திரைப் பறவை 6
குதிரையும் தொப்பியும்..... பாலைவனமும்... பறந்து விரிந்த தூரமும்.... எனக்குள் எப்போதும் ஒரு வித கிளர்ச்சியை தூவிக் கொண்டே இருக்கும்..... அதற்க்கு காரணம் எப்போதோ நான் பார்த்த ஜெய்ஷங்கர் அவர்களின் சினிமாவாகக் கூட இருக்கலாம்... அப்படி ஒரு குதிரைப் படம் தான் செஜியோ லியோனின் "குட், பேட் அண்ட் அக்லி"(1966) என்ற ஆங்கிலப் படம்... படம் பார்க்க பார்க்க நானும் ஒரு குதிரையில் அவர்களுடன் பயணிக்கத் தொடங்கினேன். ஒரு நல்லவன்.. ஒரு கேட்டவன்.. ஒரு மோசமானவன்... மூனு பேர்.. ஒரு புதையல்... அதைத் தேடி ஒரு பயணம்.... அவ்ளோ தான்..கதை..... ஆனா திரைக் கதை.... சும்மா.. கலங்கடிக்கற தோட்டாக்கள்....
துப்பாக்கி இல்லாத கவ்பாய் சினிமாக்கள் எப்படி சுவாரஷ்யமாக இருக்கும்.... இதிலும் நிறைய துப்பாக்கிகள்... நிறைந்த அடர்த்தியான... ஒரு குதூகலத்தை படம் பார்க்கும் போது உணர முடியும்....ஒரு காட்சி.... துப்பாக்கி கடையில் துப்பாக்கியை எடுத்து விலை என்ன என்று கேட்கும் போது கடைக்காரர் ஒரு விலை சொல்கிறார்... சற்று துப்பாக்கியை அப்படி இப்படி பார்த்து விட்டு.. தோட்டாக்கள் வாங்கி பிட் பண்ணி விட்டு துப்பாக்கியை கடைக்காரர் முன்னால் நீட்டி.. இப்போ என்ன விலை என்று கேட்கிறார்.
கண்கள் வெளியே வந்துவிடும் அளவுக்கு பார்த்து விட்டு, கடைக்காரர்.. ப்ரீ என்று சொல்லும் போது உங்களால் கிளாப் பண்ணாமல் இருக்கவே முடியாது.. இது தான் இயக்குனரின் பிளேஸ்......
துப்பாக்கிகள் பொதுவானவை....காட்சிகள் போல விரல்களின் விழிகளில் இருக்கிறது நல்லதும் கேட்டதும்....புரவியின் தோற்றம்.. வேகம் எப்போதும் நம்மால் சிலாகித்துக் கொண்டு இருக்கும் ஒரு உணர்வு... குதிரையை விரும்பாதோர் கொஞ்சமே....அது தூர தேசத்தை கிட்ட கொண்டு வரும் குளம்புச் சுவட்டின் சித்திரம்...பெரும் வியப்பின் தூசுகளை... கண் முன்னே கலையாக்கும், அற்புதக் கடிவாளத்தின் சிறகு....படம் பார்க்கும் போதே, பயணிக்கும் பாதை... ஒரு புதையலுக்கு கொண்டு செல்லும் மாய கண் பிறழ்வை... மூளைக்குள் தட தட வைக்கும்.
இருக்கையின் நுனி கூட விசிலடிக்கும், உலகம் மறக்கும் செயல்... திரைக்குள் நிகழ்த்துவதுதான்.. சினிமாவின் உச்சம்.......சினிமா என்பது உலக மொழி.... அது யாவர்க்கும் பொது.... பொதுவான சித்தாந்தம்... திரை அரங்கில் மட்டுமே... வேற்றுமை கிடையாது.... எந்த மதமும் அங்கு ஒளிதான்... எந்த சாதியையும் அங்கு இருள் தான்....சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் என்று பாடும் கணம் ஒன்றில் சீட்டில் பின்னோக்கி ஆழமாய் சரியும் நிகழ்வு நம்மில் எத்தனை பேருக்கு நடந்திருக்கிறது.....குதிரையில் என் காதலன் வந்து எனைத் தூக்கி செல்லும் காட்சி என்று எத்தனை பெண்கள் இன்றும் சினிமாவை நிஜமாக யோசிக்கிறார்கள்....
சினிமா சில பொது பிரம்மாண்டமாய் விரிகிறது.. சில போது... சிறு பறவையின் சிறகாய் நீள்கிறது.... குளத்தில் போட்ட கல்லுக்குள் இருக்கும் ஈரம் யாருக்கு தெரியும்.. புரியும்...ஆனால் அது உண்மையாய் இருக்கிறது.....உண்மையைத் தேடும் பாதையில் தெரியும் கல்லெல்லாம் குளத்தில் மூழ்கியதில் விட்டகுறை தொட்டகுறை என்றே எண்ணும் எனது சிறு பிள்ளைத் தனமான சிணுங்கலும் சிரிப்பும்.... கூட அழுகையும்....
