மழையே நீ எங்கே
பார் மழையே! பார்
எம் புவி மக்களைப்பார்.
நீ,
பூமியில் பொழிந்து
பிரவேசித்த நாட்களை;
சொல்லிச் சொல்லி
ரசித்து கொண்டிருக்கிறோம்.
நீ,
வராத நாட்களை
எண்ணி எண்ணி;
ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
நீ,
இல்லாததால்,
பசுமை உயிர்கள்
காய்ந்து விட்டன.
ஓரறிவு முதல் ஆற்றிவுவரை
அங்கலாய்த்துக் கொண்டு இருக்கிறோம்.
நீ,
இல்லாத இந்நாட்கள்,
கழனியும் கடும் பாறையானது.
ஏர்க் கலப்பைகள் – வெண்
கறையான்களுக்கு இறையானது.
நீர்த் தேக்கங்களும் ,
நீர்த்துப் போயின.
உனக்காக!
காகிதங்களும் காத்துக் கொண்டிருக்கின்றன,
கப்பல்களாக மாற;
நீ!
எங்கே சென்றாய் மழையே!!!
உன்னை கண்டித்தும் பேசிவிட்டேன்
மண்டியிட்டும் கெஞ்சி விட்டேன்..
இப்புவியில் ஏழ்கடலுக்கு அப்பால்
இருந்தாலும் மீட்டு வந்திருப்பேன்
எப்படித் தேடுவேன்?
மேகத்தில் தொலைந்துவிட்ட உன்னை.
இதோ!!
மேகத்திற்கும் கட்டளையிடுறேன்,
ஏய், மேகமே!
என் மழைத்தாயை சிறைபடுத்தியிருந்தால்,
இப்பொழுதே விட்டுவிடு,
மன்னிக்கிறேன் உன்னை!!!