத்தோடு
==பொல்லா வகைநம்மை கொல்வார்
அடித்த கொள்ளைக்கும் அடிக்கும் கொள்ளைக்கும்
==அழகாய் விளக்கங்கள் சொல்வார்
படித்த பிள்ளைக்கும் படிக்கா மூடர்க்கும்
==பிடித்த தொழிலுண்டு என்பார்
வடித்த சாராயம் வழங்கும் நிகழ்வோடு
==வாக்கு தனையள்ள நினைப்பார்
அடுத்த சிலநாளில் ஆட்சி நாம்பிடித்தால்
==அடிமை என்போரில்லை என்பார்
சொல்லும் கதையெல்லாம் சுகமாய் கேட்கும்நாம்
==சொக்கி வாக்கள்ளிக் கொடுப்போம்
வெல்லும் நம்வாக்கால் வெளிச்சம் அவர்காண
==விழியில் கண்ணீரால் குளிப்போம
இல்லை என்கின்ற ஏழ்மை பாடத்தை
==எங்கள் தலைமுறையும் படிக்க
தொல்லை இல்லாமல் துணிந்து ஊரெங்கும்
==துடைத்து தன்பேரில் வைப்பார்.
சொத்து சுகத்தோடு சுகமாய் சிலர்வாழ
==சொல்லிக் கொடுத்தது யாரடா
கத்து கத்தாக கரைக்கும் காசுக்கு
==கணக்கு எங்கேன்னு கேளடா
வெத்து வேட்டுக்கள் என்று வாழவோ
==வியர்வை சிந்தும்நாம் கூறடா
கத்து கொடுக்கிற பாடம் படிப்பினைக்
==காட்ட வாக்கினைநீ போடடா!
*மெய்யன் நடராஜ்