அப்படி தோள் மாற்றி வைக்கப் பட்ட சுமையாகவே தகாசி கிட்டானோவின் "கிகுஜிரோ"(1999) என்ற ஜப்பானிய படத்தை நான் காண்கிறேன்....இந்த படம் விளையாட்டுத் தனமாகவே வாழ்வின் வேரை மெல்ல ஆட்டிப் பார்க்கும் காட்சி அமைப்புகள் கொண்டவை.. தன் தாயைத் தேடி செல்லும் ஒரு சிறுவன் பற்றிய கதை... கூட செல்லும் வழிகாட்டியாக தகாசி கிட்டானோவே தான் நடித்து இருப்பார்.... அவர்கள் இருவரும் சில நேரங்களில் அவர் சிறுவனாகவும் சிறுவன் அவராகவும் மாறி வாழும் போது வாழ்வின் பல புதிர்கள் மீண்டும் முடிச்சிட்டுக் கொள்வதைத் தடுக்க முடியவில்லை...வழியெங்கும் வாழ்வின் பிம்பங்கள்.. தன்னை எதுவாகவும் நீட்டித்துக் கொண்டே கடந்து செல்வதை அவர்களோடு நாமும் காண முடிகிறது..... சொல்லொனாத் துயரத்தில் வழியும் கடைசி துளி புன்னைகையை வாய் நிறைய கவ்விக் கொள்ளும் ஐஸ் கிரீமில்.... கடந்து விட முடியாமல் தவிக்கும் சிறுவனின் தோள்களில் எத்தனை பெரிய சுமை... ஒரு பாறாங்கல்லாய் கனக்கும் சிறு மனதுக்குள் ஆயிரம் பறவைகள் சிறகு தேடித் தவிப்பதை... காணும் நிமிடங்களில்... சிதிலமடைந்த சிறு பாலமாய்... ஒரு ஆற்றுக்கு மேலே தள்ளாடாமல் இருக்க முடிவதில்லை...
தேடிக்கொண்டே நகர்வதில்.. எதையோ தொலைத்துக் கொண்டே அந்த சிறுவன் போவதாகவே எனக்கு படுகிறது.... தேடுவதிலும் கிடைப்பதிலும்... இடையே மாய தத்துவமாய் ஒரு தொலைதல் இருப்பதை உள் வாங்க இந்த ஒரு பிறவி போதாது என்பதை... நான் புரிந்து கொள்ளும் முன்னே படம், அவன் தேடும் அம்மாவிடம் போய் நின்று விடுகிறது.....அதற்கு பின்.... அங்கு பார்வையாளன் காணாமலே போய் விடுவதும் சிறுவனாகவே ஆகி விடுவதும்.... திரை செய்யும் மாயம்..... சிறகு கொய்யும்.... காயம்...... காயங்கள் இல்லாத யோசனைகள் ஏது..... நான் தேன்மொழியை யோசிக்கும் தருணங்கள் எல்லாமே.. எனக்குள் ஒரு கோடி தீக்களைக் கொட்டிவிடும் காலத்தின் தண்ணீர், பின் கொப்புளங்களாய் நின்று விடும் தேகம் கொண்ட உயிரில்.... பின்னோக்கிய நினைவுகளாகவும்............
வெள்ளியங்கிரி, ஒரு நாள் பத்திரிகை கொண்டு வந்தான்.. அவன் திருமணம் குறித்து.... நான் கேட்டுக் கொண்டே வந்தேன்.... அவன்.. அவள்.. அவன் அவள்.. இவன்.. இவல்... அப்போது...... தேன்மொழி..... என்ற இடத்தில் அவன் என்னைப் பார்த்து அதிர்ச்சியோடு நின்றான்.... புரியாமல் பார்த்த எனக்கு பூகம்பம் கொட்டினான்... "மாப்ள... தேனு இறந்து ரெண்டு வருஷம் ஆச்சுடா.... உனக்கு தெரியும்னு நினைச்சேன்...."- அதன் பிறகு அவன் பேசியது நினைவில் இல்லை.... அடித்து பிடித்து தேடு தேடு என்று தேடி.... புள் முளைத்துக் கிடந்த மயானத்தில் மண்ணாய் போன குழிமேட்டில் நின்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கடைசியில் கதறி அழுத பின் யோசிக்கத் தோன்றியது........இறந்தவர் மீண்டும் நம்மோடு நம் வீட்டில் இருந்தால் என்ன... என்று.. உடனே ஒரு சிறுகதை எழுதினேன்.... அவள் மீண்டும் ஆன்மாவாக (உடலின்றி).வீட்டில் இருப்பது போலவும்.. ஊரில் உள்ள அனைவரும் அவளை வந்து வந்து பார்ப்பது போலவும்... நண்பர்கள் தோழிகள் எல்லாரும் அவளிடம் பேச பயந்து பின் மெல்ல மெல்ல பேசுவது போலவும்... கதை போகும்..
