பெண் பார்த்துச் சென்றாயே
பெண் பார்க்கத்தான் வந்தாய்,
என் பெண்மையைக் காட்டிச் சென்றாயே!
அன்று கொண்டு,
என் கூந்தல் நாட்டின் முப்படையும்
போர் மூட்டி, சண்டையிட்டு,
பின்னிக் கொண்டன,
நீ சூடப் போகும்
மலர்க் கூட்டம் ஏந்த!
அவரைக் கண்டால்
இனி இதற்கு மேல் விழிக்காதே!
இது வரைதான் உன் தொழில்!
என ஒப்பந்தம் பெற்றுக் கொண்டன,
என் விழியிட்ட மைக்கோடு!
பெண்ணை விட அடக்கம்
எனக் கூற வேண்டுமாம்! இன்றெல்லாம்
மிகுந்த அடக்கமே காட்டுகின்றன,
நான் சுற்றிக் கொண்ட
என் சேலை!
வளையல்கள் ஏனோ
வலி கொடுக்கின்றனவே!
எடையும் குறைந்துதானே போனேன் !
ஓ! அவர் தொட்டால்தான் வளைவார்களோ!
சில காயமுட்டின ,சில வலி கூட்டின
சுகம்தான்!
ஏனோ கொலுசுகள் மட்டும் பாசம் காட்டின,
அவர் காணும் முன்
என் கால் பற்றியதால்.
இத்துனை நாள் நான் நினைவில் இல்லையா!
ஏய் நெற்றித் திலகமே !
உன்னைத்தான் ,
இன்று மட்டும் ஏன்
என் நெற்றியில் முட்டிக் கொள்கிறாய் !
அவரைக் காண்பதில் முதலில் நீதான்
என முடிவைக் கூறுகிறாய்!
பார்க்கிறேன் அதையும் !
உன் மேல் சினம் சுமக்கிறேன்,
என் சிந்தைக் கண்ணாடியே!
உன்னில் என்னுடன் காட்டிய
என் உணர்வாளனை
இன்று வரை ,ஏன் மறைத்தாய் !
ஏன்? நீ ரசித்திருந்தாயோ!
இனியாவது மூடிக் கொள்
உன் கண்களை !
இல்லையேல்,
உன் முதுகினைத் தோழியாக்குவேன்!
ஐயகோ!
என்ன ஆனேன் !
என் இடம் கொண்ட பொருளெல்லாம்,
எதிர் நின்று மிரட்டுகிறேன் !
நீ மாறி விட்டாயடி! என
அவைகளும் மோதுகின்றனவே!
நீ கண்டு சென்று விட்டாய் ,
சென்றது முதல் விடியல் காண வில்லை
நான்.
என்னுள் நான்
உற்பத்தி ஆகிக் கொண்டே உள்ளேன்
உன்னை காணும் நொடியெல்லாம் தொலைக்க !
பிம்பத்தை மட்டும் காதல் செய்யும்
பித்துவாய் நான் மாறும் முன்
என் பதி ஆகி விடு!
விடியல் இன்றியே என் விண்ணுலகம் பக்கமாகிறதே!
வினோதனே விரைவில் வந்து விடு
வினா ஏதும் எழுப்பவில்லை
உன் விடை மட்டும் கூறு
விரல்கள் மட்டும் விழித்திருக்கின்றன
இமைகள் இல்லாமையால்
என் விடையானவனே
விரைந்து வந்து மூடிக் கொள்
உன் விரல்கள் கொண்டு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
