நான் நல்லவன் இல்லை 2 - சந்தோஷ்

வணக்கம்..!


கண்ணகி.....!

கண்ணகி கற்புக்கரசியா ? எப்படி.. ? எப்படிங்க கண்ணகி கற்புக்கரசியாக முடியும் ?

ஆ... ஊ... லபோ திபோ என்று கலாச்சார கம்பு, கடாப்பாரை , எழுத்து ஆயுதம் எடுத்து என் மீது பாயத்தொடங்காதீர்கள். சற்று பொறுங்கள்.
உண்மையில், இந்த கேள்வியை நான் கேட்ட மறுநொடியில் ஒரு வேகமெடுத்து தமிழுணர்வுடன் உங்கள் மனதில் என்னை மோசமாக சித்திரித்து இருப்பீர்கள்.


--கண்ணகி சிலைதான் இங்குண்டு
---சீதைக்கு தனியா சிலையேது

அப்படீன்னு ’காதலன்’ திரைபடத்திலுள்ள ஒரு பாடலில் கவிஞர் வைரமுத்து கேட்டாரே... அதே கோணத்தில் நான் இதை கேட்கவில்லை.

****சிலப்பதிகாரம் , மிக சிறந்த கற்பனைவாதியின் பிரம்மாண்ட படைப்பு. . அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள், பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். பல உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது. என்றளவில் இக்காப்பியத்தை வணங்குகிறேன். மதிக்கிறேன் .தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூல் சிலப்பதிகாரம். அதில் வரும் பாத்திரங்கள், பாத்திரங்களின் சம்பவங்கள் கற்பனையே என்பது என் பகுத்தறிவில் எழும் சந்தேகமும் வாதமும் ஆகும் *****

அப்படைப்பின் நாயகன் கோவலன் , மாதவியுடன் மதிமயங்கி..எல்லாம் இழுந்து.. வெறும கையுடன் திரும்பும் போது , ஆத்திரப்படாத கண்ணகி.. தன் கணவனை தவறான தீர்ப்பினால் கொன்ற பாண்டிய மன்னனை கேள்வி கேட்டே சாகடிக்கிறாள். கோபம் அடங்காத அவள் மதுரையையும் எரிக்கிறாள். இங்குதான் என் கேள்வி எழுகிறது...!

ஏனென்றால் நான் நல்லவன் இல்லை. உங்களைப்போல...!

தவறிழைத்தவன் பாண்டிய மன்னன். ஆனால் எரிக்கப்பட்டதோ மதுரை. இங்கே கண்ணகி தன் சுயநலத்தினால் ஒர் ஊரையே கொளுத்தி எரித்து இருக்கிறாள் எனும்போது கற்பு என்பது இங்கே எங்கிருக்கிறது. ?
** கோவலன் மாதவியிடம் சென்று, திரும்பி வந்த வரை.. வேறு எந்த ஆடவனையும் மனதால் கூட நினைக்காத கண்ணகி கற்புக்கரசிதான்..என்று நீங்கள் உரக்க கத்துவது கூட என் காதில் விழுகிறது. . ** ஆக, ஒழக்கம் என்பது கற்பு என்றால்... மதுரையை எரித்தது எந்த விதத்தில் ஒழக்கமானது. ?

கற்பு என்பது உடலை சார்ந்த விடயமா? இல்லை. மனதை சார்ந்த விடயமா.. ? ஆம் எனில் என்னிடமிருந்து சில கேள்விகள் எழும். இல்லை எனில் என்னிடமிருந்து பல கேள்விகள் வரும்.

ஏனென்றால் நான் நல்லவன் இல்லை.

”இல்லை நீ கோமாளித்தனமாக கேள்வி கேட்கிறாய்.. கற்பு என்றால் கற்புதான். அது பெண்களுக்கு மட்டும் தான். ”என இந்நேரம் என்னை நீங்களும் கண்ணகியின் அதே ஆக்ரோஷத்தில் எரிக்கும் பார்வையில் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். என்னை மேலும் எந்த கேள்வியையும் கேட்கவிடாமல் தடுத்து.. கலாச்சாரம், விழிமியம்.. என்று என் கேள்வி காட்டாற்றுக்கு தடைப்போட யோசித்துக்கொண்டிருப்பீர்கள். ஆனாலும் என் மனதில் எழும் எதையும் நான் கேட்பேன். ஏனெனில்

நான் நல்லவன் இல்லை. ஒரு வட்டத்திற்குள் சிக்கிகொண்டிருக்கும் உங்களில் சிலரின் பார்வையில்...!

“இவன் பெரிய புத்திசாலி.. கட்டுரைன்னு பேருல எங்களை முட்டாளாய் பார்க்கிறான் “ எனவும் உங்களில் சிலர் என்னை வறுத்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்?. நான் எப்போங்க சொன்னேன். நான் பெரிய புத்திசாலின்னு. ??? நான் சின்ன புத்திசாலி..!

”அந்த காலத்தில் எழுதப்பட்ட காப்பியத்தை அரையும் குறையுமாக படித்து, நாகரீக பரிணாமடைந்த இந்த காலத்தில் நீ கேள்விகளை அடுக்கிறாய்..?அட .... சிலப்பதிகாரம் தான் கற்பனைன்னு சொல்லிட்டே இல்ல. அப்புறம் எதுக்கு உமக்கு இந்த நையாண்டி கேள்விகள் எல்லாம். வேறு வேலையை பாரு”ன்னு கூட உங்களில் சிலர் கேள்வி எழுப்பலாம்.

நான் எப்போ நையாண்டியா கேள்வி கேட்டேன்.?? நான் ஒரு கிறுக்கன் . முட்டாள் தனமா ஒருசில கேள்விகள் முன் வைத்தேன். தெரிஞ்சா விளக்கம் சொல்லுங்க. இல்லைன்னா விடுங்க தோழர்களே...!