நல்ல சமையல் கொண்ட நாட்களில் அவளை பார்க்க வைத்து வீட்டில் உள்ளவர்களால் சாப்பிட முடியாமல் போகும் போது அதற்காக அவள் வருந்துவதும்... ஒரு புது ஆடையை அவளால் அணிய முடியாமல் போவதாகவும்... தீபாவளி அன்று பட்டாசு... பொங்கல் அன்று கரும்பு என்று எதையும் அவளால் தொட முடியாமல் போவதாகவும்.... இரவினில் சொந்த அம்மாவே அவளைக் கண்டு பயந்து நடுங்குவதாகவும்.... கதை போகும்..
வீட்டில் இருக்கும் சந்தோசம் மெல்ல மெல்ல காணாமல் போகும்.. தருணத்தை அவள் புரிந்து கொண்டு அவளாகவே வீட்டை விட்டு அழுது கொண்டே போவதாக கதையை முடித்திருப்பேன்.... போன வாரம் பிசாசு படம் பார்க்கையில் என் "தேன்மொழி" கதையின் நியாபகம் வந்தது.... ஆங்காங்கே அந்தக் கதையின் சாயலோடு.. ஆனால் வேறு வேறு முடிச்சுக்களால் ஆன திரைக்கதையைக் கண்டு மிரண்டு போனேன்.... மிஷ்கின் எனும் மாபெரும் படைப்பாளியை இந்த சினிமா இன்னும் உள் வாங்கவில்லை என்றே தோன்றுகிறது..... எத்தனை அருமையான திரைக்கதையை சாத்தியப் படுத்தியிருக்கிறார்.... இதுவரை தமிழ் சினிமா பார்த்த பேய்கள் இப்படி இருந்தது இல்லை.....
பிசாசின்.. தேடல்... அழுகை.. காதல்.... பாசம்... உயிர்ப்பு... தாபம்.... கோபம் என பயணிக்கும் ஒவ்வொரு காட்சியிலும்... நீங்கள் இருக்கையின் நுனிக்கு வருவதை எந்த பிசாசும் தடுக்கவே முடியாது....
உயிர் போகும் தருணத்தில் முளைக்கிறது அவளுக்கான காதல்.. தன்னைக் காப்பாற்ற போராடும் கதை நாயகனின் வீட்டிலேயே பிசாசாகி தங்கி விடுகிறாள்.. அவனை பியர் குடிக்க விடாமல் தடுப்பதும்.. அவனின் அம்மாவுக்கு உதவி செய்வதும்.... தன் தந்தை உண்மை அறிந்து வந்து வந்துடுமா.... நம்ம வீட்டுக்கு போய்டலாம் என்று கதறும் காட்சியில் மெல்ல பிசாசின் கைகள் நீண்டு வந்து தன் தந்தையின் கன்னத்தை ஆதரவாக பற்றும் போதும்.... ஆன்மாக்களின் மீது புது அர்த்தம் தெளிக்கப் படுகிறது.....ஆன்மாக்கள் அழிவதில்லை என்ற கூற்று நிஜமோ என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு அழுத்தம் நிறைந்த பாத்திரப் படைப்பு..
பிசாசு... பறந்து வரும் காட்சியில் நீங்கள் கூச்சல் இடாமல் இருக்கவே முடியாது.. சில்லிடும் பார்வையில்.. தலை விரி கோலமாய் கவிதை எழுதி செல்லும் பிசாசின்... உறுமலில்.... காதல்.. அவர்கள் பாஷை பேசுகிறது...... இசை இல்லாத பேய் படம் ஒன்றுமில்லை எனபது போல... இசையே கதை சொல்லும் பல இடங்களில்... இசையே பிசாசாகவும் மாறி இருக்கிறது..... புது மொழி பேசும் மிஷ்கினின்... திரை... எனக்குள் அமானுஷ்யங்களின் கதவை திறந்து கொண்டே இருந்தன.... நான்.. பிசாசின் விரல் பிடித்து திரிய விரும்பிய மணித் துளியில் என்னோடு தேன்மொழி அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தாள்..... நாங்கள்.... திரைக்குள் காணாமல் போகும் நிமிடங்களில்...... திரைக்குள் இருந்த பிசாசு மெல்ல புன்னகைத்துக் கொண்டு பறப்பதை.... நீங்களும் காணலாம்....
திரை விரியும்....
கவிஜி