தண்ணீர் வழிப்போக்கில்
எவரும் தொட்டிருக்கா
மழையைத் தொடாதே...
புதுப்பொழிவு
உடம்புக்காகாது ...
பச்சை கரைத்து
பாறையுருள் அருவியோ....
ஐயோ வேண்டாம் ..
அடித்துச் செல்லும்...
கரைத்த பாறை
உருட்டுக்கல்லோடு
நுரைத்துச் சீறும்.. ஆற்றிலோ..?
கண்டதும் வரும்..
காய்ச்சலும் வரும்....
களைத்த பயணமும்
கலந்த படிமமுமான
கடலலையோ...? எத்தனை பேர்
அழுக்கோ..
எட்டிப்போ... கால் அரிக்கும்..
திளைத்து... திணறி ..
திசைமாறி..
ஒதுக்கியதெல்லாம்
கருவறைக்குள் சென்றுதிரும்பி
கைகூப்பி உறிஞ்சும்போது
புனிதப்பட்டுப்
போகிறதென்றால்....
எப்படி நிறைந்திருக்க முடியும்
எங்கும் கடவுள்....?

