உணவு - சித்ரா
காசில்லா நேரம்
கடைந்த தயிரில்
கடுகு தாளித்து - அது
கையில் வெடித்து
காயப் படுவதும் வீரம்தான்
கோபம் வந்தும்
கோபித்துக் கொண்டும்
குழியில் குழம்பூற்றி - அதை
குழைத்துப் பிசைந்து
கௌரவம் மறப்பது அழகுதான்
கையோடு சேர்ந்த
கல்யாண வாழ்வில்
கணவனின் தட்டில் - அவன்
கைமணம் தேடும்
காதல் வாசம் சுகம்தான்
வெளிநாடு சென்று
வெகுநாள் கழிந்து
வீட்டிற்கு வந்து -பல
வகையான உணவை
வாழையில் உண்ணுவது வாழ்க்கைதான்
'பரபர'ன்னு கிளம்பி
பள்ளிக்குப் போய்
படித்து களைத்து - வீட்டிக்குப்
பறந்து வந்து
பசியில் சாப்பிடுவது பரவசம்தான்
ஏங்கி தவிக்கும்
ஏழைக்குக் கொஞ்சம்
எடுத்துக் கொடுத்து- பசி
ஏக்கம் போக்கும்
எண்ணம் நமக்கெல்லாம் வேண்டும்தான்
அரைச்சாண் வயிற்றிற்கு
அதிகமான உணவை
அண்டாவில் செய்து - அதை
அன்றாடம் வீணடிப்பது
அனைவரும் செய்யும் பாவம்தான்..
உணவுதான் விருந்து
உணவுதான் மருந்து
அதைநாம் மறந்து
வீணடிக்கலாமா?