கிராமத்து கீதம்……………

தலைவன் : சிரிச்சு பேசும் சின்னப் பொண்ணே!
அடியே, சின்னப் பொண்ணே – சிரிப்புக்கு
மாணிக்கம் ஒண்ணு நானும்தர,
மடியில கொஞ்சம் சாஞ்சுகர,
மடிய காட்டடி! பொண்ணே மடிய காட்டடி!.

தலைவி : உங்க மாணிக்கம்! எனக்கும் வேண்டா,
மடிய நானும் காட்டமாட்ட,
போங்க மச்சா! போங்க, தள்ளி
கொஞ்சம் போங்க!.

தலைவன் : வாயடிக்கும் வண்ணப் பொண்ணே!
அடியே, வண்ணப் பொண்ணே – வாய்க்கு
பவளம் ரண்டு நானும்தர,
பக்கத்துல வாடிபுள்ள, நீ
பக்கத்துல வாடிபுள்ள!.

தலைவி : உங்க பவளம்! எனக்கும் வேண்டா,
பக்கத்துல வரவும் மாட்ட,
போங்க மாமா! போங்க, தள்ளி
கொஞ்சம் போங்க!.

தலைவன்: கிளிமூக்கு சின்ன பொண்ணே!
அடியே, சின்ன பொண்ணே – மூக்குக்கு
வைரம் மூணு நானும்தர,
முந்தானைக்குள் வெச்சுக்கோடி, என்ன
உன் முந்தானைக்குள் வெச்சுக்கோடி!.

தலைவி : உங்க வைரம்! எனக்கும் வேண்டா,
முந்தானைக்குள் நீயும் வேண்டா,
போங்க ராசா! போங்க, தள்ளி
கொஞ்சம் போங்க!.

தலைவன் : காதழகு தாமரைப் பொண்ணே!
அடியே, தாமரைப் பொண்ணே – நுனிகாதுக்கு
மரகதம் நாலு நானும்தர,
பேச்சக் கேளடி கண்ணே, என்
பேச்சக் கேளடி!.

தலைவி : உங்க மரகதம்! எனக்கும் வேண்டா,
பேச்ச நானும் கேக்கமாட்ட,
போங்க மச்சா! போங்க, தள்ளி
கொஞ்சம் போங்க!.

தலைவன் : கழுத்தழகு மயில் பொண்ணே!
அடியே, மயில் பொண்ணே – கழுத்துக்கு
வைடூரியம் அஞ்சு நானும்தர,
வந்துடடி புள்ள, நீ
என்கூட வந்துடடி!.

தலைவி : உங்க வைடூரியம்! எனக்கும் வேண்டா,
உன்கூட வந்துடவும் மாட்ட,
போங்க மாமா! போங்க, தள்ளி
கொஞ்சம் போங்க!.

தலைவன் : பல்வரிசை அழகுப் பொண்ணே!
அடியே, அழகுப் பொண்ணே – பல்லுக்கு
முத்து ஆறு நானும்தர,
முத்தம் வையடி, என்
உதட்டுல முத்தம் வையடி!.

தலைவி : சீ.................!!!
உங்க முத்து! எனக்கும் வேண்டா,
முத்தமும் வைக்க மாட்ட,
போங்க மச்சா! போங்க, தள்ளி
கொஞ்சம் போங்க!.

தலைவன் : கண்ணழகு கறுத்த பொண்ணே!
அடியே, கறுத்த பொண்ணே – கண்ணுக்கு
நீலக்கல்லு ஏழு நானும்தர,
கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லடி,
நீ சம்மதம் சொல்லடி!.

தலைவி : உங்க நீலக்கல்லு! எனக்கும் வேண்டா,
கல்யாணம் நமக்கு வேண்டா,
போங்க ராசா! போங்க, தள்ளி
கொஞ்சம் போங்க!.

தலைவன் : பூவான மேனிகொண்ட பொண்ணே!
அடியே, செண்பக பொண்ணே – மேனிக்கு
கோமேதகம் எட்டு நானும்தர,
மஞ்சத்துக்கு போகலாம் வாடி, ஓடி
நீயும் வாடி!.

தலைவி : நெனப்புதா........ மச்சானுக்கு!
உங்க கோமேதகம் எனக்கு வேண்டா,
வரமாட்ட போங்க, மஞ்சத்துக்கு
வரமாட்ட போங்க.

தலைவன் : கோவத்துல வெடிக்கற சிவந்தபொண்ணே!
அடியே, சிவந்த பொண்ணே - நவ
புஷ்பராகம் நானும்தர,
வேற என்னவேணும். உன் புருஷனாக
வேற என்ன வேணும்!.

தலைவி : அப்படி கேளுங்க மச்சா!.........
நவபுஷ்பராகம் வேண்டா, எனக்கு
நவரத்தினமும் வேண்டா- வெறும்
மஞ்சக் கயிறு போதும்.
மஞ்சத்துக்கு ஏது பஞ்சம்?

தலைவன் : அப்படி சொல்லுடி புள்ள!!!.......................

எழுதியவர் : கவிக்கண்ணன் (23-Dec-14, 11:39 pm)
பார்வை : 233

மேலே