” ஐம்பெரும் காப்பியத்தில் ஒரு காப்பியத்தை நீ இழிவுப்படுத்த முயலுகிறாய் . நீயெல்லாம் எழுத்தாளனா ? “ எனவும் என் மீது அபாண்டமாக குற்றச்சாட்டவும் உங்களில் பலர் பொங்கி எழுவீர்கள் தானே? . கிட்டதட்ட தமிழின துரோகி என்ற பட்டமெல்லாம் கூட என்மீது திணிக்க படலாம். இளங்கோ அடிகளார் எழுதினார் என்பதற்காகவே.. ஐம்பெரும் காப்பியம் என்பதற்காகவே கண்ணகியை கற்புக்கரசி என்று சொல்லும் நாம்.. நம்முடன் நடமாடும் எந்த ஒரு பெண்ணையும்.. கற்புக்கரசி என்று அழைப்பதில்லை. பெருமைப்படுத்தவும் முன்வருவது இல்லை.

எந்த ஒரு அரசியல்வாதியும் அவரவர் மனைவிக்கோ. சகோதரிக்கோ, தாயாருக்கோ சிலை வைத்திடவில்லை. கற்பு என்பது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. அதை இன்னும் ஏன் சிந்தையில் சிக்க வைத்து நம் பெண்டிரை பாடாய் படுத்த வேண்டும். இந்த நோக்கத்தில் எழும் என் சிந்தனை தவறாகவும் இருக்கலாம். ஆனால் நான் எப்போது தமிழ் இன துரோகி ஆனேன். ஒரு காப்பியத்தை விமர்சனம் செய்தால் நான் துரோகியா ? விமர்சிப்பவர் எல்லாரும் துரோகி.. என்றால் என்னை விமர்சிக்கும் நீங்கள் ......? துரோகிகள் தானே ???

” நீயும் தானே கண்ணகி கண்ணகி என்று படைப்புகளில் பயன்படுத்திருக்கிறாய்.. நீ இதை சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது. “ எனவும் உங்களில் சிலர் என்னை நோக்கி கைநீட்டலாம். ஊரோடு ஒத்து வாழ்கிறேன். ஒவ்வாதுப்போது எதிர்த்து நிற்கிறேன். எனை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது எனவும் நான் கேட்பேனே....?

ஏனென்றால் நான் நல்லவன் இல்லை.. உங்களில் சிலரை போல...!!

இப்படிதான் .. இப்படியே தான்..........! என்னிடமிருந்து ஒரு கேள்வி.. ஒரு சந்தேகம்... ஒரு தவறு .. ஒரு பிழை என எது நிகழ்ந்தாலும்.. அறிவிழுந்து அதட்டுவதற்குதான் முன்னுரிமை கொடுக்கிறீர்களே தவிர.. சிந்தித்து நிதானித்து என்னிலிருந்து உங்கள் பார்வையை செலுத்தி ஆராய்வதே இல்லை.

நான் இப்படித்தான் என்று நீங்களே முடிவு செய்துக்கொண்டு.. அயோக்கியன் என்றும். நல்லவன் என்றும், கெட்டிக்காரன் என்றும்.. பெண் பித்தம் பிடித்தவன் என்றும், விளம்பர ப்ரியன் என்றும் இன்னும் பல என்றும்களாக என்னை என் குணத்தை, என் நடத்தையை விமர்சிக்க உங்களுக்கு எந்த சட்டம் அதிகாரம் கொடுத்தது நல்லவர்களே ??? என் மீது தீர்ப்பு சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரமிருக்கிறது நீதிபதிகளே... ?

இப்படி திமிராகவும் கேள்வி எழுப்புவேன். ஏனென்றால் நான் நல்லவன் இல்லை.

என் மீது கோபம் வந்தால்.. காழ்ப்புணர்ச்சி எழுந்தால்.. என்னை பழிவாங்கும் தருணம் அமைந்தால் என்னை அநாகரீகமாக திட்டி தீர்க்க உங்கள் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளில் நஞ்சுகளை கலந்து, கோபத்தில் , நிலைத்தவறி என் மீது கொடுந்தீயென தெளிக்கிறீர்கள். அந்த நஞ்சு வார்த்தையில், அந்த தீ சொல்லின் அனலில் மனமுடைந்து, விரக்தியடைந்து... , இந்த உலகத்தை வெறுத்து .. எந்த குற்றத்தையும் செய்ய துணிந்த சமூக குற்றவாளியாக நான் மாறிவிட்டால்................ மாறியிருந்தால்.....??????

சமூக குற்றவாளியை உருவாக்கிய சமூக காரணியாக நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்வீகளா ???

உங்கள் முகத்தில் பூசிக்கொண்டிருக்கும் “ நல்லவர் ” அரிதாரத்தினை அழித்துவிட்டு உண்மையை உரக்க ஒத்துக்கொள்வீகளா ? நீங்களாக நானிருந்தால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

ஏனென்றால் “ நான் நல்லவன் இல்லை “



இங்கே நீங்கள் என்பது நானாகவும் இருக்கலாம்
நான் என்பது நீங்களாகவும் இருக்கலாம்.

இந்த கட்டுரையில் “ நான் “ என்ற சொல்லின் அழுத்தத்தையும் அர்த்தத்தையும் புரிந்துக்கொள்ளுங்கள். அவசரப்படாதீரகள் நண்பர்களே...!



நான் நல்லவன் இல்லை.. இப்போதும் எப்போதும்............!


( தொடர்ந்து எழுதுகிறேன் . தொடரும். )



-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (27-Dec-14, 11:19 am)
பார்வை : 440

மேலே